குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 28, 2013

திருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு விழா - வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆஸ்ரமம்


தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரம். திருமூலர் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி இருந்து மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாக கருதப்படும் திருமந்திரத்தினை ஒலி வடிவில் இசைத்தட்டாக எனது உயிரோடு உயிராய் நின்று எனக்குள்  நிறைந்திருக்கும் எனது குரு நாதரின் அருமைச் சீடரும், துன்பம் வரும் முன்பே ஓடோடி வந்து நின்று காத்தருளும் ஜோதி ஸ்வாமிகளின் குரலில் வெளிவருகிறது.

கோயமுத்தூரின் அடையாளம், கோவைக்கு உயிர் கொடுத்து வரும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் எனது குரு நாதர் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதியில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி, 2013, ஆடி மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று மூன்று மணி அளவில் வெளியீட்டு விழா நடக்கிறது.
இசைத்தட்டு இலவசமாய் வழங்கப்படுகிறது. கோவையில் இருக்கும் நண்பர்கள் விழாவில் அவசியம் கலந்து கொண்டு திருமூலர் வழங்கிச் சென்ற திருமந்திரத்தின் இசைத்தட்டினைப் பெற்றுச் செல்ல அழைக்கிறேன்.

சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி :

ஈஷா யோகமையம் செல்லும் வழியில் முள்ளங்காடு செக்போஸ்டில் இடதுபுறம் திரும்பினால் சுவாமியின் ஆஸ்ரமத்திற்குச் செல்லலாம். 

ஜோதி ஸ்வாமிகளை தொடர்பு கொள்ள : 9894815954

திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக இங்கே !

பாடல் 85 :
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

பாடல் : 270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பாடல் :1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

Thursday, June 27, 2013

கோவையில் கண்ணதாசன் விருது 2013- முத்துலிங்கம் அசோகமித்திரன்



கோவை கிக்கானி பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணதாசன் கழகம் மரபின் மைந்தர் முத்தையா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய விருது விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நேரமாகி விட்டிருந்தது. நானும் ரித்திக் நந்தாவும் சென்றிருந்தோம்.

அரங்கம் நிரம்பி வழிந்தது. வெகு அமைதியாக இருந்தது. அரங்கத்திலிருந்து ஒருவர் கூட வெளியில் செல்லவில்லை. சினிமா பிரபலங்களை காணத்தான் இவ்வளவு கூட்டம் கூடும். ஆனால் இந்த நிகழ்வு என்னை வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது. இலக்கியத்திற்காகவும் சிறு கூட்டம் இருக்கிறதே என்று சந்தோசம். சாரு நிவேதிதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் புத்தக வெளியீட்டு விழாவினை கோவையில் வைக்கலாம். நிச்சயம் வாசகர்கள் கூடுவார்கள். 

நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமாரும், எங்களால் முதலாளி சார் என்றழைக்கப்படும் முதலாளியும் என்னை அழைத்திருந்த காரணத்தால் முதன் முதலாய் இப்படிப்பட்ட விழாவிற்குச் செல்ல எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. 

முதலாளி சார் எனக்கு கோவையின் பிரதான கிளப்பில் வைத்து திரு. பாரதி கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்திய போது அவருடனான உரையாடலில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மனதை நெகிழச் செய்து கொண்டே வந்தார். சில நாட்கள் சென்ற பிறகு அவரிடமிருந்து “அப்பத்தா”, “அருந்தவப்பன்றி பாரதியார்” என்ற நூல்களும் அவர் இயக்கிய ஆவணப்படங்களும் வந்திருந்தன. அப்பத்தா சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மனதை கீறிச் செல்லும் கதைகள் அவை. அருந்தவப்பன்றி பாரதியார் நூல் பாரதியார் வாழ்க்கையில் இதுவரை எவரும் சொல்லாத வரலாற்று சம்பவங்களை பதிவாகியிருக்கிறது. இதற்காக பெரும் உழைப்பினை அவர் கொடுத்திருக்கிறார். இந்த நூல் இனி பாரதியாரின் வரலாற்றில் ஒரு தனி இடம் பிடித்தே தீரும். 

வாச்சாத்தி தீர்ப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது வாச்சாத்தி என்ற கிராமத்தில் நடைபெற்ற வனக்காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமை பற்றிய கொடூரத்தை விளக்கிய  ஆவணப் படைப்பினை திரு பாரதி கிருஷ்ணகுமார் எடுத்திருக்கிறார். 

