குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 7, 2020

நட்பின் உன்னதமும் மனையாளும்


தலைப்பு ஏதோ வில்லங்கமாக இருக்கிறதே என உங்கள் மனசு நினைப்பது எனக்குத் தெரிகிறது. பச்சே, நீங்கள் நினைப்பது அல்ல, நான் உங்களிடம் பறைய இருப்பது. 

அதற்கு முன்பாக இந்த மலையாளப்பாடலைக் கேட்டு விடுங்கள். மனதை வருடும் அற்புதமான குரலில், உங்கள் உள்ளத்தை நிரப்பும் இசையால் இப்பாடல்.ஒருவர் மூச்சுக்கு முன்னூறு தரம் ‘இன்ஷா அல்லா” என்று சொல்லும் ஒரு முசல்மான். இன்னொருவர் “எண்டே பெருமாளே…!” என்று நொடிக்கொரு தரம் கூவக்கூடிய பிராமின்.இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆதியந்தம் முதலாய் நெருங்கிய நண்பர்கள்.

சம்பவத்திற்குள் போவதற்கு முன்பு உங்களிடம் பறைய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

நண்பர்களே, ஓர் இறைவன் தத்துவம் தமிழர் இனத்திலும், முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ மதத்திலும் உள்ளது பற்றி அறிவீர்கள். 

திருமந்திரத்திலும், குரானிலும், பைபிளிலும் சொல்லப்பட்டிருப்பது ஒன்றே. மொழிகள் வேறு. ஆனால் சொல்லப்பட்டவை ஒன்றே.

ஒவ்வொரு மதத்திலும் சித்தம் கலங்கியவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சித்தம் கலங்கிய நரித்தனமானவர்கள் சுய நலத்துக்காகச் செய்வதுதான் சண்டைகள், கொலைகள், கொள்ளைகள். இவற்றைப் புரிந்து கொள்வதில் நமக்கு ஏழாம் அறிவு தேவை.

தமிழர்கள் முடிந்தால் ஓஷோவின் புத்தகங்களை படித்துப் பாருங்கள். ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் நயவஞ்சகர்களை அவர் நேரடியாக சுட்டிக் காட்டுவார்.

மதத்தையும், அரசியலையும் ஒன்று சேர்த்த அயோக்கியர்களால் தான் உலக மாந்தர்களின் வாழ்க்கையில் எந்த வித மகிழ்ச்சியும் உண்டாவதில்லை. எல்லாவற்றையும் அவர்கள் நரித்தனமாக தன் கொள்கைகளால் அபகரித்து, நாம் அனைவரும் ஏதோ அபாயத்தில் எப்போதும் இருந்து கொண்டிருப்பது போலவும், அவர்கள் தான் நம்மை காக்க, ரட்சிக்க வந்த வல்லமை மிக்கவர்கள் என நம்மையெல்லாம் ஏமாற்றி வருகின்றார்கள்.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் உங்களுக்காக.

செட்டியாரே காசு கொண்டு வா,
நாயரே காசு கொண்டு வா,
தேவரே காசு கொண்டு வா,
கவுண்ட்ரே காசு கொண்டு வா

என்றுச் சொல்லி காசு வசூல் செய்து கட்டப்படும் கோவிலில், நீங்கள் எல்லோரும் வெளியே இருங்கள், நான் மட்டும் பூஜை செய்கிறேன், உள்ளே வந்தால் தீராத பாவம் உண்டாகும் என்று சொல்லி, தன் பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் உத்தம சீலர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நாம் இதுவரையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லவா?

இந்த உதாரணம் போதுமா? இன்னும் வேண்டுமா?

ஆக மதத்தின் பெயரால் ஆட்சியும், அதிகாரமும் செலுத்துபவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யமாட்டார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் எழுதி இருந்தார் ஃபேஸ்புக்கில்.

ஆதிசங்கரர் மட்டும் இல்லையென்றால், இந்தியா எப்போதே முஸ்லிம் நாடாகவோ அல்லது கிறிஸ்து நாடாகவோ மாறி இருக்கும். தன் 32 வயதுக்குள் சைவத்தையும், வைணவத்தையும் இணைத்து வடக்கு வரை இந்து மதத்தை ஸ்தாபித்து காட்டினார் என்று.

மூவாயிரம் ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள் முஸ்லிம்களான மொகலாயர்கள். ஆயிரம் ஆண்டுகள் ஆண்டார்கள் கிறிஸ்துவ பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் நினைத்திருந்தால் இந்தியர்களை மதம் மாற்றி இருக்கலாமே? ஆனால் முடியவில்லை. இந்தியாவில் முஸ்லிமாகவும், கிறிஸ்துவர்களாகவும் இருப்பவர்கள் இந்துக்கள்.

