குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 15, 2020

தமிழகம் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகிறதா? ஒரு அலசல்

அண்ணா தன் ஆட்சிக்காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று சொன்னார். அவர் இறந்து போய் இன்றைக்கு ஐம்பது வருடங்கள் ஆயின. இன்றைக்கும் தெற்கு தேய்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்கு பின்பு தமிழகத்தில் ஊழல்களுக்காக பாலங்கள் கட்டப்பட்டனவே தவிர எதிர்காலத்திற்காக இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சாலைகளும், பாலங்களும், அரசு கட்டிடங்களும் ஊழல்களின் ஊற்றுக் கண்களாகவே இருந்து வருகின்றன. சாலைகள் ஒவ்வொரு கட்சியினருக்கும் அள்ள அள்ளக் குறையா செல்வத்தை தந்து கொண்டிருக்கும் அட்சயபாத்திரம். போதாது என குடிமராமத்துப் பணி, 100 நாள் வேலைத்திட்டம் என அள்ள அள்ளக் குறையா அட்சய ஊழல் திட்டங்கள் மட்டுமே கடந்த வருடங்களாக செயலிலிருக்கின்றன.

இன்றைக்கு தமிழகத்தில் பணம் வைத்திருப்போர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் தான். தொழிலதிபர்களிடமும், மக்களிடமும் எந்தப் பணமும் இல்லை.

கடந்த பனிரெண்டு வருடமாக தமிழக தொழிலதிபர்கள் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்து செய்யும் தொழிலை மீட்க உயிரைப் பணயம் வைத்து வருகின்றார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அதிகாரத்தால் வங்கிகள் தொழிலதிபர்களின் கழுத்தை அறுக்க ஆரம்பித்தன.

மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தை முன் வைத்து ஊழல், தனி இன பலன் ஆகியவற்றுக்காக தமிழக தொழில்களை முடக்கி வருவதை பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

சிங்கிள் விண்டோ சிஸ்டம் அனுமதி என்பார்கள்.அதில் ஆயிரம் உள்குத்துக்கள். காசு செலவாகாமல் அனுமதி கிடைக்காது. 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகத்தில் வட இந்தியர்கள் அனேகம் பேர் வேலை செய்ய வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் அதிகமானோர் தமிழகம் தேடி வந்தனர். சமீபத்தில் நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில், அங்கு வேலை செய்த வட இந்தியர்களின் எண்ணிக்கையை பத்திரிக்கைகளில் படித்ததும் உண்மை என தெரிகிறது.

இந்த ஒன்பது வருட, காலகட்டத்தில் தமிழகத்தில் காணும் இடமெல்லாம் வட இந்தியர்கள் தெரிந்தார்கள். ஆங்காங்கே சண்டைகள், திருட்டுகள், கொலைகள், கொள்ளைகளை அவர்கள் செய்து வந்தார்கள் என்பதை தினசரி பத்திரிக்கைகள் வெளியிட்டன.

அவர்கள் அனைவரும் தமிழக தொழிற்சாலைகளில் பணியாளர்களாக பரவி தொழிலைத் திறம்பட கற்று வந்தனர். எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா தொழில்களிலும் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். தொழிற்சாலைகள் மட்டுமல்ல, எல்லா தொழில்களையும் செய்து வந்தனர்.

தமிழர்கள் அந்த தொழிற்சாலைகளில் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர். தொழிலாளர் நிலையிலிருந்து, நிர்வாக வேலைக்கு பெரும்பாலான தமிழர்கள் உயர்ந்தனர். இதற்கிடையில் அம்மா அரசு, தன் தமிழக குழந்தைகளுக்கு (தமிழர்களுக்கு) சாராயத்தை புகட்டி (உபயம்: ஆனந்த விகடன் அட்டைப்படம்) அவர்களின் திறமை, கல்வி, உடல் திறன் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, விதவைகளை உருவாக்கியது தன் பங்குக்கு. போதாது என பிராமணீய இயக்குனர்கள் (இயக்குனர் சங்கர்-காதலன் திரைப்படம்) குடி குடும்பத்தோடு குடிக்க வேண்டியது என தமிழர்களுக்கு பாடம் எடுத்தனர்.