இவ்வழக்கினை சிபிஐ கையிலெடுத்து கிட்டத்தட்ட 269 அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த “உண்மை” வெற்றி பெற்ற சம்பவம் அது. அதை அவர் ஆவணப்படுத்தியிருந்த விதம் நெகிழச் செய்தது. இந்த தீர்ப்பினைக் எழுதிய நீதிபதி பிரபல கட்சியின் மாநில அமைப்பாளரும் எனது நெருங்கிய நண்பரின் உறவுக்காரர்.  நாங்கள் இருவரும் இத்தீர்ப்பினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது “மனச்சாட்சி” மற்றும் “சட்டத்தின்” படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். 

இந்த ஆவணப்படம் தமிழர்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளின் கொடுங்கோலாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய் இருந்தது. (சார், இன்னும் உங்களின் மூன்று படைப்புகளைப் பார்க்கவே இல்லை. மனது சரியாகட்டும் என்று காத்திருக்கிறேன்)

பாரதி கிருஷ்ணகுமாரின் இணையதளம் : www.bharathikrishnakumar.com

இனி விருதுக்கு வரலாம்.

அசோகமித்திரன் - படைப்பானது எப்போதும் இளமையாகவே இருப்பது போல அவரிடம் இளமை இருந்தது. அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அவரின் படைப்புகளை ஒரு வாசகியாக பாராட்டிய முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கண்களிலும் பேச்சிலும் அசோகமித்திரன் தெறித்தார். படுவீச்சு ! அசோகமித்திரனை நான் அதிகம் வாசித்திருக்கவில்லை. பாவாடை அகலமாயிருந்தால் பஸ்ஸில் ஏற வசதியாய் இருக்குமே என்று நினைக்கும் பெண்களின் உள்மனதைக் கூட படைப்புகளில் காட்டியிருக்கும் அசோகமித்திரன் பற்றி புகழ்ச்சி சூப்பர். இவர் கண்ணதாசனைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 

முத்துலிங்கம் - கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேலான திரைக்கலையுலக படைப்பாளி. அவரின் பாடல்கள் பற்றி பேசினார். கண்ணதாசனைப் பற்றிப் பேசினார். கொடுத்திருந்த நேரத்தில் திருக்குறளைப் போலச் சுருக்கமாய் பேசினார். முதுகுவலி என்று முதுமைக்கே உரிய காரணமொன்றினைச் சொன்னார். 

இசைக்கவி ரமணன் அவர்கள் பேசினார்கள். சிலாகிக்கும் அம்சங்கள் ஒன்றுமில்லை. பாடினார் ஆனால் பாருங்கள்  எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள். இவர் ஏன் அப்படிப்பாடினார் என்று புரியவில்லை. ஏதாவது காரணமிருக்கும். அது அவருக்கு நியாயமாய் இருக்கலாம். 

பேராசிரியர் ராமசந்திரன் - கண்ணதாசனைப் பற்றிப் பேச வந்து விட்டு, இந்தக் கால பட்டிமன்ற பேச்சினைப் பேசினார். பேராசிரியர் சார் என்னதான் சொல்லுங்கள் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிப் பேசினால் கேட்கின்றவர்கள் ஒருவர் கூட அவ்விடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியாது. கட்டிப் போடும் காந்தக்குரலோன் அவர். ஆனால் கடைசியாகப் பேச வந்த பேராசிரியர் வியர்த்துக் கொண்டே கிச் கிச் மூட்டிக் கொண்டிருந்தார். வேடிக்கையாக இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. 
அழியாத வரலாறு படைத்த கண்ணதாசன் அழகாய் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் எனக்குத்தான் இவ்விருது விழா முழுமையற்றதைப் போல தோன்றியது, பாதிவயதில் காலமுமாகிப் போன கண்ணதாசனைப் போல.