ஆதிசங்கரர் தான் காரணம் என்ற கட்டுக்கதைகளை இன்னும் கண்ணை மூடி நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு மடத்தனம் பாருங்கள். இந்தியா உலகிற்கே வழி காட்டும் அற்புதமான ஆன்மீக பூமி. தமிழகம் தான் இந்தியாவின் முதன்மை மாநிலம். எவர் வந்தாலும் என்ன செய்தாலும் இங்கு மதமாற்றமெல்லாம் சாத்தியப்படாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மதம் மாறியவர்களின் மீது, ஜாதி எனும் பெயரால், ஜமீன் என்ற பெயரால் நடத்தப்பட்ட அக்கிரமங்களைத் தாங்க முடியாமல், அவர்கள் மதம் மாறினார்கள். வயிற்றுப் பசி தீர்ப்பது எதுவோ, பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்வது எதுவோ அதை அவர்கள் பின்பற்றினார்கள்.

பசி இல்லா, ஏற்ற தாழ்வுகள் இல்லா சமூகத்தை இதுகாறும் எந்த ஒரு அரசியல்வாதியாலும், கட்சியாலும் உருவாக்க முடியவில்லை. மக்களாக தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக மதங்களை உயர்வாகப் பேசுவதும், பிற மதத்தவரை இழிவு படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதும், அதன் காரணமாக அரசியல் அதிகாரத்துக்கு வருகிறார்கள்.

புரிந்து கொள்ள வேண்டும்.

பொய்களை, புனைவுகளை, கட்டுக்கதைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

யாரோ சொன்னார்கள், எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதற்காக நம்பி விடக்கூடாது.

இன்னும் நிறைய இருக்கிறது உங்களிடம் பறைவதற்கு. இனி சம்பவத்துக்கு வந்து விடுகிறேன்.

அந்த இருவரும் நீண்ட கால நண்பர்கள். முசல்மான் அடிக்கடி கோவிலுக்குச் செல்வதுண்டு. பிராமின் நண்பர் பூஜைகளை முடித்து, தீபாராதனைக் காட்டி விட்டு, அம்பாள் பி்ரசாதம் இந்தா என முசல்மானிடம் கொடுப்பார். அவரும் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, கோவில் பிரசாதத்தை வாங்கி ருசித்துச் சாப்பிடுவார். இது வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கும் சம்பவம்.

இருவருக்குமான நட்பு கொடுக்கல் வாங்கலிலும் இருக்கும். அய்யரிடம் காசு கொடு என முசல்மான் கேட்டால், தட்டில் விழும் தட்சினையை எடுத்து சேர்த்து வைத்து கொடுப்பதும் இப்படியான நட்பு அவர்களுக்கிடையில்.

முசல்மானுக்குள் ஒரு ஐயம். இன்றைக்கு அய்யரிடம் கேட்டு விட வேண்டியதுதான் என அவர் வரும் வரை காத்திருந்தார்.

“அய்யரே, நீர் கொடுக்கும் சுண்டல், பொங்கல் எல்லாவற்றையும் சாப்பிடுகிறேனே, நீ ரம்ஜானுக்கு எங்க வீட்டு மட்டன் பிரியாணியைச் சாப்பிடுவீரா” எனக் கேட்க,

அய்யர், உடனே, ”என்ன இப்படிக் கேட்டுட்டேள். கொண்டாங்கோ, சாப்பிடுகிறேன்” எனச் சொல்லி, முசல்மான் எதிரில் அமர்ந்து கொண்டு பிரியாணியைச் சாப்பிட்டார்.

ஒரு முசல்மானுக்கும், அய்யருக்குமான நட்பின் ஆழமும், அவர்கள் தங்கள் மதத்தின் மீதும், அவர்களின் நட்பின் மீதும் கொணடிருந்த நம்பிக்கையும் வார்த்தைகளால் எழுத முடியாது.

அந்த அய்யர் சமீபத்தில் இறைவனிடம் சேர்ந்து விட்டார். அவரின் மறைவுக்கு முசல்மானால் செல்ல முடியவில்லை. காரணம் கொரானா. 

வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட அவரின் மனைவி, தன் மகனிடம், ‘வாப்பா, ஏன் அமைதியாக இருக்கிறார்?” எனக் கேட்க, அவன் விஷயம் சொல்லி இருக்கிறான்.

கணவரிடம் வந்தவர், “ஒங்க, மொத சம்சாரம் இறந்து போச்சா?”

* * *

நண்பர்களே, இப்பதிவு இரண்டு நண்பர்களைப் பற்றி அல்ல. இப்பதிவு மதம் பற்றியும் அல்ல.

ஒரு கணவன் மனைவியின் இல்லறத்தைப் பற்றியது.

இப்படியும் கணவன் மனைவி இருக்கிறார்கள் உலகிற்கே சாட்சியாக.

வாழ்க வளமுடன்…!

* * *

குறிப்பு : வெகு சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.