குரு வாழ்க ! குருவே துணை !!
சாப்பாட்டுக் கொண்டிருந்த போது உணவில் உப்பு, காரம், புளி குறைந்திருந்தது. உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று நினைத்துக் கொண்டேன். உப்பெல்லாம் கம்மியா இருக்கேன்னு கேட்டேன். போதும் போதும் என்று குரல் வந்தது அம்மணியிடமிருந்து. என்னடா இது? எப்பவும் மறந்துட்டேங்கன்னு சொல்ற ஆளு போதும் போதும்னு சொல்லுதுன்னு நினைச்சுக்கிட்டே சாப்பிட்டேன்.
முகமூடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் ட்ரையிலர் காட்டினார்கள். அட அம்மணியின் தங்கை மாதிரியே இருக்காளே ஹீரோயின் என்று நினைத்தேன். அத்துடன் சும்மா இருந்தால் பரவாயில்லை. அதை அம்மணியிடம் வேறு சொல்லி விட்டேன். சாப்பாட்டில் காரம், புளி, உப்பு எல்லாம் காணாமல் போய் விட்டது.
இப்படித்தான் எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்டேன். அது என்னவோ தெரியவில்லை மனைவிகளின் தங்கை மட்டும் அழகா இருக்காங்க. அதை வெளிப்படையா(!???) சொன்னா மனைவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. மூன்று நாளா உப்பில்லாம சாப்பிட்டதில் மூன்று கிலோ வெயிட் குறைந்து போய் விட்டது. இனி உப்பு போட்டு உணவு எப்போ கிடைக்குமோ தெரியவில்லை.
அத்துடன் விட்டேனா? அடுத்து பில்லி வேறு வைத்த கதை இருக்கிறது. அதைக் கேளுங்கள் !
”தங்கையை பார்த்து விட்டு வருவோம்” என்றாள் அம்மணி. ”சும்மா போனா நல்லாயிருக்காது, ஏதாவது வாங்கிக்கிட்டு போவோம்னு” சொன்னேன். நாங்கள் இருந்தது உழவர் சந்தை ஆகையால் இரண்டு கிலோ தக்காளியும், ஒரு கிலோ கேரட்டும் வாங்கிக் கொண்டு போனோம். போய்ப் பார்த்துட்டு சும்மா வந்திருந்தால் பில்லியிடம் இருந்து தப்பித்திருப்பேன்.
”என்ன மாமா தக்காளி, கேரட்டுன்னு” அம்மணியின் தங்கை கேட்க, தப்பா நினைத்துக் கொள்ளப் போகிறாளே என்று நினைத்துக் கொண்டு, ”உடம்பு சரியில்லை என்று சொன்னாயா? அதனால் கலர் கிலர் குறைஞ்சிருக்கும்னு தக்காளியும், கேரட்டும் வாங்கிக் கொண்டு வந்தேன்னு” சொன்னேன்.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது, “எவ்வளவு அக்கறை உங்களுக்கு?” என்றாள்.
“என்ன என்ன சொன்னாய்?”
“என் தங்கச்சிக்கு கலர் குறைஞ்சிருச்சுன்னு எவ்வளவு கவலை உங்களுக்கு?” என்றாள்.
பில்லியை நானே எப்படி வைத்துக் கொண்டேன் என்று பார்த்தீர்களா?
இப்படித்தான் பில்லி, சூனியம் வைப்பது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன் ! மனைவியின் தங்கைகள் ஏதும் இன்றி !
- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்
குறிப்பு : வாயைக் கட்டவில்லை என்றால் இப்படித்தான் ஆகும் என்பது பதிவின் மெசேஜ்.
குறிப்பு : வாயைக் கட்டவில்லை என்றால் இப்படித்தான் ஆகும் என்பது பதிவின் மெசேஜ்.
2 comments:
ஐயோ,அதெப்பிடிங்க கரெக்டா எனக்குள்ள இருந்து என் அனுபவத்த எழுதி இருக்கீங்க?
உண்மைய சொல்லுங்க என்னைப் பற்றி தங்களிடம் போட்டுக் கொடுத்தது?
கொச்சின் தேவதாஸ்
தேவதாஸ் சார்! நீங்களுமா? எனக்குப் புரியவே புரியாத மர்மம் ஒன்றிருக்கிறது.
என் செல்போனில் இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் பெண் மாடல்களின் போன் நம்பர்கள் தான் அதிகம். தினமும் பத்துப் பேராவது அழைப்பார்கள். பேசிக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் ஏதும் பேசாத அம்மணி,அவளின் தங்கை பற்றிப் பேசினால் எரிமலை ஆகி விடுகிறாள்.
அந்த ரகசியம்தான் என்னவென்று புரியவில்லை !
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.