இதோ இன்றைக்கு எனது காதல் திருமணத்தின் பத்தாம் ஆண்டு நாள். பத்து வருடத்திற்கு முன்பு, இன்றைய காலையில் தான் தஞ்சாவூரில் இருக்கும் அய்யனார் கோவிலில் மதியம் பனிரெண்டு மணிக்கு எனது காதலிக்கு திரு மாங்கல்யம் அணிவித்தேன். நான் படிக்க வைத்த மோகன் என்ற பையனும், டிரைவரும் ஆசீர்வாதம் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால், கோவிலின் அருகில் இருந்த செம்பருத்தி பூவை பறித்து, மலர் தூவினர். எங்கள் கல்யாணம் சம்பிரதாயங்களை மீறிய ஒன்று. எவரும் அய்யனார் கோவிலில் திருமணம் செய்யமாட்டார்கள் என்றுக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அய்யனார் எனக்குப் பிடித்தவர்.
திருமணம் முடிந்த பிறகு தான் அடுத்த போராட்டமே ஆரம்பிக்கும். உறவுகளின் எதிர்ப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நானும் என் மனைவியும் அனுபவிக்க ஆரம்பித்தோம். ஆனால் யாரையும் எதிர்ப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆண்டாண்டு காலமாக இருந்த ஒரு நம்பிக்கைக் கோட்டை இருவரும் தகர்த்தோம். அதன் அதிர்வுகள் தீர நாட்களாகும் என்று நாங்கள் அமைதியாய் வாழ்க்கையின் சிக்கல்களில் மாட்டினோம்.
தொழிலில் 30 லட்ச ரூபாயை இழந்தேன். மாட்ரிட்டில் நடந்த குண்டு வெடிப்பில், நான் இழந்தது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். இருந்த வசதி வாய்ப்பெல்லாம் எங்களை விட்டுக் காணாமல் போனது. ஒரு ரூபாய் காசின்றி இருப்பேன். இந்தச் சமயத்திலும், ஏக்கர் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் நான் எந்த வித உதவியையும் என் வீட்டிலிருந்து எதிர்ப்பார்த்ததில்லை. ஆட்களை வைத்து வேலை செய்தவன், மற்றொருவரிடம் வேலை செய்தேன். இரவு பகல் பாராமல் உழைத்தேன். இந்தச் சமயங்களில் உணவுக்குப் பிரச்சினையாக இருக்கும். இரண்டு வருடம் தினந்தோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டேன். என் பையனும், மனைவியும் சோற்றில் உப்பும், தண்ணீரும் சேர்த்துதான் சாப்பிடுவார்கள். என்றாவது ஒரு நாள் காய் கறிகள் வாங்குவோம். இடையில் வந்து சென்ற தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்த சுவடுகள் இன்றியே சென்றன. புது உடைகள் அணிய பணமிருக்காது. ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையும் யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு மனைவி வீட்டினைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்.
நீண்ட நாட்கள் கழித்து தேடி வந்த உறவுகளை வரவேற்றோம். ஏனென்றால் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம். இக்கால கட்டங்களில் நான் அடைந்த பக்குவங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்றைக்கு எங்களது உறவு வட்டத்தில் நாங்கள் ஒரு முன்னுதாரண தம்பதிகள். ஏனென்றால் நாங்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதனை நன்கு புரிந்தவர்கள். நண்பர்களும், உறவுகளும், சமூகமும், உலகமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நாங்கள் எங்களை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டோம். பிரச்சினைகளில் இருந்து தப்பித்து, மற்றவர் பிரச்சினைக்கு ஆலோசனை சொல்லும் இடத்திற்கு முன்னேறி விட்டோம்.
என் மனைவியிடம் “ நீங்கள், ஹீரோயின் மாதிரி இருக்கின்றீர்கள்? எப்படி இவரைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றார்கள்” என்று ஒரு பெண்மணி கேட்டிருக்கின்றார். அதற்கு என் மனைவி சொன்னது “ என் வீட்டுக்காரரை விட அழகானவர், அன்பானவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை”.
தாம்பத்தியம் என்றால் விட்டுக் கொடுத்தல் என்று தான் அர்த்தம் வரும். எனக்கு கோபம் வரும். கன்னா பின்னாவென்று சத்தமிடுவேன். ஆனால் அடுத்த நொடி அக்கோபம் என்னை விட்டுக் காணாமலே போய் விடும். ஏனென்றால் கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள் என்று என் மனைவி சொல்வார்.
காய்கறிகள் வெட்டுவதிலிருந்து, சமைப்பதிலிருந்து, துணி துவைப்பது வரையில் நான் உதவிகள் செய்து வருவேன். ஏனென்றால் நான் செய்வது என் குடும்பத்திற்கு என்பது எனக்குத் தெரிகிறது.
எங்களுக்கு இரண்டு வாரிசுகள் இருக்கின்றனர். பையன் ரித்திக் நந்தா, பெண் நிவேதிதா இருவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
டிவியில் ஒரு நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்தவர்களில் நூற்றுக்கு 90 பேர் பிரிந்து விடுகின்றனர் என்றார். அவர்கள் காதல் செய்யவில்லை. காமம் செய்தார்கள் என்று புரிந்து கொண்டேன்.
காமத்தில் ஆரம்பிக்கும் அன்பு, காதலில் முடிந்து அது குழந்தைகளாய் வடிவெடுத்து வளர ஆரம்பிக்கும் தருவாயில் வாழ்க்கையின் மற்றொரு பாதையில் நாம் பயணிப்போம். அந்தப் பாதையில் நாங்கள் வெற்றிகரமாய் பயணம் செய்கிறோம்.
என் லட்சியங்கள் நிறைவேற நான் மிகக் கடுமையாக உழைத்து வருகிறேன். என்னை உற்சாகப்படுத்தி,ஊக்கப்படுத்தி வருகிறார் மனைவி. இந்த நேரத்தில் என் லட்சியங்கள் வெற்றி பெற, என்னை நெறிப்படுத்தி, ஒழுங்குப் பாதையில் அழைத்துக் கொண்டு, என்னோடு சேர்ந்து வரும் எனது சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் என் வாழ்க்கையில் நான் நன்றிச் சொல்ல வேண்டியவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சேர்த்துச் சொல்கிறேன்
“இறைவா எங்களை ஆசீர்வதியுங்கள்”