குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, June 30, 2020

நிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை


அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தற்போதைய சூழலில் பெரும்பான்மையான வெளி நாடு வாழ் இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி விடலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். எனக்கு வரக்கூடிய அழைப்புகள், அவர்கள் இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கின்றனர் என்று சொல்கின்றன.

எதார்த்தம் என்பது இதுதான்.

வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு உண்மை இப்போது புரிந்து இருக்கும். சொந்த நாடு என்பது சொந்த நாடுதான்.

அடியேன் பெரும்பாலான நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, லேண்ட் சீலிங், லேண்ட் அக்குசேசன், பாதை எடுப்பு போன்ற வகைகளுக்குள் சிக்காத விவசாய நிலங்களாகவும், வாஸ்துவுக்குள் இருக்கிறதாகவும், தண்ணீர் வசதி உள்ளதாகவும் பார்த்து, லீகல் பார்த்து ஆன்லைனில் அப்டேட் செய்கிறேன்.

நமது யூடியூப் சானல் www.youtube.com/c/GoldOnline



மேற்கண்ட இணைப்பில் நிலங்களைப் பற்றி விவரித்துள்ளேன். அவசியம் பாருங்கள்.

வெளி நாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க நல்ல அனுபவம் பெற்ற ஆலோசகரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தற்போது ஏகப்பட்ட கெடுபிடிகளை இந்திய அரசு விதித்திருக்கிறது.

என்னைப் போன்ற நிதி மற்றும் நில ஆலோசகர்களை அவசியம் தொடர்பு கொள்க. எனக்கு இதுதான் பணி. ஆகவே மிகத் துல்லியமான, சரியான, சட்ட விதிகளுக்கு உட்பட்ட ஆலோசனையை அவசியம் தருவேன்.

இனி வெளி நாடு வாழ் இந்தியருக்கு வந்த பிரச்சினையும், தீர்வும் பற்றிய செய்தியைப் பார்க்கலாம்.

டென்மார்க்க்கில் வசித்து வந்த ஒரு வெளி நாடு வாழ் இந்தியர் ஒருவர் டெல்லியில் ஒரு கடை ஒன்றினை வாங்கி, வியாபாரம் செய்ய முடிவெடுத்து, கடைகள் கட்டி வாடகைக்கு விடும் பில்டர் ஒருவரை அணுகி, விலை பேசி முழு தொகையினையும் வழங்கி விட்டார்.

ஆனால் அந்த ரியல் எஸ்டேட்காரர் குறித்த நேரத்திற்குள் கடையை அவரிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்து வந்திருக்கின்றனர்.

டென்மார்க்–காரர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். அங்கே ரியல் எஸ்டேட்காரர் வக்கீல் மூலம் ஆஜராகி, டென்மார்க்காரர் கன்ஸ்யூமர் கேட்டகரியில் வரமாட்டார் எனவும், அவர் கடையினை வியாபாரத்துக்காக வாங்குகிறார் என வாதிடுகிறார்கள். தீர்ப்பு ரியல் எஸ்டேட்காரருக்கு ஆதரவாக கிடைக்கிறது. பின்னர் டென்மார்க்காரர் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தில் (NCDRC) வழக்குத் தொடுக்கிறார். அங்கேயும் ரியல் எஸ்டேட்காரரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. அதாவது டென்மார்க்காரர்  நுகர்வோர் அல்ல என்று வழக்கு திசை மாற்றப்படுகிறது.

வேறு வழிகள் இன்றி எதிர்காலத்தில் மாநில ஆளுநர்களாக வரப்போகும் வராமலும் போகும் நீதிபதிகள் பரிபாலனம் செய்யும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் டென்மார்க்காரர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. எதிர்பாராத சூழ் நிலைகளில் ஒரு சில வழக்குகள் சில விதிகளை மாற்றி விடும் போக்குடையவை. இதைப் பற்றி பிரிதொறு நாளில் எழுதுகிறேன்.

