ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நாளே. சுவாரசியங்களும், ஆச்சரியங்களும், கோபங்களும், தாபங்களும் உருவாகிக்
கொண்டே இருக்கின்றன. காரணம் என்னவென்று பார்த்தால் அத்தனையும் மனிதர்களின் அறிவிலித்தனத்தால்
என்பது தெரியவரும். மனிதர்களால் தான் பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே சிக்கலுக்குள் உள்ளாகிறது.
கொரானா தொற்று
பரவி பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் அடங்கி இருப்பதாகத் தெரியவில்லை. அவரவருக்கு
ஒவ்வொரு காரணங்கள். விளைவு நோய் பரவல். தானும் கெட்டு, பிறரையும் கெட வைப்பது தான்
வாழ்க்கை என நினைக்கும் மக்கள் இருக்கையில் எத்தனை சொன்னாலும் கேட்கப்போவதில்லை.
வெளியில் செல்லாதீர்கள்,
கொரானா ஒட்டிக் கொள்கிறது என்று அரசாங்கம் என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஹாஸ்பிட்டலில்
வசதி இல்லை, மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை, செவிலியர்களும் இல்லை. மிகப் பெரிய
அவலத்தினை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதற்காக மாநில அரசுகள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது போதாது என்று
மத்திய அரசு கைதட்டு, விளக்குப் பிடி என பிரச்சினையை மேலும் மேலும் பூதாகரமாக்குகின்றார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரக்கூடிய வரியை எல்லாம் வைத்துக் கொண்டு மத்திய அரசு
போடும் ஆட்டம் சொல்லும்படி இல்லை,
கொரானா பரவிக்
கொண்டிருக்கிறது. இந்திய மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாய் கிடக்கிறது. கோடீஸ்வரர்களெல்லாம்
பிச்சைக்காரனாகின்றார்கள். பிச்சைக்காரர்கள் எல்லாம் பசியால் சாகப் போகின்றார்கள்.
மிடில் கிளாஸ் மக்களோ மன அழுத்தத்தின் பிடியில்
சிக்கி தினமும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நோயின் பயங்கரம்
வேறு. மத்திய அரசின் கையாலாகாத தனம் வேறு. இவற்றுக்கிடையில் சிக்கி இந்தியர்கள் சின்னாபின்னப்படுகிறார்கள்.
இது போதாது என்று
மதப்பிரச்சாரம் வேறு. அவனால் தான் பரவியது. இவனால் தான் பரவியது என்ற குற்றச்சாட்டு
வேறு.
வெளிநாட்டில் இருந்து
தான் கொரானா இந்தியாவிற்குள் இறக்குமதி ஆனது அல்லவா? வானூர்திகளில் வந்த டிப்ளோமேட்ஸ்களின்
வாரிசுகள், பணக்காரர்களின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அவர்களின் உறவினர்கள்
அனைவரும் இந்தியாவிற்குள் வந்து சேரும் வரை அமைதியாக இருந்து விட்டு, பின்னர் இண்டர்நேஷனல்
பிளைட்டுகளுக்கு தடை போடுகின்றார்கள். இந்தியர்கள் கொரானாவால் பாதிக்கப்பட முழுக்காரணமே ஆளும் மத்திய பாஜக அரசு என்கிறார்கள்
பலரும். ஒவ்வொரு இண்டர்னேஷனல் பிளைட்கள் இறங்கும் இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு,
அவர்களைத் தனிமைப்படுத்தி இருந்தால் இத்தனை கஷ்டம் மக்களுக்கு வந்திருக்குமா? இந்த
உத்தரவு போடுவது மத்திய அரசு அல்லவா? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இல்லையென்று சொல்லவோ
மறுக்கவோ காரணங்கள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் கையைத் தட்டு, விளக்குப் பிடி என
வேண்டுகோள் விடுத்து, மக்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு என்கிறார்கள்
பல அரசியல் பார்வையாளர்கள்.
பண மதிப்பிழப்பில்
ஆரம்பித்து இது வரையிலும் மத்திய அரசு செய்து வரும் செயல்கள் எதுவும் இந்திய மக்களுக்கு
நன்மை பயப்பதாக இல்லை என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
பாகிஸ்தானை விட்டு
விட்டு, இப்போது முஸ்லிம் மக்களிடம் சென்றிருக்கின்றார்கள் பாஜகவினர் என இன, மொழி பேதம்
பார்க்காத நடு நிலையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் மத்திய அரசோ, இன்னும் எத்தனை
நாள் ஊரடங்கு என்று சொல்வதற்கு, டிவிக்களில் போட்டியில் வென்றவரை அறிவிக்கும் கவுண்டவுன்
போல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ என
பீதியில் கிடக்க, பிரதமரோ பத்திரிக்கையுடன் பேசுவதை தவிர்த்து வருகிறார். அவர் தன் மீதான இந்தியர்களின் அவ நம்பிக்கையை, நேரிடையாக மக்களுடன் பேசுவதைத் தவிர்த்து, பத்திரிக்கைகள் வாயிலாகப் பேச வேண்டும். இல்லையெனில், அவர் மீதான, வெறுப்பி பிம்பம் வளர்ந்து கொண்டே தான் போகும் என்கிறார்கள் அரசின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இந்தக் கொடுமை
இன்னும் நான்காண்டுகள் தொடரும் என்பது இந்தியர்களின் மாபெரும் அவலம் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
இது தேவையற்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் என பாஜகவினர் சிந்திக்க வேண்டுமென
கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்.
