குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 25, 2014

நிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்

சென்னையிலிருந்து நண்பரின் சிபாரிசின் பேரில் ஒருவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். அவருடன் அவருடைய நண்பரும் வந்திருந்தார். இருவரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிகளில் வருமானம் வருகின்றது. சென்னையின் ஒரு பிரதான இடத்தினை வாங்குவதற்கு லீகல் ஒப்பீனியன் வேண்டுமென்று கேட்டார்கள். 

அவர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டேன். அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.

அந்த ஆவணத்தில் கணவருக்கும் மனைவிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்திருப்பதும், வழக்கில் மனைவி ஜெயித்திருப்பதும் தெரிய வந்தது. மிகச் சாமர்த்தியமாக கணவன், மனைவி என்பது தெரியாமலே ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.

இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மனதுக்குள் ஆந்தை அலறியது.

சொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.

தடையாணை பெற்ற தேதியிலிருந்து மிகச் சரியாக ஒரு மாதம் கழித்து மேற்படிச் சொத்தின் ஆவணத்தினை வேறொரு வங்கியில் வைத்துக் கடனும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

இந்தச் சொத்தினை வாங்குவதற்கு வந்தவர் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினை போட்டு கோடிகளில் முன்பணம் செலுத்தி இருந்தார். 

மேற்படி விஷயங்களைச் சொன்னது ஆள் பதட்டமாகி விட்டார். அவருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய  நிறுவனத்தின் முதலாளி. இத்தனைக்கும் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு வேறொரு வக்கீலிடம் ஒப்பீனியன் வேறு வாங்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது சேதி பாருங்கள்?

சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது அவருக்கு தெரியவில்லை. அல்லது அந்த வக்கீலுக்குத் தெரியவில்லை போலும்.

சிக்கிக் கொண்டார் வசமாக. முள்ளின் மீது சேலை பட்டு விட்டது. சாமர்த்தியம் இருந்தால் தான் சேலை கிழியாமல் எடுக்க முடியும்.

மேற்படிச் சொத்தின் பேரில் கடன் இருக்கிறது. மேற்படிப் பிரச்சினை தெரியாமல் கடன் எப்படிக் கொடுத்தார்கள் என்பது வேறு ஒரு விஷயம். 

கோர்ட்டில் விற்க தடையாணை இருக்கிறது. இத்தனை பிரச்சினை இருக்கும் போது மேற்படிச் சொத்தினை எப்படி வாங்க முடியும்?

நிச்சயம் முடியாது அல்லவா? பெரும் பணம் போட்டு ஒரு வில்லங்கச் சொத்தினை எப்படி வாங்க மனது  வரும். 

அவருக்கு ஆறுதல் சொல்லி இந்தச் சொத்தினை உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயல்கிறேன் என்றுச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.

சரியாக இரண்டு மாதங்கள். சொத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்துச் சரி செய்யப்பட்டு, வில்லங்கம் ஏதுமில்லாத சொத்தாக கிரையம் பெற்றார் அவர்.

இப்படி ஒரு சொத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத பல வில்லங்கங்கள் இருக்கும். வெறும் வில்லங்கச் சான்றிதழால் மட்டுமே அதனைக் கண்டுபிடித்து விட முடியாது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாவிட்டால் வில்லங்கம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

ஆகவே ஒரு சொத்தினை வாங்கப் போகின்றீர்கள் என்றால் வெகு கவனம் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத வில்லங்கங்களை சாமர்த்தியம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. முதன் முதலாகச் சொத்து வாங்குபவர்களுக்கு வெகு சிரமம் தான்.





Wednesday, October 8, 2014

நீதியா வென்றது?

உண்மை என்பது எப்போதும் இருப்பது. எப்போதும் பேசுவதுமில்லை. சாட்சியாக வந்து நிற்பதும் இல்லை. உண்மையின் அர்த்தமே மனிதனின் வாழ்க்கையோடு சூட்சுமமாய் புதைந்து கிடப்பது. உண்மை மனிதனின் மனசாட்சியுடன் தொடர்புடையது.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் புதை குழியில் பதுங்கி இருந்த போது அவருடன் உரையாடிக்கொண்டிருந்துப்பது எதுவோ அது தான் உண்மை. என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையும் நீதியும் வேறு வேறு. நீதிக்கு என்று தனி வரையறை. உண்மைக்கென்று தனி வரையறை. இன்னும் புரியும் படிச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதக்கதையை எடுத்துக் கொள்வோம்.

