குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, May 27, 2020

ஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை

அன்பு நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும்  வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காரில் ஒரு நீண்ட பயணம் சென்று வந்தேன். பல மாவட்டங்களை தாண்டிய பயணம். 

பயணத்தின் போது, தமிழகம் கொரானாவின் காரணமாக முடங்கி விட்டது தெரிந்தது. எல்லோருக்குள்ளும் உயிர் மீதான பயம் இருக்கிறது. 

கிராமங்கள் வழமை போல இயங்குகின்றன. கிராமங்களை ஒட்டிய முன்னேறிய ஊர்களில் கடைகள் திறந்திருந்தாலும், வியாபாரம் இல்லை.

என்னையும், என் நண்பர்களையும் நன்கு கவனித்துக் கொண்ட ஹோட்டலுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நேரத்தில். ஏனென்றால் எங்கள் மூன்று பேருக்காக இருபது பேர் பணி செய்தனர். அதை என்னால் மறக்க முடியவில்லை. 

எங்களுக்காக இந்தக் கொரானா நேரத்திலும் மதிய அறுசுவை உணவை தயார் செய்து, பரிமாறிய அன்பு நண்பருக்கு என் அன்பு நன்றிகள். எந்த ஒரு மாவட்ட எல்லையிலும் எங்களின் காரை நிறுத்தாமல், அனுமதித்த காவல்துறையினருக்கு நன்றிகள். முறைப்படி இபாஸ் பெற்றிருந்தோம்.

பெயர்களைத் தவிர்க்க பல காரணங்கள் உண்டு. 

இனி விஷயத்துக்கு வந்து விடுவோம்.

வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவருக்கு
எட்டாத புட்பம், இறைக்காத தீர்த்தம், இனி முடிந்து
கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தின் உள்ளே
முட்டாத பூசை அன்றோ குரு நாதன் மொழிந்தது வே.

படித்து விட்டீர்களா பட்டினத்தாரின் பாடலை. வார்த்தைகளைப் பிரித்திருக்கிறேன். அர்த்தம் உங்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக. இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால் கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார் என்பதுதான். அதைத்தான் பட்டினத்து அடிகளார் வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், இன்னொருவருக்கு கிடைக்காத பூ, நீர் இறைக்காத தீர்த்தம், கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் என்கிறார். அவரின் குரு நாதர் அவருக்கு உபதேசித்தது.

* * * 
இங்கு ஒரு அரசியல்:

பிஜேபியினர் பெரியாரை எதிர்ப்பதை விட்டு விட்டு, பட்டினத்து அடிகளையும், வடகரை சிவானந்த பரமஹம்சரையும் அல்லவா எதிர்க்க வேண்டும்? வடகரை சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் கோவிலே தேவை இல்லை என்கிறது. பிஜேபியினரின் எதிர்ப்பு இவர்களிடம் எடுபடுவதில்லையே ஏன்? 

பெரியார் திகவினர் இதையெல்லாம் கவனத்தில் வைத்து பதிலடி கொடுங்கள். அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும். எங்களுக்கும் பொழுது போகும். 
* * * 

சுவாமி சங்கரானந்தர் அவர்கள் எம் குரு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் குரு. அக்கா ராஜேஸ்வரியும், சாமியும், மனையாளும் ஆஸ்ரம் சென்று சுவாமியின் ஜீவசமாதியினைத் தரிசித்து அருளாசி பெற்று வரும் படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதன்படி குற்றாலத்துக்கும் சென்றிருந்தேன். சாலையில் நடமாட்டமே இல்லை. தங்குமிடங்களும், கடைகளும் மூடி இருந்தன. உலகம் இயற்கையோடு இயைந்து ஒடுங்கி இருந்தது போலத் தோன்றியது எனக்கு.

குற்றாலம் சங்கரானந்தா ஆஸ்ரமத்தின் நிர்வாகி பிரம்மஸ்ரீ அய்யா சிவராமகிருஷ்ணன் அவர்கள் சுவாமி சங்கரானந்தர் அவர்கள் எழுதிய ஞானத்தாழிசை விளக்கப் புத்தகத்தை வழங்கினார். 

திருத்தொண்டர் புராணத்தை பெரியபுராணமாக்கிய புண்ணிய ஆத்மாக்கள், மாணிக்கவாசகப் பெருமான் மனம் லயித்து, கடவுளைக் கண்ட ‘ஞானத்தாழிசை பாடல்களை” வசதியாக திருவாகசகத்திலிருந்து நீக்கி விட்டது வரலாற்றுத் துரோகம்.

அப்படியென்ன அப்பாடல்களில் மாணிக்கவாசகப் பெருமான் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஆம் அதே கேள்விதானெனுக்கும் அய்யா சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் உரையாடிய போது ஏற்பட்டது.

