குரு வாழ்க ! குருவே துணை !!

For Property Consultation (All Work) ::::: Phone : 9600577755 ::::: Email :covaimthangavel@gmail.com
Showing posts with label நிலங்கள். Show all posts
Showing posts with label நிலங்கள். Show all posts

Tuesday, April 5, 2011

சொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1

அன்பு நண்பர்களே,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் பெயரில் ஏதேனும் ஒரு சொத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு இடத்தில் கையளவு நிலம் வாங்கிப் போட்டால் அது தரும் பெருமித உணர்ச்சியே வேறு. நிலம் வாங்கியவர்களுக்கு அடையாளம் என்று ஒன்று கிடைத்து விடும். இன்றைய கால கட்டத்தில் சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வருவாய்த் துறை (Revenue Department) கீழ் இருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தான் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)

பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================

நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை ஒரு சொத்திற்கான பதிவேடுகள் என்னென்ன என்பதைப் பார்த்தோம். அடுத்து சொத்து வாங்கும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாதம் மூன்று லட்சம் வருமானம் வரும் பண்ணை வீட்டுடன் கூடிய சொத்து ஒன்றினை விற்பனைக்காக, நிலத்தின் உரிமையாளர் ஃபார்ச்சூன் பிரிக்சிடம் கொடுத்திருக்கிறார். அச்சொத்து வேண்டுவோர் மேலும் விபரங்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸினை அணுகலாம்
தொடர்பு எண் : 0422 4275976

மேலும் விபரங்களுக்கு : http://www.fortunebricks.net

Sunday, May 30, 2010

வாழ்வின் சூட்சுமம் தெரிந்த நாள்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மெட்ரிக் பள்ளியின் கணிணி ஆசிரியராகவும், இரண்டு சாரதா கல்லூரி மேலும் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளின் கணிணி நிர்வாகியாகவும் பணி புரிந்த போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

ஊனத்தின் காரணமாய் எனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக திருமண வாழ்வு பற்றி நான் என்றைக்கும் எண்ணிப் பார்த்தது இல்லை. எதை வேண்டாமென்று எண்ணுகிறமோ அந்தச் சூழலில் தான் நீ வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை நான் வேலை செய்தது மகளிர் கல்லூரியில். ஆனால் இருந்ததோ சாமியார்கள் அருகில்.

தனி அறையும் அட்டாச் பாத்ரூம் வசதியுடன் மிகவும் வசதியாக தங்கி இருந்தேன். அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கும். யாராவது கெஸ்ட் வந்தால் அவர்கள் என்னுடன் தங்கி இருப்பர். அப்படி ஒரு நாள் வந்தவர்தான் பசுபதீஸ்வரானந்தா அவர்கள். வயது 96 இருக்கும். கை கால்களும் ஒரு தாள லயத்தில் உதறிக் கொண்டிருந்தன. தலையோ நிற்காமல் அங்குமிங்கும் ஆடியபடியே இருந்தது. கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார். தலையாட்டத்தின் காரணமாய் கண்ணாடி கழன்று விடாமல் இருக்க அழுக்கேறிய கயிறு ஒன்று தலையைச் சுற்றி கட்டியிருப்பார்.

என்னைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். விடிகாலையில் நான்கு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. வலது காலின் கட்டை விரலை ஊன்றி லங்கோடுடன் சுமார் முக்கால் மணி நேரமாய் ஆடாமல் அசையாமல் கல்லில் வடித்த சிலைபோல நின்று கொண்டிருந்தார் பசுபதீஸ்வரானந்தா. ஆடிய தலையும், கைகால்களும் ஆடாமல் அசையாமல் இருந்தன. முக்கால் மணி நேரம் சென்ற பிறகு பத்து நிமிடம் நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் பாத்ரூமிற்குள் சென்று குளித்தார். விபூதி அணிந்தார். கட்டிலில் உட்கார்ந்தார். அதன் பிறகு தலையும், உடலும் ஆட்டம் போட்டன. போர்வைக்குள்ளிருந்து நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். இல்லையென்றேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லையென்றேன். உனக்கு திருமணம் நடக்கும். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இருப்பார்கள். தெய்வமே உனக்கு மனைவியாய் வரும் என்றார். சாமி, ஏன் சாமி இப்படி ரகளை செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டேன். நான் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றும் அதுதான் என் ஆசையென்றும் சொன்னேன். ஆத்மானந்தா சொன்னாரா என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்.