அவ்வாறு நடந்த ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அதாவது கன்ஸ்யூமர் புரொடெக்‌ஷன் ஆக்ட் 1986- செக்சன் 2(1)d  சட்ட விதியின் படி, சில சூழல்களில் கமர்ஷியல் நோக்கத்திற்காக எதை வாங்கினாலும், அது நுகர்வோர் எனும் வகைக்குள் அடங்கும் என்பதால் டென்மார்க்காரரும் ஒரு நுகர்வோர் தான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இப்போது டென்மார்க்காரர் நுகர்வோர் என்று உறுதி செய்யப்பட்டார். இனி அடுத்த வழக்கு தனி.

இந்த வழக்கு சுவாரசியமான ஒன்று. தற்போது பி.எம்.கேர் ஃபண்ட் பற்றி சர்ச்சைகள் இருக்கின்றன அல்லவா? அதைப் போன்றது தான் நுகர்வோர் - கமர்ஷியல் வழக்குகள். பி.எம்.கேர் ஃபண்ட் வெகுசுவாரசியமானது. அதைப் பற்றி பின்னர் ஒரு நாளில் எழுதுகிறேன்.

அந்த டென்மார்க்காரர் செய்த தவறென்ன? கடை வாங்க ரியல் எஸ்டேட்காரரிடம் விலை பேசி மொத்த பணத்தையும் செலுத்தி விட்டார். ஆனால் குறிப்பிட்ட ஒப்பந்த நாளுக்குள் கடையினை ஒப்படைக்கவில்லை. ஒப்படைக்க உத்தரவு போடுங்கள், எனக்கான தீர்ப்பினை வழங்குங்கள் என கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டில் நடந்ததோ இவர் நுகர்வோரே அல்ல என்ற வழக்கு. பொருள் இழப்பு, நேர விரயம், வழக்குச் செலவுகள், மன உளைச்சல் என அவர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார். ஆகவே இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினாலும், நிலம் வாங்க விரும்பினாலும் தக்க ஆலோசனை பெற்ற பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்லவும். இந்திய இணையதளச் செய்திகள் அப்டேட் செய்யப்படுவதில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

புரிகிறதா உங்களுக்கு?

இதைப் போன்றதொரு சிக்கல்களில் சிக்கி விடாமல் இருக்க எம்மைப் போன்றோரை அணுகி (கொஞ்சம் செலவாகும்) ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பின்னர் இன்னொரு விஷயம் கூட இருக்கிறது.

எங்களது வியாபாரத் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் ஸ்பெயின் மற்றும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அடியேனும் அவர்களில் ஒரு அங்கம். மேற்கண்ட நாடுகளில் நிலமோ அல்லது முதலீடோ செய்ய விரும்பினால் அழையுங்கள். இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, முறைப்படி நிலங்கள் பதிவு செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Monday, June 29, 2020

தர்மத்தின் பாதையினை யார் அறிவார்?


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாகிப் போகின மீண்டும் எழுத. கொரானா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்தேனல்லவா, அதை ஈடுபடுத்தும் விதமான ஏதாவது பொருளீட்டி விடலாமென்ற முனைப்பில் பல வேலைகளைச் செய்திருந்தேன். தமிழகத்தில் கொரானா சமூகப் பரவல் அதிகமாகியதால், அவைகள் மீண்டும் முடங்கிப் போயின.

காலம் எல்லாவற்றுக்குமான பதிலை தன்னுள் வைத்திருக்கும் என்ற தத்துவத்தை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், ஆளும் ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையினால் இந்தியர்கள் அடையும் கொடுமைகளை எண்ணி வேதனைதான் அதிகப்படுகிறது.

சார்பற்ற நிலையில் யோசித்துப் பாருங்கள்.

திறமையற்ற ஆட்சித்திறனாலேதான் இந்தியாவில் இவ்வளவு இழப்புகளும் உண்டாகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா?

குஜராத்தில் மதக்கொலைகள் நடைபெற்ற போது வாளாயிருந்தார் அன்றைய சி.எம்.மோடி என்பதால் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்த சம்பவத்தை நாமெல்லாம் படித்திருக்கிறோம். அதன் பிறகு அவர் சீனாவை நோக்கி தன் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டார். இதுவரை எந்த ஒரு இந்திய தலைவரும் மேற்கொள்ளாத அளவு, சீன பயணங்கள் சென்றார். சமீபத்தில் கூட சீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் சீன அதிபதிருடன் சந்திப்புகள் நிகழ்த்தி பல வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். ஆனால் தற்போது நடந்து வருபவைகள் என்ன? சீனாவை நம்பிய பிரதமருக்கு ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன?