இப்படியான சூழலில் கொரானா உலகை ஆள ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இந்த நாட்களில் தமிழகத்தில் வாழ்ந்த வட இந்தியர்கள் எவரும் பசியால், பட்டினியால் செத்துப் போகவில்லை என்பது டிவி செய்திகள் சொல்லின. ஆங்காங்கே ஒரு சிலர் உணவின்றி இருந்தால், அங்கு சமூக அன்பர்கள் சென்று உணவளித்து அவர்களைப் பாதுகாத்தனர். தமிழ் நாட்டில் வட இந்தியர் எவரும் பசியால் சாகவில்லை. பாதுகாப்பாக இருந்தனர். இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே இருந்தால் தொழிற்சாலைகளை இவர்களை வைத்து இயக்கி இருக்கலாம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சொல்லி வைத்தாற் போல அனைவரும் அவரவர் ஊர்களுக்கு கிளம்ப முயன்றனர்.

கொரானா தொற்றின் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற வேளையில் வட இந்தியர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு கிளம்புவதற்கு போராட்டங்களை அறிவிக்கின்றனர். தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தனர்.

மத்திய அரசு ரயில்களை இயக்கியது.  காங்கிரஸ் கட்சி அவர்களுக்கான ரயில் கட்டணத்தை தருவதாக அறிவித்தனர். நாடு இருக்கும் நிலையில் மத்திய அரசு உடனே 85 சதவீதம் கட்டணத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும் என உத்தரவிட்டது.

கொடுமை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியிடம் இருக்கும் பணத்தை இந்த நேரத்தில் செலவு செய்கிறார்களே என நினைத்து அதற்கு ஒரு நன்றியைத் தெரிவித்து இருக்கலாம். மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் தான் தள்ளுபடி கொடுத்தார். நம் பிரதமரின் அரசியல் சாணக்கியதனம் எப்படியானது என்று பாருங்கள்?

காங்கிரஸ் கட்சியினரின் பணம் அங்கேயே இருக்கிறது. ஊர் கூடித் தேர் இழுக்கலாம். ஆனால் இழுக்க வருபவர்களையும் அரசியல் நோக்கில் தடுக்கும் மாபெரும் சிந்தனையாளரானார் நம் பாரதப் பிரதமர். கட்சியினர் செலவு செய்தால் அது ஊழல் பணம் என்பதாக நினைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழகத்தில் வேலை செய்து வந்த வட இந்தியர்கள் பெரும்பாலானோர் பீகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இங்கிருப்பதோ கொஞ்சம் பேர். இனி அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று விடுவார்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கொரானா இருந்தாலும் தொழிற்சாலைகளை இயக்குங்கள் அதுவும் 33 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு என்று அறிவிக்கின்றார்கள் தமிழக ஆட்சியாளப் பெருந்தகைகள்.

சேவைத்துறையில் வேண்டுமானால் 33 சதவீதம் செல்லுபடியாகும். ஆனால் ஒரு தொழிற்சாலை இயங்க வேண்டுமெனில் கேட்-டு-கேட் ஆட்கள் வேலை செய்தால் இயக்க முடியும். வெறும் 33 சதவீதத்தினரை வைத்துக் கொண்டு எப்படி இயக்குவது? பாய்லர் வெடிக்கும். விபத்து தான் ஏற்படும். சமீபத்தில் ஆந்திராவில் அப்படித்தான் நடந்து மக்கள் செத்தார்கள்.

ஒரு அறிவிப்பின் இலட்சணம் இது. அதன் காரணமாக மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பது நிதர்சனம்.

வட இந்தியர்கள் அவரவர் ஊர்களுக்குச் சென்று சேர்ந்த பின்னர் மத்திய அரசு 20 லட்சம் கோடி (ரிவர்ஸ் பொருளாதாரம்) ரூபாய்க்கு திட்டத்தை அறிவிக்கிறது. அதற்கு பல்வேறு ரைடர்ஸ்களையும் சேர்க்கிறது.