என் இளவயதில் நானும் கடவுளைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சாமியாராய் மாறினேன். இமயமலை சென்றேன். ரிஷிகேஷ் சென்றேன். திருவண்ணாமலை சென்றேன். எனக்குத் தெரியாத யோகமும் தவமும் இல்லை. சாப்பிடாமலயே ஒரு வருடம் கூட இருப்பேன். தியானத்தில் ஆழ்ந்தால் எத்தனை நாட்களோ தெரியாது. அப்படிப்பட்டவன் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள் என்றுச் சொல்லி தொடர்ந்தார்.

இன்னும் சில வருடங்களில் நான் இறந்து போய் விடுவேன். நான் செய்த இத்தனை தவத்தினாலும் யோகத்தினாலும் இதுவரை கடவுள் எனக்கு காட்சி தரவே இல்லை. கடவுளைப் பார்க்காமல் விடமாட்டேன் என்று இமயமலையில் திரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்ப்பட்ட சாமியார் சொன்னார் ” நீயே தெய்வம் ”

அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது. இதோ என் வாழ்வையும் சேர்த்து நீ வாழ். நீ விரும்புகிறாயோ இல்லையோ உனக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொரு கட்டமாய் நீ பக்குவப்படுவாய். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

இதோ எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். மனைவி என்னை தன் குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். என் தாய் என் மனைவியைப் பார்த்து என்னிடத்தில் சொன்னார் “ நான் உன்னிடத்தில் எப்போதும் இருப்பேன்” என்று.

”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” :- இயேசு நாதர்.

Friday, May 28, 2010

வாழ்விற்கு தேவை சந்தோஷமா? பணமா?


இன்றைய காலச் சூழலில் மனிதர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், மன நலம் பற்றி மனிதர்கள் கொஞ்சம்கூட யோசிக்கும் திறமையற்றவர்களாய் காசுக்கு வேலை பார்க்கும் இயந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். லட்சங்களில் கொடுக்கப்படும் சம்பளம் பின்னர் மால்களின் மூலமாக வசூல் செய்து விடுகிறார்கள்.

வெறும் 200 ரூபாய் பொருமானமுள்ள சாதாரண டிசர்ட் 2000 ரூபாய்க்கு பிராண்ட் பெயரில் விற்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது. பிராண்ட் மோகத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே, ஏமாளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தனது ஈகோவினால் தனது உழைப்பை பிறர் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் ஏமாந்து போவதுதான் வேதனை.

வாழ்க்கை என்பது வேறு வகையானது. அது கொண்டாடப்பட வேண்டியது. மனித வாழ்க்கையின் தத்துவமே பிறருக்காக வாழ்வது தான். ஆனால் இன்றைய நவ நாகரீக மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வெறும் பத்து செண்ட் நிலத்தில் தனக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்கும் ஒரு விவசாயியின் பேட்டியைக் படித்துப் பாருங்கள். இந்த விவசாயிக்கு முதலாளி என்று எவரும் இல்லை. காலை 10 மணி இரவு 7 மணி என்ற கணக்கு இல்லை. தானே முதலாளி தானே தொழிலாளி என்று வாழும் இந்த விவசாயியை விடவா நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள்?பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதியும், விவசாயியின் புகைப்படமும். நன்றி பசுமை விகடன்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்.

''ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டுஇருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட்) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு. குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு, கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி... இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன், பத்து சென்ட் நிலத்தில் புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.

புடலைச் சாகுபடி செய்வது எப்படி என்பது நமக்கு இவ்விடத்தில் தேவையில்லை. பாஸ்கரனின் உழைப்பு என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. உடல் நலம், குடும்ப நலம், சந்தோஷம் போன்றவைகளுக்கு மொத்த குத்தகைதாரராக அல்லவா இருக்கிறார். எங்கே இந்த சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் இருக்கிறதா என்பதை சற்றே நிதானித்து ஆராய்ந்து பாருங்கள்.

அன்புடன் - தங்கவேல் மாணிக்கம்