குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 6, 2012

ஆன்மீகம் அறிவியல் மிஷ்கினின் முகமூடி பின்னும் உன்னால் முடியும் கோபிநாத்தும்




குரு வாழ்க ! குருவே துணை !!

மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின் முன்மாதிரிகள் அல்லது முன் வடிவங்களை நாம்  கிழக்கிந்திய ஆன்மீக நூல்கள் வாயிலாக கண்டு கொள்ளலாம். புஷ்பக விமானம் முதற்கொண்டு, ஏவுகணைகள் வரை அத்தனையும் தொன்மையான இந்திய ஆன்மீகப் பாதையில் புரண்டு கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போஸான் துகள் கூட அப்படியே. 

மனிதனும் பிரபஞ்சமும் - சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய நூலைப் படித்துக் கொண்டிருந்த போது, நூலின் பத்தாவது பக்கத்தில் ஒரு அடிக்குறிப்பு எழுதி இருந்ததைக் கண்டு வியப்பேற்பட்டது. பிரபஞ்சத்தில் இருப்பது இரண்டே இரண்டு பொருட்கள்தான். ஒன்று ஜடப்பொருட்கள் மற்றொன்று உயிராற்றல். கபிலர் இப்படித்தான் வரையறுத்து உள்ளார் என்கிறார் சுவாமி. மேலும் போஸான் பற்றிய முன்குறிப்பாய், 2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நூலில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பின்வருமாறு எழுதி இருக்கிறார்.

“அணுவை மட்டுமின்றி அதனுள்ளிருக்கிற புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கூடப் பிளக்க முடியும், துகள் துகளாக்க முடியும் என்று கண்டு பிடித்திருக்கிறது நவீன விஞ்ஞானம். இறுதியில் இன்னும் பிளக்க முடியாத, உடைக்க முடியாத ஒரு துகள் எஞ்சியிருக்கிறதா என்பது புதிராக இருந்து வருகிறது. அப்படி ஒரு துகள் கிடைத்தால், பிரபஞ்சக் கட்டிடத்திற்கு அதுவே செங்கல்”

போஸானைப் பற்றிய  மறைக் குறிப்பினை சுவாமிகள் எழுதி இருப்பதை நாம் அறியலாம். இது போன்ற எண்ணற்ற அடிக்குறிப்புகள் பலவும் பல ஆன்மீக புத்தகங்களில் மறைபொருளாய் கிடக்கின்றன. இந்திய ஆன்மீகத்தைப் பற்றிய அறிவு பரவலாக்கப்பட்டால் மேலும் மேலும் இயற்கையில் ஒளிந்திருக்கும் எத்தனையோ விஷயங்களை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.  போஸானின் தத்துவம் சிதம்பர நடராஜர் சிலையில் இருக்கிறது என்று தற்போது பேசிக் கொள்வது நமக்குத் தெரியும்.

உங்களுக்கு ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அக்னி, நெருப்பு, தீ, ஜோதி, ஜ்வாலை என்றெல்லாம் அழைக்கக்கூடிய நெருப்பு எப்படி உருவானது என்று சிந்தித்துப் பாருங்கள். அது ஏதோ ஒரு கல்லில் அல்லவா மறைந்து கிடந்தது. சாதாரண கல்லில் உலகை வாழ வைக்கும் அல்லது அழிய வைக்கும் ஊழித் தீயை உண்டாக்கும் கருப்பொருள் இருக்கிறது என்றால் பிறபொருட்களில் மறைந்து கிடப்பவை எத்தனையோ? அறிவியல் புலனின்ப அறிவுக்குள் அத்தனை காரணத்தையும் கண்டுபிடிக்க முனைந்து கொண்டே இருக்கிறது. அது நான்கு குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்வது போலத்தான் இருக்கும் என்கிறார் சுவாமி தம் நூலில். 