வீட்டுக்குத் திரும்பினேன். உடல் வலி, இருந்தாலும் எண்ணமெல்லாம் ஞானத்தாழிசை மீது மொய்த்தது. 

அன்பு நண்பர்களே,

உண்மைக்கு எப்போதும் அழிவில்லை. பொய் புனைவுகளோடு வரும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அதன் பொழிவு நீற்றுப்போய் போலி எனத் தெரிந்து விடும். உண்மையை எவரும் சொல்லால் விவரிக்க முடியாது. உணர வேண்டியது உண்மை. ஆனால் அது என்றும் மாறாதது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் உண்மைக்கு அப்படி இல்லை. ஏனென்றால் அதுவே மாற்றம், அதுவே உண்மை.  

எத்தனை பேர் சதிசெய்தாலும், உண்மை உறங்குவதில்லை. மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் என்பது புலம்பல். பக்திப் புலம்பல். சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவர் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி புலம்புவது திருவாசகம். திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள்.

அப்படியான ஒரு ஞானப்புலம்பல் பக்தி இலக்கியம் தான் திருவாசகம். 

பக்தி மேலீட்டில் கருணை வடிவினன், கல்லில் உறைந்திருக்கும் ஒப்புயர் அற்றவன் என கடவுளை உருவடிவில் கண்டு மனத்தை இமைப்பொழுதும் மறக்கா வண்ணம் பக்தியில் மூழ்கி, காலம் செல்லச் செல்ல பக்தியின் வடிவம் மாறுதல் பெற்று எண்ணமில்லா மனத்தைப் பெற்று, ஓசையில்லா உலகிற்குள் மனது நுழைந்து, ஆங்கே ஆனந்த தாண்டவமாடிடும் எல்லையில்லா பெரும்பொருளின் அசைவோடு இயைந்து மனம் ஒன்றி மூழ்கி விடும்.

மாணிக்கவாசகப் பெருமானின் உள்ளமும் அவ்வண்ணமே ஒன்றியது போலும். இல்லையெனில் ஞானத்தாழிசை பாடல்களை அவரால் எங்கணம் எழுதக்கூடும்? பக்தியில் மனம் லயித்து, அதன் அடுத்த நிலையான ஞானத்தில் திளைத்த காரணத்தால் தான் அவர் ஞானத்தாழிசை பாடினார் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டியதில்லை. 

அப்பாடல்களை, தொண்டர் புராண இலக்கியத்திலிருந்து காணாமல் போகும் வண்ணம் சதிச்செயல்களை பலரும் செய்து வந்திருக்கின்றனர். அதைக் கண்ட சங்கரானந்தர் சுவாமிகள் அதற்கு விளக்கவுரை எழுதி பல பதிப்புகள் கண்டிருக்கின்றன அப்பாடல்கள். ஏன் அவ்வாறான செயலைச் செய்தார்கள் எனில், கோவில்களுக்குப் பிரச்சினை வந்து விடும் என்பதைத்தவிர வேறொரு காரணத்தையும் என்னால் கண்டு உணர முடியவில்லை.

படிக்கட்டு தேவைதான். அதற்காக படிக்கட்டிலேயே நின்று விட முடியாது அல்லவா? பக்தியின் அடுத்த கட்டம் கடவுளை தன்னுள் உணர்வது.

இதோ கீழே மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ஞானத்தாழிசை பாடல்கள்.

பாடல்-1

சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்ட பின் அனுட்டானமுமற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயரர்ச்சனை யற்றாய்
மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே

பாடல்-2‏

நெஞ்சிற்பொரு ளடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
நேசத்தொடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட லாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திதிருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே

பாடல்-3‏

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக்கண் ணாலதனை நாடிச்செயல் கண்டு
சீசீ என முரையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந்நி னைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே

பாடல்-4‏

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகியநாதத் தொனிவிந்தின் செயல்கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக்கட லென்னும்
களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே

பாடல்-5

பத்தோடிரு கலையாகிய பனிரெண்டினில் நாலும்
பாழ்போகிட மீண்டே வரும் பதியின்கலை நாலும்
பெற்றோடிவந் திங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
பேசும்நிலை யோடும்உற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறை தீர்ந்தாய் இனி வாழ்வாயிரு மனமே

பாடல்-6

அல்லற்படு மோரொன்பது வாசல் பெருவாசல்
ஆருமறி வார்கள் அறியார்க ளொருவாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
சூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்
சேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்
சொல்லப்படு மல்லற்பல நூல்கற் றதனாலே
சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே

பாடல்-7

விண்டுமொரு வர்க்கும்உரை யாடப்பொருள் தானும்
பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டுமிருந் தார்க்குள்ளிரு பரிபன் னிருகாலாற்
காணுமது தானும்பனி ரெண்டங்குலம் பாயும்
பிண்டம்புகு மண்டம்புகு மெங்கும்விளை யாடிப்
பீடமென்னும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும்மொழி யற்றார்பரத் தோடும்உற வாகி
ஏதும்உரை யாமல்இருப் பார்களறி மனமே

