குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, May 20, 2020

இ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்

நண்பர்களே,

இந்திய அரசு இ.எம்.ஐ தள்ளி வைப்பு அறிவிப்பு வெளியிட்ட நாள் மார்ச் 25ம் தேதிக்குப் பின்னால். என்ன சொன்னார்கள்? மார்ச், ஏப்ரல், மே மாதம் இ.எம்.ஐ கட்ட வேண்டாம் என்றார்கள் அல்லவா? உங்களுக்குத் தெரியும், மார்ச் மாத இ.எம்.ஐ பெரும்பாலும் இருபது தேதிக்குள் வசூலித்திருப்பார்கள். பத்து பர்சண்டேஜ் ஆட்கள் கட்டி இருக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாலும் மார்ச் மாதம் இ.எம்.ஐ கட்டப்பட்டிருக்கும். ஆனால் என்ன சொன்னார்கள். மூன்று மாதம் இ.எம்.ஐ கட்ட வேண்டியதில்லை என்றார்கள். உண்மை என்ன? இரண்டு மாதம் மட்டுமே இதன் உண்மையான அர்த்தம் அல்லவா?

சரி, கட்டாத இ.எம்.ஐ மீண்டும் கட்ட வேண்டும். எப்போது? என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? மூன்று மாதம் இ.எம்.ஐ கட்டணத்தை அவர்கள் டாப் அப் செய்திருக்கிறார்கள். அதாவது கடன் தொகையுடன் சேர்த்து விட்டார்கள். மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த மூன்று மாத இ.எம்.ஐ கடன் தொகை எப்போது கட்டுப்படுகிறதோ அப்போது வரை வட்டி சேர்த்து வசூலிக்கலாம் என அறிவித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. வங்கி நட்டமாகி விடக்கூடாது என்று தான் நினைக்கிறது.

இப்போது ஒருவர் வீட்டுக்கடனுக்காக மாதம் நாற்பதாயிரம் கட்டுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று மாதத்தின் மொத்த இ.எம்.ஐ ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய். ஆனால் வீட்டுக்கடன் கட்ட வேண்டிய வருடம் பத்து வருடம் என்றால் பதினோராவது வருடத்தில் இந்த இ.எம்.ஐ சேர்க்கப்பட்டு, அதனுடன் வட்டியும் வசூலிக்கப்படுகிறது. ஒரு இலட்சத்துக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு, பத்தாவது வருடம் கடன் கட்டி முடிக்காமல், மேலும் மூன்று மாதங்கள் இ.எம்.ஐ சேர்த்துக் கட்ட வேண்டும். அப்போது இந்தத் தொகையுடன் இன்னும் மூன்று லட்ச ரூபாய் வட்டியும் சேர்த்துக் கட்ட வேண்டும். கடன் தள்ளி வைக்கப்படுகிறது எனும் மாய அறிவிப்பின் பின்னணியின் உண்மை இதுதான்.

இ.எம்.ஐயை இப்போதே கட்டி விட்டால அரசின் இந்த வலையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் இப்போது கட்ட முடியாது. வேலையில்லை, தொழில் நடக்கவில்லை, சம்பளத்திலும் பிடித்தம் செய்து விட்டார்கள்.

மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலில் அரசு கடன் இ.எம்.ஐ தள்ளுபடி செய்திருந்தால் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு எனச் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யாமல் தள்ளி வைப்புச் செய்திருக்கிறார்கள். தள்ளி வைப்புச் செய்திருந்தாலும் வட்டி வசூலிக்க வேண்டாமென்றுச் சொல்லி இருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. அதற்கு குஜராத்திகளாகப் பிறந்திருக்க வேண்டும். தள்ளுபடியே செய்திருப்பார்கள்.

அதற்குள் ஆகா, பாருங்கள், பாருங்கள்.. இந்திய அரசு எப்படியெல்லாம் சிந்தித்து மக்களுக்கு நன்மை செய்கிறது என? என மகிழ்ச்சியில் துள்ளினார்கள், ஆடினார்கள், பாடினார்கள், புகழ்ந்தார்கள். உலகமே அதாவது அமெரிக்காவே பாராட்டுகிறது என்று புளகாங்கிதமடைந்து மகிழ்ந்தார்கள்.

ஆனால் உண்மையோ அவ்வாறு இல்லை.