வழிகாட்டுதல்களுக்கு ஆன்மீக நூல்கள் அறிவியலுக்கு துணை செய்கின்றன. ஆனால் சிலர் வழிகாட்டுகிறேன் என்று வேறு எங்கோ சமூகத்தின் பாதையை திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று இயக்குனர் நண்பரொருவரின் வற்புறுத்தல் காரணமாய் முகமூடி திரைப்படத்திற்குச் செல்ல நேரிட்டது. தியேட்டர் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது ”அட்டகத்தி அளவுக்கு படம் கலெக்‌ஷன் சரியில்லை சார்” என்றார். ஆனால் தியேட்டரினுள் ஒரே ஒரு வரிசை மட்டுமே பாக்கி இருந்தது. தியேட்டர் ஃபுல். மேனேஜர் சரடு விட்டிருப்பாரோ என்று நினைத்தேன். முகமூடி திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இப்படத்தோடு போட்டி போடக்கூடிய வேறு ஏதும் திரைப்படம் இல்லாத காரணத்தால் நிச்சயம் முகமூடி நல்ல கலெக்சனை கொடுத்திருக்கும். வெளியீட்டில் கூட நேரம் காலம் பார்க்கணும். பெரிய படங்களோடு போட்டி போட்டால் இரண்டாவது நாளே படம் பொட்டிக்குள் போய் இருக்கும். யுடிவியின் சாமர்த்தியம் சரியானது தான்.

மூன்று மணி நேர தன் நினைவு மறப்பு என்பதற்காக, பொழுதினை போக்குவதற்காக படம் பார்க்கச் செல்லும் போது செல்போனை ஏன் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்றே தெரியவில்லை. எப்போதும் பேச்சுத்தானா? எதிலும் முழு ஈடுபாடு எவருக்கும் இருப்பதில்லை. பாட்டு வரும்போது சீட்டினை விட்டு எழுந்து செல்வது, வேறு எவராவது சினிமா ஹீரோ பெயரைச் சொல்லும் போது கழுதை தொண்டைக்குள் புகுந்தாற்போல வறட்டுக் கத்து கத்துவது, சீட்டி அடிப்பது, எழுந்து ஆடுவது போன்ற கோணங்கித் தனங்களைச் செய்யும் சக மனிதர்கள், இந்தச் சேட்டைகள் பிறருக்கு எரிச்சலைத் தரும் என்று ஏன் நினைக்க மறுக்கின்றார்கள் என்பது புரியவில்லை. அமைதியாய் உட்கார்ந்து சில்லிட்ட காற்றையும், இயக்குனரின் கலைப்படைப்பையும் ரசித்து விட்டு வந்தால் என்ன? மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மிருகத்தன்மைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சினிமா தியேட்டர்கள் ஒவ்வொன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. அது போகட்டும் !

பிரபல எழுத்தாளர் தஸ்தாவேயெஸ்கியின் ஏதோ ஒரு நாவலின் கதாபாத்திரத்தை தன் பெயராக வைத்திருக்கும் மிஷ்கினின் திரைப்படத்தில் மஞ்சள் சேலை குத்துப் பாட்டு கேட்கவும், பார்க்கவும் வெகு ரசனையாக இருக்கும். அப்படி ஒரு பாட்டு முகமூடி திரைப்படத்தில் இருக்கும் என்று நம்பினேன். மனிதர் ஏமாற்றி விட்டார். ஆனால் கொலை, போலீஸ் கதைக்களத்திலிருந்து மனிதர் இன்னும் திரும்பவில்லை. அஞ்சாதே, யுத்தம் செய் இரண்டு படங்களும் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்டதாய் இருந்தது. இளம்பெண்களை கற்பழிப்பது, வயதானவர்கள் இளம் பெண்களைக் கற்பழிப்பது போன்ற சித்திரங்கள் மிஷ்கினின் ட்ரேட்மார்க். சித்திரம் பேசுதடியில் ரவுடி தளம், நந்தலாலா - இவரின் படைப்பு அல்ல என்பதால் எழுதத் தேவையில்லை. நல்ல வேளை முகமூடியிலும் நரேன் முதிய மாமிகளை வன்புணர்ச்சி செய்யாமல் கொலையோடு விட்டு விட்டார். ஆகவே மிஷ்கினின் முகமூடி ரசனை எனக்குப் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இந்த முகமூடி ஓகே ரகம். இதற்கு மேல் ஏதும் செய்யமுடியாது. பாடல்கள் எல்லாம் அவரின் முந்தைய படங்களின் காப்பி போலவே இருக்கிறது. பிற்பகுதியை காமெடியாக்கி ஜிவ்வாவை கலாய்த்து விட்டார். ஜிவ்வா ரசிகர்கள் ஒருவரும் தியேட்டரில் விசில் கூட அடிக்கவில்லை.

