குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 28, 2011

தேர்வு சில நினைவுகள்


(இது மனோரா என்றழைக்கப்படும் கடற்கரையோர அந்தக்கால கலங்கரை விளக்கம். வெகு அருமையான சுற்றுலாத் தளம்)

ஆவணம் கிராமத்திலிருந்து பேராவூரணிக்குத் தான் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதச் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். விடிகாலையில் எழுந்து குளித்து, கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு நானும் போஸும்(எங்களின் வயல் வேலை செய்து வந்தவர்) சைக்கிளில் கிளம்புவோம். குறுக்கு வழியாய் காவிரி ஆற்றின் கிளையாற்றினை ஒட்டிய சாலையில் ஆரஸ்பதி மரங்கள் வரிசையாய் நிற்கும் நிழலில் மெதுவாய் சைக்கிளை மிதிப்பார் போஸ்.

கோடை காலம் ஆதலால் ஆற்றில் தண்ணீர் வராது. கதிர் அறுப்பு முடிந்து போய் வயல் வெளிகளில் ஆங்காங்கே வைக்கோல் போருகள் குட்டி குட்டியாய் காட்சியளிக்கும். பொறுக்கு மண் அடிக்கும் வண்டிகள் வயல்களுக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அப்படியே மெதுவாய் ஆற்றோரமாய் வந்து கொண்டிருக்கும் போது ஆறு ஒரு இடத்தில் முடிந்து போய் இருக்கும். அது என்னவென்றால், ஆற்றுத் தண்ணீர் முழுமையும் ஒரு இடத்தில் குழாய் போன்றிருக்கும் பகுதிக்குள் கொட்டும், அத் தண்ணீர் பத்து மீட்டர் பூமிக்குள்ளே பதியப்பட்டிருக்கும் குழாய் வழியாகச் சென்று வெகு வேகமாய் மறு முனையில் கொப்பளித்துக் கிளம்பி வேகமாய்ச் செல்லும். தண்ணீரின் வேகம் குறையாமல் இருக்க அப்படி ஒரு சிஸ்டம் வைத்திருந்தார்கள். ஊரில் அதைக் கேணிப்பாலம் என்பார்கள்.

அதைத் தாண்டிச் செல்லுகையில் ஓரிடத்தில் போர் மூலம் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். வருடம் முழுவதும் அப்பகுதியில் விவசாயம் நடந்து கொண்டிருக்கும். பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரியும். அப்படியே சிறிது தூரம் கடந்து சென்றால் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும் ஊர் வழியாய் பேராவூரணியில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று சேர்வோம்.

நான் படித்த காலத்தில் அறிவியலில் 40 மதிப்பெண்ணுக்கு ஒற்றை வார்த்தையில் விடையளிக்கும் கேள்விகள் இருக்கும். நாற்பது வார்த்தைகள் எழுதி விட்டால் போதும் எளிதில் தேர்வாகி விடலாம். இத்தேர்வின் போது போலீஸ்காரர்கள் பள்ளியில் கேட்டருகில் அதிகம் தென்படுவார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து ”எழுதிக்கோங்கோ எழுதிக்கோங்கோ”  என்று பெரும் சத்தம் கேட்கும். ஒருவன் சைக்கிளை வேகமாக ஓட்டுவான். ஒருவான் பின்னால் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்வான். இவர்களைப் பார்த்ததும் போலீஸ்காரர்கள் துரத்துவார்கள். ஆனால் விடாமல் 40 விடைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வார்கள். சுமாராக படிக்கும் சில மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் 40 கேள்விகளையும் எழுதி பேனா மூடிக்குள் வைத்து வெளியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அதை எடுத்து பதில் எழுதி சத்தமாய்ச் சொல்வார்கள். அனைவரும் எழுதிக் கொள்வோம். நான் பதில்களைச் சரிபார்ப்பேன்.

வருடம் தோரும், இது ஒரு பெரும் சுவாரசியமான சம்பவமாய் நடக்கும். எத்தனையோ மாணவர்களில் அறிவியலில் தேர்ச்சி அடைய இந்த வழி காரணமாய் இருந்திருக்கிறது. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதுக்குள் சிரிப்பொன்று பூக்கும்.

தேர்வெல்லாம் முடிந்த கடைசி நாட்களில் பேராவூரணி சக்கரம் தியேட்டரில் மேட்டினி சினிமாவொன்றினைப் பார்த்து விட்டு திரும்ப வருவோம். போரிலிருந்து ஊற்றிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கண்கள் கோவைப்பழமாய் சிவக்கச் சிவக்க ஒரு ஆட்டம் போட்டு விட்டு, வீடு வந்து சேர்வோம். 

அந்த நாட்கள் எல்லாம் நினைவுகளூடே இன்றைக்கும் பசுமையாய் நின்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் சுவாரசியமான சம்பவங்கள் சில சமயங்களில் சோர்வுற்ற மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

2 comments:

Unknown said...

நல்லாயிருக்கு தங்கம்

Unknown said...

அந்த நாட்கள் எல்லாம் நினைவுகளூடே இன்றைக்கும் பசுமையாய் நின்று கொண்டிருக்கின்றன.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.