இனி நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும் என்கிறார்கள். வேலை துவங்கலாம் என நம்பிக்கை ஊட்டினார்கள். சரி, பணம் கிடைக்கும்? வேலை செய்ய ஆட்கள் எங்கே?

நிர்வாகத்தில் இருந்தவர்கள் கீழ் பணிகளை செய்வதற்கு உடனே சாத்தியமாகுமா என்றால் நிச்சயம் முடியாது. கிட்டத்தட்ட ஒன்பது வருடமாக தொழிலை நன்கு கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. இனி தொழிற்சாலைகளை இயக்குவது எப்படி? புரிகிறதா நண்பர்களே?

தமிழகத்தின் அத்தனை தொழில்களையும் கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் அவரவர் ஊர்களில் இருக்கின்றார்கள்.

இடையில் ஒரு சின்ன விஷயம்.

முன்பு கோவை, கரூர் பக்கம் நூல் மில்களில் வேலை செய்வதற்கு திண்டுக்கல் பக்கம் இருந்து ஆட்களை அழைத்து வருவார்கள். அடுத்த கட்டமாக ஏன் நாம் தொழிற்சாலைகளை திண்டுக்கல் பக்கம் கட்டக்கூடாது என நினைத்து, திண்டுக்கல் ஏரியாக்களில் நூல் மில்களை உருவாக்கினர். வேலை செய்ய ஆட்கள் இருக்கும் பகுதியில் தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பது புத்திசாலித்தனமானது. யார் வேண்டுமானாலும் தொழிற்சாலைகளை உருவாக்கலாம். ஆனால் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமல்லவா?

சரி மீண்டும் விட்ட இடத்திலிருந்து.

எம்.எஸ்.எம்.இகளுக்கு நிதி உதவி என்கிற மத்திய அரசின் பொருளாதார  மீட்டெடுப்பு அறிவிப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும்? வட இந்தியாவில் தொழில்களைக் கற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இனி அங்கிருக்கும் தொழிலதிபர்கள் புதிய ஆலைகளை உருவாக்குவார்கள். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆளும் பிஜேபியினர் இனி தொழில்களை வட இந்தியாவில் உருவாக்குவார்கள். வங்கி வட்டி இல்லை, சொத்துக்கள் பிணை இல்லை. இப்படி பலப்பல பலன்களை மக்களின் வரிப்பணத்தில் வெகு இன்பமாக அனுபவிக்கப் போகின்றவர்கள் வட இந்தியர்கள்.

ஆனால் இங்கோ, ஸ்கில்டு லேபர்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்கும். இனி புதிய ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து, நிர்வாகத்தில் இருந்தவர்களை கீழ்  நிலைப் பணிகளுக்கு பழக்கப்படுத்தி தொழிலை விரிவாக்குவது என்பது எவ்வளவு கடினமானது.

இருபது லட்சம் கோடி திட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பலன்களை அனுபவிக்கப் போவது வடக்கு. வழக்கம் போல தமிழகமும், அதன் தொழிலும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பே. காலத்தின் கோலமாக என்னால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வடக்கிலிருந்து ஏவப்படும் ஒவ்வொரு அழிவாயுதமும் இங்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஆட்சியிலிருப்பவர்களாலும், எதிர்கட்சிகளாலும் பேச முடியா ஊழல் மன்னிக்கவும் சூழலில் இருக்கின்றார்கள். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினால் ரெய்டு, கைது. அதற்கேற்ப மத்திய அரசு சட்டங்களை திருத்தி வைத்திருக்கிறது. எதிர்க்க வேண்டியவர்கள் தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்தைப் பலி கொடுக்கின்றார்கள். ரெய்டு, கைதுகளுக்கு பயப்படாத நேர்மையாளர்களாக இங்கு எந்த அரசியல்வாதியும் அதிகாரத்தில் இல்லை என்பது கொடுமை.

இதை எல்லாவற்றையும் தாண்டி எம் தமிழகம் துணிவு கொண்டு மீண்டு எழும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.