தன் தாத்தாவிடம் உரையாடுவார் ஜிவ்வா.

”நான் ப்ரூஸ் லீ போல ஆவனும்” - ஜிவ்வா

“ஆகி என்ன செய்வாய்?” - தாத்தா

“ நல்லா ஃபைட் பண்ணுவேன்” - ஜிவ்வா

“ஃபைட் பண்ணி???” - தாத்தா

முழிப்பார் ஜிவ்வா.

ப்ரூஸ் லீ தனக்கென தனிப்பாதையை வகுத்து அதில் அவர் வெற்றி பெற்றார். அவரைப் போல மற்றொருவர் ஆக முடியாது. நீ யாராக வேண்டுமென்பதை நீயே தேடி கண்டுபிடி என்றுச் சொல்வார் ஜிவ்வாவின் தாத்தா.

இதைக் கண்டுபிடிக்க நம் கல்வி முறை உதவுவது இல்லை. மெட்டீரியல்ஸ் வாழ்க்கையை நோக்கிய பணத்தை சாரி பயணத்தைதான் இன்றைய கல்வி முறை சொல்லித் தருகிறது. அது மட்டுமல்லாமல் மீடியாக்களில் இதே கூத்துதான்.

உன்னால் முடியும் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கோபிநாத் பல தொழிலதிபர்களை வரவழைத்து அவர்களின் வெற்றிக் கதைகளையும், பிரச்சினைகளையும் கேட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர உதவி செய்கிறார் என்று எனது பல நண்பர்கள் பேசினார்கள். நல்ல நிகழ்ச்சி என்றும் சொன்னார்கள். எனக்கு அந்த நிகழ்ச்சி சுத்தமாய் பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் துடிப்பான இளைஞர்களைக் கேட்டுப்பாருங்கள்? ஒவ்வொருவனும் நான் அம்பானி போல வரணும் என்பார்கள். கோல்கேட் ஊழலில் நிலக்கரியை சட்ட விரோதமாய் வேறொரு தெர்மல் பவர் பிளாண்டுக்கு மாற்றிய வகையில் மட்டும் ரூபாய் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள் அம்பானி குழுமத்தார் என்கின்றன பல பத்திரிக்கைகள். அதுமட்டுமா பாலியஸ்டர் பிசினஸ்ஸில் இவர்கள் செய்திருக்கும் கோல்மால்களை வெளி நாட்டுக்காரர் புத்தகமாய் எழுதி வெளியிட, அதை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. இவரைப் போல ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த குற்றவியல் பின்னணி கொண்ட குழுமத்தின் செயல்பாடுகளைக் கேட்டால் திரும்பவும் அதே போல சொல்வார்களா? மனச்சாட்சியும், இந்தியாவின் மீதும், சமூகத்தின் மீதும் பிடிப்பு உள்ள எவரும் திரும்பவும் அதே பதிலை நிச்சயம் சொல்லமாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன். அவனது சூழலும் தனித்தன்மை வாய்ந்தது. வழிகாட்டுதல் என்பது மட்டுமே சரியாக இருக்குமே ஒழிய அவரைப் போல ஆவது, இவரைப்போல ஆவது என்று சமூகத்தினை தவறான வழிப்பாதையில் அழைத்துச் செல்லும் உன்னால் முடியும் நிகழ்ச்சி முற்றிலும் தவறானது. பிரபலங்களின் வெற்றிக் கதைகள் நமக்குத் தேவையில்லை. அவர்கள் வெற்றி பெற்றது அவர்களின் தனித்தன்மையினாலும், அவர்களின் சூழலினாலும் மட்டுமே. அதே சூழலும், அதே தனித்தன்மையும் எல்லோருக்கும் இருக்கவே இருக்காது. கோபிநாத்திற்கு மட்டுமே உதவியாக இருக்கும் இந்த வித நிகழ்ச்சிகள் வளரக்கூடிய எந்த ஒரு சமூகத்திற்கும் எந்த வித பிரதிபலனையும் தராது என்று நிச்சயம் என்னால் அடித்துக் கூற முடியும்.இதோ அதற்கான காரணம் கீழே இருக்கிறது.