அதுமட்டுமல்ல, நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கொரானா தொற்று பற்றி பேசும் போது, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றுச் சொல்லி இருக்கிறார் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதிகார பலமும், ஆட்சியும், அசுரபலமும் கொண்ட ஆட்சியாளர்கள் இன்று கைபிசைந்து நிற்கும் அவலம் ஏன் உண்டானது? என்ன காரணம்? இதைப் பற்றி அலசி ஆராய பல ஆட்கள் இருக்கின்றார்கள். அவரவர் சிந்தனைகளுக்கு ஏற்ப பல வழிகளில் அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளை வைத்து ஆராய்வார்கள் பெரும்பாலானோர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சுவாரசியமான அந்த காரணத்தைக் காணலாம் வாருங்கள் என்னுடனே!

இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

நம் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமரான வரலாற்றினை மனதுக்குள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். அதே போல தமிழக முதலமைச்சர், முதலமைச்சரான வரலாற்று  நிகழ்வுகளை ஒரு நிமிடம் யோசித்து விடுங்கள்.

கட்சி சார்பற்ற, மதச் சார்பற்ற நிலையில் மனதை தெளிவாக வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். செய்து விட்டீர்களா? இனி தொடர்ந்து படியுங்கள்.

நேர்மையாக இருக்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், எவருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை, எவரையும் கொடுமைப்படுத்தியதில்லை, எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படித் துன்பங்களையே தொடர்ந்து செய்கிறான் என்று கவலைப்பட்டிருக்காத மனிதர்களே இப்பூமியில் இருக்கமுடியாது. அதில் நீங்களும் ஒருவர்தான் என்பதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லையே? நீங்களும் ஒருவர் தான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

இரவு கவிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே வந்த ஒருவர், எதிர்பட்ட சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கே ஏற்கனவே இருவர் தங்கி இருப்பதைப் பார்க்கிறார்.

”நானும் உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறார். இருவரும் சம்மதிக்கின்றார்கள்.

இரவு ஆகிறது. பசி நேரம். புதிதாக வந்தவர், ”எனக்குப் பசியாக இருக்கிறது. அவசரத்தில் உணவு கொண்டு வர மறந்து போனேன். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

முதலாமானவர் ”என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன” என்றும், இரண்டாமாவர் ”என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன” என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர், எட்டு ரொட்டிகள் உள்ளன, சமமாகப் பிரித்து உண்டால் நன்றாக இருக்குமே, எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர் ”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டாக்கினால் மொத்தமாக இருபத்து நான்கு ரொட்டித் துண்டுகள் வரும். ஆளுக்கு எட்டுத் துண்டுகளாக உண்ணலாம்” என்று சொல்கிறார். மூவரும் அதன்படியே செய்து, உண்டு விட்டு உறங்கினர்.

மறுநாள், புதிதாக வந்தவர் மீண்டும் தன் பயணத்தை துவக்கிய போது இருவரிடமும் எட்டு தங்க காசுகளைக் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முதலாமாவர் ”ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்றார். 

இரண்டாமாவர் ”அதெப்படி சரியாக வரும்? நான் தானே அதிகம் கொடுத்தேன்? எனக்கு ஐந்து, உங்களுக்கு மூன்று என பிரித்துக் கொள்ளலாம்” என்றார். முதலாமாவரோ, ”என்னிடம் குறைவாக ரொட்டிகள் இருந்த போது கூட, நான் அவருக்கு உணவு கொடுத்தேன் அல்லவா? இருவரும் சேர்ந்து தானே அவருக்கு உணவு கொடுத்தோம். அவரின் பசி ஆற்றியதிலே இருவருக்கும் சமபங்கு உண்டுதானே? ஆகவே சமபங்காக பிரித்துக் கொள்ளலாம்” என்றார்.

எட்டு காசுகளைப் பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்சினை வந்து விட்டது.

மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு மூன்றும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஐந்து தங்க காசும் பிரித்துக் கொடுப்பது சரியா?

