ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன.
விடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர்.
ஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர்.
நாமெல்லாம் மைக்ரான் குடும்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா? ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம்? எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
நண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான்.
அறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்?
கையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ரூபாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.
தனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது.
அவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.
அதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன??? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.... !