குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 13, 2012

முழுமுதற் இறைவன் யார்? ஒரு விளக்கம்



குரு வாழ்க ! குருவே துணை !!

மெய்யன்பர்களே !
பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியாதிருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே, சிவன் கோவல்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தைத் தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக் காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

சிவலிங்கம் மூன்று கூறுகளுடையன. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமணி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடு பொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன்மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகாவிஷ்ணுவின் நவசக்திகளாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் ‘ஸ்திதி’ கர்த்தரான விஷ்ணுபாகத்தை உணர்த்துவதாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயரனார்க்கே’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே ‘மாதாயமாலவனை மாயவனை’ என்றும் அருளிச் செய்திருக்கின்றார்கள்.

அதனால் தான்  நமது அப்பனாகிய மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமா மகேஸ்வரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன் என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ள பாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்பரும் த்ரெளபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும்.
பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்கும் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புகதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். 

இம்மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும். ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மகாவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங்களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒருங்கே கிடைக்ககூடியதாகவும் இருக்கின்றதென்பதை வேதாகமங்கள் வலியுறுத்துகின்றன.

புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள் சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல சொல்லி வரும்,

மூலதோ பிரஹ்மரூபாய, 
மத்தியதோ விஷ்ணுரூபிணி,
அக்ரஹ்த சிவரூபாய,
விருக்‌ஷராஜாயதே நம.

என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேற்பாகம் போல அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியான எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக் கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும். 

அதனாலாயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும், மதுரை மீனாக்‌ஷிசுந்தரேசுவரர் அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண்கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜா துரந்தர்களாக இருக்க, அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெறுவதற்கு விஷேசத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராம நாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் ஹனுமார் தனியாக காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம்.
கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். 

கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீவிநாயகப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கப் பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

- தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 இல் பக்கம் 89,90,91 ( திருப்புறம்பயத் தல வரலாறு பகுதி)

சிந்திக்கவும், சிலிர்க்கவும் ஒரு குறிப்பு :

நமது தமிழர் பாரம்பரியத்தின் கல்வி ஐந்திரம் என்பதாகும். எண்ணியம்(சாங்கியம்), ஓகம், உலகாய்தம் ஆகிய இம்மூன்று கோட்பாடுகளும் வேதங்களை விட உயர்வானதாக மதிக்கப்பட்டனவாம். அரசர்கள் கல்வியில் இம்மூன்றும் முதன்மை பெற்றிருந்தனவாம். கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐந்திரம் கல்வியின் பிறப்பிடமாய் தமிழகம் திகழ்ந்தது. வட நாட்டிலிருந்தெல்லாம் இக்கல்வியைக் கற்றிட வந்தனராம். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராம். ஐந்திரக்கல்வி அறிவு வேட்கையைத் தூண்டி, மக்களை நன்னெறிபடுத்தியதாம். உலகிலேயே இரண்டே இரண்டு ஐந்திர நூல்கள் மாத்திரமே உண்டாம். அவை தொல்காப்பியமும், திருக்குறளுமேயாம். ( க. நெடுஞ்செழியன் - தமிழரின் அடையாளங்கள் நூலில் இருந்து)

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல வித்தியாசமான பதிவுகளை உங்களிடமிருந்து சில நாட்களாக படிக்கிறேன்... மிக்க நன்றி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.