மகாபாரதத்திலே பாண்டவரின் அரண்மனையில் தண்ணீரில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்து நகைத்த பாஞ்சாலி சிரிப்பு முகத்தினால் துரியோதனன் நடந்து கொண்டது அவனுக்கான நீதி. இந்த ஒரு காரணத்தால் அவிழ்ந்து விழுந்த கூந்தலுக்காக கொன்று குவிக்கப்பட்டார்கள் துரியோதனாதிகள். ஆனால் அதுதான் உண்மையா? உண்மை என்பது என்ன? என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

உண்மை தனக்கானவற்றை என்றேனும் பெற்றுக் கொண்டு விடும். மனிதர்களின் வேதனைகளுடனும், துன்பங்களுடனும், துயரங்களுடனும் பின்னிக் கிடப்பது உண்மை. அந்த உண்மையின் வீச்சு படு கொடூரமானதாய் இருப்பினும் அதனிடமிருந்து தப்பிப்பது முடியாத காரியம்.

வாழும் வரை பிறருக்கு உபயோகமாய், பிறரை கிஞ்சித்தும் வஞ்சித்து அவர்களின் சாபங்களைப் பெறாத வரையில் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும். சாபங்கள் தான் உண்மைக்கு உரம். உரமில்லாத உண்மையால் யாருக்கும் எந்த வித துன்பமுமில்லை. துயரமுமில்லை.

உரத்தை தயார் செய்வது அவரவர் செயலில் உள்ளது.


Wednesday, October 1, 2014

பாலைக் கொதிக்க வைப்பதில்லை

திருவள்ளுவர் மருந்து என்ற தலைப்பில் உணவு பற்றி பத்து குறள்களை அருளியிருக்கிறார். அதிலொன்று,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் (945)

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவை அளவோடு உண்டு வந்தால் உயிருக்கு துன்பமில்லை என்பது தான் மேலே கண்ட குறளின் அர்த்தம்.

நாமெல்லாம் முன்னோர்கள் சொல் கேளா நவீன கால மாந்தர்கள் அல்லவா? தந்தையுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லிக் கொடுத்த மாபெரும் கலைஞர்கள் இருக்கும் மாநிலமல்லவா நமது மாநிலம். இப்பேர்பட்ட பெரும் மகான்களுக்கு அரசு கலைமாமணி விருதுகளைக் கொடுத்து கவுரவிக்கின்றது. இதைக் காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதற்கில்லை. இது அரசியல் சார்ந்தது. அது கிடக்கட்டும் சாக்கடை.

தமிழக மாந்தர்களின் தற்போதைய நிலை சர்க்கரை வியாதி. 40 வயதுக்குள்ளேயே சர்க்கரை வியாதி. மூட்டை மூட்டையாக மாத்திரைகளை வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வயிறு பாவம், உள்ளே வருவதை எல்லாம் அரைத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது. மனிதன் சாகிற வரை வயிறு செய்யும் செயல் பற்றி ஒரு துளியாவது எவராவது நினைத்துப் பார்க்கின்றார்களா? 

நிச்சயம் இல்லை. அதைத்தான் நாக்கும், மூக்கும் தடுத்து விடுகிறதே. ஆசையை அறு என்று இதற்குத்தான் சொன்னார்கள் போலும்.

விடிந்தவுடன் டீக்கடை, சூடாக பஜ்ஜி, வடை, போண்டா. காலையிலேயே வயிற்றை அடித்துத் துவைத்து பிழிய வைத்து விடுகின்றார்கள். பெரும்பாலான டீக்கடைகளில் பால் பாக்கெட்டுகளை பால் கொதித்துக் கொண்டிருக்கும் தட்டின் மீது வைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல கொதிக்கும் பால் பாத்திரத்தில், பால் குறைந்தவுடன் மற்றொரு பால் பாக்கெட்டை பிய்த்து ஊற்றி விடுகின்றார்கள். அந்தப் பால் கொதிப்பதைப் பற்றி டீ மாஸ்டர் (இவருக்கெல்லாம் மாஸ்டர் என்று எவர் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை) கவலைப்படுவதும் இல்லை. கொதிக்காத பாலில் உடலைக்கெடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம்.

ஆவின் பாலில் கலப்படம் செய்தவரைக் கைது செய்து விட்டார்கள். கலப்பட பாலைக் குடித்தவர்களைப் பற்றி எவரும் பேசுவதும் இல்லை. இந்த உணவுக் கலப்படக்காரர்களுக்கு “ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து மரண தண்டனை” விதிக்க வேண்டும். எத்தனை பேரின் உடலைச் சித்ரவதைச் செய்கின்றார்கள் இவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கொதிக்காத பாலும், ஊறு விளைவிக்கும் பஜ்ஜியும் அவசியம் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.