குரு வாழ்க ! குருவே துணை !!

Thursday, April 9, 2009

கையளவு இதயம் !

தங்கியிருந்த அறையிலிருந்து படிக்கும் அறைக்குச் செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். வழியில் சிறு கற்கள் பாவிய சாலை. காலையில் எழுந்து குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு தூய ஆடை உடுத்தி மண் தரையில் தவழ்ந்து செல்வேன். உச்சி வெயிலில் சாலையில் கொட்டிக் கிடக்கும் கற்கள் எல்லாம் நெருப்புக் கங்குகளைப் போல சுடும். மண் தரையோ அமிலத்தை உள் வாங்கியதாக கொதிக்கும். கிளாஸ் முடிந்ததும் தவழ்ந்து வருவேன். முட்டியில் கொப்பளித்து விடும். கைகள் சூட்டில் வெந்து சிவந்து கிடக்கும். கண்களில் கண்ணீர் ததும்பும். உள்ளுக்குள் வேறு படிக்க வேண்டுமென எரிந்து கொண்டிருக்கும் ஆசை தகிக்கும். நெஞ்சுக்குள் சூடு கிளம்பும். வியர்த்து விறுவிறுத்துப் போகும் உடம்பு சோர்வடையும். பல்லைக் கடித்துக் கொண்டு இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான், இதோ வந்து விட்டது என்று துவண்டு விழும் கைகளும், முட்டியும் கடு கடுக்க தவழ்ந்து செல்வேன். சூட்டில் வெந்து போன முட்டிக்குள் சிறு மணல்கள் புகுந்து கொண்டு தவழ முடியாமல் விண் விண்ணென்று வலிக்கும். சுளீர் சுளீரென்று வலி உடலெங்கும் பரவும். வலி... வலி...

மழை ! சேறும் சகதியும் சேர்ந்து சாலையில் கிடக்கும். சுத்தமாக குளித்து விட்டு கிளாசுக்குச் செல்லும் வழியில் கைகால்கள் எல்லாம் சேறும் சகதியும் ஒட்டிக் கொண்டு வெயிட் ஏறி தவழ இயலாமல் பாரமாய் இருக்கும். சாப்பிடும் கைகள் சேற்றுக்குள் கிடந்து உழலும். சகதிக்குள் கிடக்கும் கப்பிக்கல் முட்டியில் குத்தும். வலி.. வலி... கண்கள் வலி தாங்காமல் தன்னாலே கண்ணீரைத் துப்பும். தவழ்ந்து செல்லும் போது ஏற்படும் வியர்வையில் கண்ணீரும் சேர்ந்து காணாமல் போய் எனது வைராக்கியத்திற்கு வலுச் சேர்க்கும்.

ஒரு முறை கல்லூரியில் நடந்த வன்முறையின் காரணமாக உடனடியாக விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம். கல்லூரியும், ஹாஸ்டலும் காலியானது. யாரையோ பிடித்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்று சேர்ந்தேன். அப்போது நேரம் காலை பத்து மணி. எண்ணற்ற பஸ்கள் கடந்து சென்றன. ஒன்றிலும் ஏற முடியவில்லை. கூட்டம். கூட்டம். என்னைப் பார்த்ததும் பஸ் டிரைவர்கள் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றார்கள். சூடு கொப்பளிக்கும் சாலையில் சென்று அடுத்த பஸ்ஸிற்காக காத்திருப்பேன். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விடும். மாலை ஆறு மணிக்குத்தான் ஒரு பஸ் நின்றது. ஏறினேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து ஊரு வர விடிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. ஏழு மணிக்கு ஊரின் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த என் உறவுக்காரர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். உடம்பு சோர அசதியில் படுத்தேன். உணவு உண்டு இரு நாட்களாகி இருந்தன. இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு முறை பஸ்ஸில் பிரேக் அறுந்து விட அனைவரும் வெளியே குதித்தோடி தப்பி விட்டனர். நான் எப்படி இறங்குவது? டிரைவரும், கண்டக்டரும் திட்டினார்கள். என்னால் இறங்க முடியாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. டிரைவரும் ஒரு வழியாக இறங்கிவிட பஸ் தானாக சென்று புளிய மரத்தின் மீது மோதி நின்றது. அந்தச் சூழ் நிலையிலும் பஸ் கம்பியினை இறுகப் பற்றிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறினால் உட்கார இடம் கிடைக்கவே கிடைக்காது. எனது இரு கைகளையும் எத்தனையோ செருப்புக் கால்கள் மிதித்திருக்கின்றன. சேறும் சகதியும், எச்சிலும், கோழையும் துப்பிக் கிடக்கும் பஸ் ஸ்டாண்டுகளில் தவழ்ந்து சென்று பஸ் ஏறுவேன். கொஞ்சம் கூட அசூசையோ வெறுப்போ கொண்டதில்லை. ஏன் எனக்கு மட்டுமிப்படி என்றும் எண்ணியதில்லை. எவரைப் பற்றியும் கவலையும் பட மாட்டேன். எனக்குத் தேவை கணிணி அறிவியலில் முதல் வகுப்பில் தேர வேண்டும். குறிக்கோளினை அடைய என்ன துன்பம் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவும், தைரியமும் நெஞ்சுக்குள் கனலாய் தகித்துக் கொண்டிருந்தது. முடிவில் அடைந்தே விட்டேன்.

கையளவு இதயம் ! அது தான் சாதனைக்கு கருவி !

6 comments:

இராகவன் நைஜிரியா said...

தம்பி தங்க வேலா... அழுதுட்டேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க.

மனிதர்கள் இப்படி மாறியதன் காரணம் என்ன வென்று புரியவில்லை.

Joe said...

வாழ்த்துக்கள்.

தம்பி.... said...

Bro i wish u more success,God is Great.

ர.கிருஷ்ணசாமி said...

தங்கவேல்,

இன்று படும் துன்பங்கள் நாளைய உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக படியுங்கள்... வாழ்த்துக்கள்

Thangavel Manickam said...

பின்னூட்டமின்ற நண்பர்களுக்கு வணக்கம். கிருஷ்ணசாமி அவர்களே எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். எனது கல்லூரிப் படிப்பின் போது நான் பெற்ற அனுபவங்கள் அவை (வருடம் 1992 - 1995) என்னைப் போன்றவர்களைப் பார்த்து இரக்கமே படாதீர்கள். உன்னால் சாதிக்க முடியும். உலகம் உன்னை திரும்பி பார்க்கும். முயற்சி...முயற்சி செய் என்று சொல்லுங்கள். அது போதும். ராகவன்ஜி, இலங்கையில் தமிழக(!!!) மக்கள் படும் வேதனையை விடவா நான் பட்டு விட்டேன். வருத்தப்பட ஒன்றுமே இல்லை.

விக்னேஷ்வரி said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்களை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.