இன்னொரு விஷயம். வீட்டுக்கடனோ அல்லது கார்கடனோ எது வாங்கி இருந்தாலும், இ.எம்.ஐ கட்டும்போது, வட்டி தான் வசூலிக்கப்படுகிறது. பத்து வருடம் இ.எம்.ஐ என வைத்துக் கொள்ளுங்கள். ஒன்பது வருடம் கட்டி விட்டீர்கள், பத்தாவது வருடம் இ.எம்.ஐ கட்டவில்லை எனில் வங்கி கவலைப்படாது. ஏனெனில் வங்கிக்கு வர வேண்டிய வட்டி வந்து விட்டது. அசல் வீடாகவோ அல்லது காராகவோ இருக்கும். கடன் கட்டவில்லை என சொல்லி வீட்டை அல்லது காரை ஏலம் விட்டு வசூலித்து விடுவார்கள். வீடு என்றால் விலை அதிகமாக அல்லவா இருக்கும். எந்த வகையிலும் வங்கிக்கு நட்டமே உண்டாகாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இது எல்லாமும் மக்களின் உழைப்பு. அரசோ, வங்கியோ மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்து இன்னொரு சம்பவம்.

மாஸ்க் ஏற்றுமதி தடை பற்றி அலசலாம்.

உலகெங்கும் இப்போதைய டிமாண்ட் என்ன?

மாஸ்க்.

தையல் மிஷின் வைத்திருக்கும் அத்தனை பேரும் மாஸ்கை தயாரிக்கலாம் அல்லவா? ஜட்டிக்கு ஆகும் துணியை விட குறைந்த துணி தான் ஆகும். அதை இந்தியாவில் இருக்கும் ஏழை, எளியவர்கள் அனைவரும் தயாரிக்கலாம் அல்லவா? ஒரு ஏழைப்பெண் வைத்திருக்கும் தையல் மிஷின் மூலமாக மாஸ்க் தயாரித்து விடுவார்.

மாஸ்க் ஏற்றுமதிக்கு தரக்கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்கி, தயாரிப்பு, ஏற்றுமதிக்கு அனுமதி தந்திருந்தால் அரசுக்கும் வருமானம் வந்திருக்கும். மக்களுக்கும் வருமானம் வந்திருக்கும். ஏற்றுமதி தொழிற்சாலைகள் குறைந்த பட்ச ஆட்களை வைத்துக் கொண்டு இயங்கி இருக்கும். வீட்டுக்குள் இருந்து கொண்டு சம்பாதிக்க மக்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் உதவி செய்து, பொருளாதார இறக்கத்தில் கொஞ்சமேனும் சேமித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்ததா மத்திய அரசு?

உண்மையில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டியது மருந்துப் பொருட்களுக்கு. ஆனால் நம் உலகப் புகழ் அரசு என்ன செய்தது? மாஸ்க் ஏற்றுமதியை தடை செய்திருக்கிறது.

அது மட்டுமா? 20 லட்சம் கோடி திட்டம் அறிவித்திருக்கிறது அரசு?
இந்திய திரு நாட்டில் 20 லட்சம் கோடி பணம் எங்கே அய்யா இருக்கிறது எனக் கேளுங்களேன் உங்கள் அரசியல் நண்பர்களிடம்?

நண்பர்களே, இந்திய அரசு இந்திய மக்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் என்ன செய்திருக்கிறது என சிந்தித்துப் பாருங்கள்.

இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் நம்பர் ஒன்றில் இருந்த தமிழகம் இப்போது என்ன ஆகி இருக்கிறது தெரியுமா?

புரியும்படிச் சொல்ல வேண்டுமெனில் தமிழகத்தில் இருந்தவர்கள் 100 ரூபாய் தினம் சம்பாதித்தார்கள். பிற மா நிலத்தவர்கள் 35 ரூபாய் சம்பாதித்தார்கள். இன்று பிற மாநிலத்தவர் 100 ரூபாய்க்கு உயர்ந்து விட்டார்கள். தமிழகம் 100 ரூபாயில் நிற்கிறது.

யார் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதும், அது எப்படி நடந்தது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இன்னும் இருக்கிறது தொடர்ந்து இணைந்திருங்கள்.

நம் வாழ்வியல் நடைமுறையில், நம் குழந்தைகளிடம் சொல்லித் தர வேண்டிய அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்று எழுதப் போகிறேன். மறந்து விடாமல் நீங்களும், உங்கள் குழந்தைகளும் கற்றுக் கொள்ளுங்கள்.

விரைவில் …

வாழ்க வளமுடன்…!

1 comments:

aashaa said...

குழுவிற்கு ஒவ்வொரு ஆளுக்கும் 5000 ரூபாய் கடன் தருகிறது என்று சொன்னது மத்திய அரசு.ஆனால் நாங்கள் வாங்க வில்லை.இதைப் பார்த்தபின் தான் புரிந்தது நாங்கள் செய்தது நல்லதென்று. எங்கள் கடன் சுமை ஏறாதென்று.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.