தர்மம் கொன்றாருக்கு
தர்மமே கூற்றாகும். அதற்கான விலையை மக்களும் கொடுத்தே ஆக வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்காமல்,
மதம், மொழி, இனம், ஜாதி, சொந்தக்காரர்கள் என வகைப்படுத்தி தேர்ந்தெடுத்தார்கள் அல்லவா?
போதாதற்கு ஓட்டுக்குக் காசு வேறு. கடமையில் இருந்து தவறியவர்கள் மக்கள். ஆகவே எல்லோரும்
ஒன்றாக சேர்ந்து அனுபவிக்கிறோம் என்பதைத் தவிர, கொரானா பரவுவதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
இன்னும்
மக்கள் மாறவில்லை என்பதை நொடிக்கொரு தரம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
திருந்தாத ஜென்மங்கள் என்றைக்கும் திருந்தப் போவதில்லை.
மதமோ,
மொழியோ, கட்சியோ, இனமோ எதுவும் மக்களுக்கு நன்மை செய்வதில்லை என்பதை இனிமேலாவது எனது
பிளாக்கைப் படித்து வரும் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
அவ்வாறானவர்களிடமிருந்து
உடனடியாக விலகி விடுங்கள். அவர்கள் கூட இருந்தே தானும் செத்து, தனக்காகப் பிறரையும்
சாகடிப்பார்கள்.
இனி
தென்னை மரத்துக்கு வந்து விடுவோம்.
தென்னை
என்பது உண்மையில் கடவுள் தன்மை வாய்ந்தது. இறைத்தன்மை என்பது அன்பு என்று அர்த்தம்
கொள்க. சமீபத்தில் மிகவும் ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அதற்கு நானே சாட்சி. ஆக இருந்த
காரணத்தால் இப்பதிவு.
வீட்டினைச்
சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொண்டிருந்தோம். வீட்டின் பின்னால் இரண்டு தென்னை
மரங்களும், வீட்டின் முன்னால் இரண்டு தென்னை மரங்களும் வாசலில் பெரிய வேப்பமரமும் உள்ளது.
வேப்பமரத்தில் மயில்கள், கிளிகள், சிட்டுக்குருவிகள், காக்கைகள், இன்னும் பெயர் தெரியாத
பல வித பறவைகள் இருக்கும்.
தென்னைமரத்தில் மயில்கள் தங்கி இருக்கும். சுவருக்கு இடைஞ்சலாக
இருப்பது போல ஒரு தென்னை மரம் இருந்ததால், வெட்டி விடலாமா என, அந்த மரத்தின் அடியில்
நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அப்படி ஆகவில்லை. சுவர் கட்டி முடித்து விட்டோம்.
பிரச்சினை
என்னவென்றால் அந்த தென்னை மரம் சுத்தமாக காய்க்கவில்லை. ஒரு குரும்பை கூட விடவில்லை.
தென்னம்பாளைகள் வருகின்றன. ஆனால் காய்கள் இல்லாமல் பூக்களாக கொட்டின. மனைவி இதைக் கவனித்து
என்னிடம் சொன்னாள். எனக்கோ ஆச்சரியம். என்ன காரணம் என பார்த்தால் ஒன்றுமில்லை. மரம்
நன்றாகத்தான் இருக்கிறது. இது என்னடா சோதனை
என நினைத்துக் கொண்டிருந்த போது, மனைவி சுவர் கட்டும் போது பேசிக் கொண்டிருந்த விஷயத்தை
நினைவுபடுத்தினார்.
ஒருவேளை
அது காரணமாக இருக்குமோ என எனக்குள் ஒரு சிந்தனையோட்டம். தென்னை மரத்திடம் பேசினேன்.
உன்னை வெட்டுவதாக இல்லை. கோபித்துக் கொள்ளாதே என நான்கைந்து நாட்களாக அதனுடன் பேசினேன்.
மனைவியும் அதனிடம் சென்று தடவிக் கொடுத்து, உன்னை எந்தக் காலத்திலும் வெட்ட மாட்டோம்
என சொல்லி வருவாள்.
ஆச்சரியம்,
அடுத்து வெடித்த தென்னம்பாளையில் காய்கள் கொத்துக் கொத்தாய் பிடித்தன. மரம் கொள்ளாமல்
காய்த்து தள்ளுகிறது இப்போது. இளநீரோ முன்பிருந்ததை விட சுவையாக இருக்கிறது.
அன்றிலிருந்து
மரம், செடி கொடிகளைப் பார்க்கும் போது அதுவும் ஒரு உயிர் எனத் தோன்றுகிறது.
இதைத்தான்
வள்ளலார் பெருமான், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுச் சொன்னாரோ?
அவருக்கு
பயிரும் உயிர் தான் என்று தெரிந்ததோ?
அன்பு
நண்பர்களே, அன்பு கொள்ளுங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மீது. அதன் ஒவ்வொரு படைப்பின் மீதும்.
நம் அன்பு பெருக பெருக, பிரபஞ்சம் நம் மீது அன்பு கொள்ளும். அன்புக்கு இடைஞ்சலாக இருப்பது பற்று.
திருமூலர்,
எழுதிய திருமந்திரத்தில் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்.
ஆசை
அறுமின்கள்,
ஆசை
அறுமின்கள்,
ஆசை
அறுமின்கள்,
ஈசனோ
டாயினும்
ஆசை
அறுமின்கள்.
பற்றாயிருப்பது
அன்பு காட்டுவதை தடுக்கும் பெரும் தடை. பற்று அறுப்பது மட்டுமே பிற உயிர்கள் மீது அன்பு
கொள்ள வைக்கும்.
பற்றே
எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஆரம்ப விதை. தான், தனது என்ற பற்றை அறுப்போம்.
அன்பை
விதைப்போம்…
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.