ஒரு பெரிய பணக்காரனின் பையன் பிசினஸ் செய்ய வேண்டுமெனில் எளிதில் செய்வான், அதில் வெற்றியும் அடைவான். பிரபல அரசியல்வாதியின் பையன் நினைத்தால் அவனால் என்ன பிசினஸ் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதில் வெற்றியும் பெற முடியும். ஆனால் சாமானியன் ஒருவனால் முடியுமா? உன்னால் முடியும் கோபி நாத் இதற்கொரு பதிலைத் தருவாரா? பணமும், அதிகாரமும் இருப்பவர்களால் மட்டுமே பல பெரும் தொழில்கள் தொடங்க முடியும். சாமானியமானவன் காளான் வளர்க்க முடியும், சோப்புக்கட்டி விற்க முடியும். அந்தக் காலம் அல்ல இந்தக் காலம். இப்போது இருக்கும் காலம் சுய நலமும், ஈகோவும் நிரம்பிய மனிதக் கூட்டங்களால் நிரம்பியது. இதில் சாமானியனுக்கு எந்த வித வாழ்வியல் உரிமைகளும் எளிதில் கிடைப்பதில்லை. இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஏதாவதொரு அரசு சார்ந்த அமைப்புகளின் வாசல்களில் சென்று நில்லுங்கள். அப்போது உங்களுக்குத் தெரியும் நிதர்சனம் என்னவென்று.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முகமூடி - பிடிக்கவில்லை...
(குழந்தைகளுக்கே-நன்றாக தூங்கி விட்டார்கள்...)

மற்றபடி நல்ல அலசல் சார்... மிக்க நன்றி...

Anonymous said...

மத்த நாட்டுக்காரன் கண்டுபிடிச்சது எல்லாம் ஏற்கனவே எங்க ஊர் புத்தகத்தில் இருக்குன்னு சொல்றிங்க. அப்புறம் ஏன் நாம ஒண்ணுமே பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதும் செய்யல. சாதாரண மூக்கு கண்ணாடி கூட நம்ம கண்டு பிடிப்பு மாதிரி தெரியலையே. நம்ம நாட்டுல நெறைய அறிவியல் வளர்ச்சி இருக்கனும் அப்படீன்ங்கறது என் ஆசையும்தான். ஆனா போசோன் கண்டுபிடிப்பு ஏற்கனவே எங்க ஊர் புஸ்தகத்துல இருக்குன்னு சொல்றது ஏமாத்து வேலைதாங்க.

// பிரபஞ்சத்தில் இருப்பது இரண்டே இரண்டு பொருட்கள்தான். ஒன்று ஜடப்பொருட்கள் மற்றொன்று உயிராற்றல்
இத சொல்றதுக்கு எதுக்கு சுவாமி எல்லாம். உங்களுக்கும் என்னாகும் கூட தெரிஞ்ச ஒண்ணுதான்.

தொழில் தொடங்குறத பத்தி உங்கள் கருத்து வாஸ்தவம் ஆனதுதான்.

bandhu said...

முகமூடி இன்னும் பார்க்கவில்லை. கலவையான விமர்சனங்களை பார்த்தால், எனக்கும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

Thangavel Manickadevar said...

||| பிரபஞ்சத்தில் இருப்பது இரண்டே இரண்டு பொருட்கள்தான். ஒன்று ஜடப்பொருட்கள் மற்றொன்று உயிராற்றல்|||
***இத சொல்றதுக்கு எதுக்கு சுவாமி எல்லாம். உங்களுக்கும் என்னாகும் கூட தெரிஞ்ச ஒண்ணுதா***

உங்களுக்கும் யாராவது சொல்லித்தானே இவ்விஷயம் தெரிந்திருக்கும்?

தாங்கள் கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் எழுத முயல்கிறோம்.

Unknown said...

உங்களது ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அருமை. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/spiritual என்ற இணையதள முகவரியை பார்த்தேன். அதில் ஆன்மீக தகவல்கள். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.