மூன்றாவதாக வந்தவரின் பசிக்காக இருவரும் சேர்ந்து உணவு கொடுத்ததற்தாக தானத்தில் அளவு வித்தியாசம் பாராமல் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியா?

இந்த இரண்டு தீர்ப்புகளில் ஒரே ஒரு தீர்ப்புதான் சரி அல்லவா? அது எது என்று யோசித்துப் பாருங்கள். முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?

ஆம் நாமெல்லாம் இந்த இரண்டு தீர்ப்பினை மட்டும் தான் யோசிப்போம்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தர்மம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சினை அந்த நாட்டு மன்னனிடம் செல்கிறது. பிரச்சினையைக் கேட்டு மன்னன் குழம்பினான். அதே மனநிலையில் சென்று தூங்கிய போது, அவனது கனவில் அவன் வணங்கும் கடவுள் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.

மறுநாள் அரசவை கூடியது. இருவரும் தீர்ப்புக்காக மன்னன் எதிரில் வந்து நின்றனர்.

”மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஏழு காசும் கொடுக்கும்படி” மன்னர் தீர்ப்பு வழங்கினார். கூடியிருந்த சபையினருக்கு இந்த தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பினை மன்னர் வழங்கினார் என்று குழம்பினர்.

முதலாமானவரோ ”இது அக்கிரமமான தீர்ப்பு” என்றுச் சொன்னார்.

மன்னர் அனைவரையும் நோக்கினார்.

முதலாமானவரைப் பார்த்து, ”உங்களிடம் இருந்த ரொட்டிகள் எத்தனை” என்று கேட்டார்.

”மூன்று” என்றார் அவர்.

”எத்தனை துண்டுகளாக பிரித்தீர்?”

”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் பிரித்தேன்” என்றார்.

”ஆக உங்களிடமிருந்த மூன்று ரொட்டிகளைப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்திருக்கும். அதில் எட்டு துண்டுகளை நீங்களே சாப்பிட்டு விட்டீர்கள். ஒரே ஒரு துண்டை மட்டுமே புதிதாக வந்தவருக்கு தானம் செய்தீர்கள். ஆனால் இரண்டாமாவரோ ஐந்து ரொட்டிகளைப் பிரித்து, ஏழு துண்டுகளைத் தானம் செய்தார். அதன்படி உங்களுக்கு ஒரு தங்கக் காசு, அவருக்கு ஏழு தங்கக் காசு வழங்கும்படி ஆணையிட்டேன். தீர்ப்பு சரிதானே?” என்றார் மன்னர்.

நண்பர்களே,

தர்மம் வழங்கும் தீர்ப்பு உண்மை என்னவோ அதன்படிதான் இருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் செய்த தான தருமங்களின் படியே நடத்தப்படும். அதன் பலன்களே நமக்கு கிடைக்கும் அல்லவா? அதிக நற்பலன்களைச் செய்தவர்களுக்கு கடவுள் அதிகமாகவும், குறைவான நற்பலன்களைச் செய்தவர்களுக்கு குறைவாகவும் கிடைப்பதுதானே அறம்? தர்மம்? அதுதானே சரியாக வரும்.

கடவுள் அதிகாரத்திற்குப் பயப்படுவதில்லை. யார் என்ன நற்பலன்களைச் செய்திருக்கின்றார்களோ அப்பலன்களுக்கு ஏற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். பிரதமரானாலும் சரி, முதலமைச்சரானாலும் சரி அவர்களுக்கும் அவ்வாறே.

தர்மத்தின் தீர்ப்பு கட்சி சார்பற்றது. மதச் சார்பற்றது. என்றும் அழியாத உண்மையின் வழியில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

கடவுள் என்பவர் உண்மையானவர். அவர் எப்போதும் யாரையும் தண்டிப்பதும் இல்லை. கணக்கு வழக்குகள் பார்ப்பதும் இல்லை. மனித வாழ்க்கையின் சாரம் தர்மத்தின் பால் அமைக்கப்பட்டிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும் நடக்கும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் காரணம் நாமே….!

இல்லையென உங்களால் மறுக்க முடியுமெனில் எனக்கு எழுதுங்கள்.

வாழ்க நலமுடன்….!