குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Friday, May 28, 2010

வாழ்விற்கு தேவை சந்தோஷமா? பணமா?


இன்றைய காலச் சூழலில் மனிதர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், மன நலம் பற்றி மனிதர்கள் கொஞ்சம்கூட யோசிக்கும் திறமையற்றவர்களாய் காசுக்கு வேலை பார்க்கும் இயந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். லட்சங்களில் கொடுக்கப்படும் சம்பளம் பின்னர் மால்களின் மூலமாக வசூல் செய்து விடுகிறார்கள்.

வெறும் 200 ரூபாய் பொருமானமுள்ள சாதாரண டிசர்ட் 2000 ரூபாய்க்கு பிராண்ட் பெயரில் விற்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது. பிராண்ட் மோகத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே, ஏமாளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தனது ஈகோவினால் தனது உழைப்பை பிறர் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் ஏமாந்து போவதுதான் வேதனை.

வாழ்க்கை என்பது வேறு வகையானது. அது கொண்டாடப்பட வேண்டியது. மனித வாழ்க்கையின் தத்துவமே பிறருக்காக வாழ்வது தான். ஆனால் இன்றைய நவ நாகரீக மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வெறும் பத்து செண்ட் நிலத்தில் தனக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்கும் ஒரு விவசாயியின் பேட்டியைக் படித்துப் பாருங்கள். இந்த விவசாயிக்கு முதலாளி என்று எவரும் இல்லை. காலை 10 மணி இரவு 7 மணி என்ற கணக்கு இல்லை. தானே முதலாளி தானே தொழிலாளி என்று வாழும் இந்த விவசாயியை விடவா நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள்?



பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதியும், விவசாயியின் புகைப்படமும். நன்றி பசுமை விகடன்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்.

''ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டுஇருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட்) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு. குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு, கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி... இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன், பத்து சென்ட் நிலத்தில் புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.

புடலைச் சாகுபடி செய்வது எப்படி என்பது நமக்கு இவ்விடத்தில் தேவையில்லை. பாஸ்கரனின் உழைப்பு என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. உடல் நலம், குடும்ப நலம், சந்தோஷம் போன்றவைகளுக்கு மொத்த குத்தகைதாரராக அல்லவா இருக்கிறார். எங்கே இந்த சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் இருக்கிறதா என்பதை சற்றே நிதானித்து ஆராய்ந்து பாருங்கள்.

அன்புடன் - தங்கவேல் மாணிக்கம்