பாடல்- 8

முப்பாழ் கடந்தப்பா லொரு முகப்புண்டதினடுவே
முச்சந்திகள் கூடும்அது தானும்முதற் பாழாம்
அப்பாழ்கடந் தப்பாலொரு கணவாயதன் பெருமை
அறுகுநுனி யிடமுமென அறிவார் பெரியோர்கள்
செப்பாதது தானுமறிந் தப்பாற் கடந்திட்டால்
சேருங்கலை நாலும்வரு திசையுமறிந் திட்டால்
ஒப்பாரினி இப்பாரினில் ஒப்பாருமே யில்லை
ஒன்றைப்பிடி தன்மைப்படு மெண்ணப் படுமனமே

பாடல்-9

நாதமெழுந் தெழுந்தோடி வந்துறையும் திருக்கூத்து
ஞானக் கண்ணினாலும்அதை நாடிச் செயல் கண்டு
பூதமெனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற்
பூசும்பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ்
சூதமென வரவற்றனை சுசியற்றனை எச்சில்
சுத்தஞ்செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப்
பாதம்முடி மேல்வைத்தனை பற்றற்றனை யுற்று
பதிபெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே

பாடல்-10

ஆயும்பல நூல்சாத்திர வேதத்தொடு புராணம்
ஆய்வந்திடு வழிகண்டறி யார்கள்அது தானும்
பாயுங்கலை பனிரெண்டினி லுண்டாகிய பருவம்
பாரும்அறி யாதுபனி ரெண்டின்செயல் கண்டு
நாயின்கடை கெட்டாய் வழிபாடும்முதற் பெற்றாய்
நாள்கோள் பலவற்றாய் கொலைகளவென்றது மற்றாய்
வாயும்வல தற்றாய்உயிர் வீடும்நெறி யற்றாய்
மண்ணின் வரவற்றாய் இனிபொன்னம் பலமனனே

பாடல்-11

கலையாகிய பிறவிக்கடல் அலையாம லுழன்றேன்
கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல் வமும்நினைவும் பிறர்க்கிட்டேன்
நித்தம் செயும் நியமங்களும் நேமங்களு மற்றேன்
தொலையாத உறக்கத்தொடு சுகதுக்கமு மற்றேன்
துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாம லிருக்கும்மன மதிலேகுடி கொண்டேன்
ஆனந்தம் வெளிப்பட்டபின் நானென் றறியேனே.

பாடல்-12

உருவானது விந்தின் பெயர் குருவானது ஞானம்
உடலுக்கு யிரீறாதி லொருநான்க னுள்முதலும்
குருவானது முனைமீதினி லணுவாகிய வெளியிற்
குடியாகிய பதிகண்டவர் அருள்வாத வூரரே
ஒருவாசக திருவாசகம் புவிமீதில் மகிழ்ந்தே
உரைசெய்தனர் தமிழ்த்தாழிசை நெறியின்படி நின்றோர்
கருவாசலி லணுகாமலே பிறவாநெறி பெறுவார்
கடவுட்செய லறியாதவர் கருவாசலிற் புகுவார்.

திருச்சிற்றம்பலம்

பாடல்களைப் படித்து விட்டீர்களா? 

பனிரெண்டாம் பாடலில் “கருவாசலில் அணுகாமலே பிறவா நெறி பெறுவார்கள், கடவுள் செயல் அறியாதவர் கரு வாசலில் புகுவார்” என்று சொல்கிறார் பெருமானார்.

பெண்ணின் கருப்பையிலே மீண்டும் மீண்டும் தரித்து, உடல் பெற்று, பின் உயிர் பெற்று, பூவுலகிலே கொடியதாம் இல் அற வாழ்க்கையில் வீழ்ந்து உழன்று செத்துப் போவார்கள் கடவுளின் செயல் இன்ன தானென்று அறியாதவர்கள். மீண்டும் கருப்பையிலே தங்கி, பூலோக வாழ்க்கை வாழாமல் பிறவாது வாழ்வார்கள் கடவுளின் செயல் இன்னதென்று அறிந்தவர்கள் என்கிறார் பெருமானார்.

கடவுளின் செயல் என்னவென்று அறிய நல்லதொரு குருவினைத் தேடிக் கண்டடையுங்கள். அவர் தான் உங்களுக்கு ஏற்றவாறு வழி நெறி காட்டி அருள் புரிவார்.

வாழ்க வளமுடன்...!

1 comments:

Shankar said...

வணக்கம் சார் தங்களிடம் பிரிடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் இருந்தால் அதை என் ஈமெயிலுக்கு அனுப்புங்கள் சார் என் ஈமெயில் : shankarbvm1990@gmail.com
தயவு செய்து உதவுங்கள் சார்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.