Thursday, June 20, 2013

நட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்

நேற்று ஆஃபீசுக்கு வரும்  வழியில் சத்திரோடு அன்னபூர்ணா ஹோட்டலின் முன்புறம் டிவிஎஸ் ஒன்று அடிபட்டு கீழே கிடந்தது. பல்சர் பைக்கில் மோதியவன் நின்று கொண்டிருந்தான். விழுந்து கிடந்தவன் கைலி கட்டி இருந்தான். ஆள் பார்க்க கிராமத்தான் போலிருந்தான். அன்னபூர்ணா செக்யூரிட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.  சாலையில் சென்று கொண்டிருந்தோர் ஒருவர் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இடித்தவன் அவன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவன் அவனாகவே தட்டுத்தடுமாறி எழுந்தான். கண்களில் கண்ணீர் வடிய வலியில் துடித்தபடி எழுந்தான். வண்டியை நிமிர்த்தினான். பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன் அழகாய் இல்லை. அவன் ஒரு பெண்ணாக இல்லை. அவனிடம் பளபளப்பான ட்ரஸ் இல்லை. அழுக்காய் இருந்தான். இச்சமூகத்தின் மன நிலையை இச்சம்பவம் எனக்கு பளீரென சுட்டிக்காட்டியது.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அவனுக்கு உதவ எனதுடல் ஒத்துழைக்காது. மனவலியுடன் அவன் மெதுவாக வண்டியை நிமிர்த்தி கண்ணீருடன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல்சர் பரதேசி எப்போதே சென்று விட்டான்.

சக மனிதன் துன்பத்தைக் கூட கண்டு கொள்ளாத உலகில் வாழ்வதை நினைத்து வேதனைதான் மண்டியது. 

எனது நண்பரொருவர் கணபதியில் வசிக்கிறார். அவருக்கு ஒரு நண்பர், அவர் ஒரு கோவில் பூசாரி. தனிக்கட்டை. கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை. 

அன்றைக்கு விடிகாலையில் பூசாரிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. வலியில் துடித்திருக்கிறார். நம் ஆயுள் முடியப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் ”உங்கள் சொந்தக்காரர் யாராவது இருக்கின்றார்களா, சொல்லி அனுப்புகிறோம்” என்று கேட்க அவர், “எனது நண்பரிடம் சொல்லுங்கள், அவர் வந்தால் க் கொள்வார்” என்றுச் சொல்லி இருக்கிறார். எனது நண்பருக்குத் தகவல் வந்து பூசாரியார் இருக்குமிடம் செல்லுகையில் உயிர் போய் விட்டது. விடிகாலை 5.45க்கு உயிர் பிரிந்து விட்டது. வேறு எந்தச் சொந்தக்காரரிடம் சொல்லவில்லை. தன் நண்பரிடம் மட்டும் தகவல் சொல்லி விட்டு அவர் விண்ணுலகை அடைந்து விட்டார். 

எனது நண்பர் பூசாரி நண்பனை மரியாதையுடன் தகனம் செய்து அத்தனை செலவினையும் செய்து விட்டு வீடு திரும்பினார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - திருவள்ளுவர் 

(நட்பின் உன்னதம் என்னவென்றால் எப்போதெல்லாம் நண்பன் துன்பப்படுகின்றானோ அவனுக்கு தன்னால் இயன்ற நிலையில் நின்று அவனின் துன்பத்தை நீக்குவது தான்  உண்மையான நட்பு)

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனின் நட்பினைப் பற்றிய சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று கூட நினைத்தேன். 

இக்காலத்தில் நட்பினால் தான் மிகப் பெரும் பகை வளரும். கூடாத நட்பின் விளைவாக சொத்து, சுகம் இழந்தவர்கள் எண்ணற்றோர். இப்படி இருக்கும் கலிகாலத்தில் மனதை சிலிர்க்கச் செய்யும் இச்சம்பவத்தில் நானொரு சாட்சியாக இருந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பித்தான் இப்பதிவு.

Monday, June 10, 2013

வெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை



நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்லும் போதெல்லாம் அகண்ட காவிரியில் சுழித்து ஓடும் தண்ணீர்ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளியல் போட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்து விட்டு, பகல் பனிரெண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அவரைத் தரிசித்து விட்டு வருவேன்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஓடி விட்டன. 

நேற்று நானும் என் குழந்தைகள் இருவரும் முள்ளங்காட்டில் இருக்கும் வெள்ளிங்கிரி சித்தர் ஜீவ சமாதிக்குப் பின்புறம் வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஆற்றில் குளித்து விட்டு வந்தோம்.

குளிர் தண்ணீர், மலையில் இருந்து வருகிறது. உடம்புச் சூடெல்லாம் வடிய கண்கள் சிவக்க குளித்தேன். காவிரியில் குளித்த அன்று இருந்த சந்தோஷம் நேற்று எனக்கு கிடைத்தது.

ஜோதி சுவாமி மாங்காய் சாம்பாரும், அருமையான ரசமும், முட்டைக்கோசு பொறியலும், பொங்கலும் தந்து உபசரித்தார்.

நெஞ்சம் நிறைந்து வீடு திரும்பினேன். பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் குளியல் போடுங்கள். மூலிகைத் தண்ணீர். உடலுக்கு நல்லது அல்லவா?