குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, November 23, 2008

இறைவனும் ரித்திக்நந்தாவும்

காதல் திருமணம். வீட்டை விட்டு என்னுடன் வந்து விட்டார் மனைவி. தாலி கட்டிய பின்னர் காவல்துறையில் தஞ்சம் அடைந்து, சுற்றத்தாரின் புறக்கணிப்பெல்லாம் சமாளித்து இரு மாதங்களுக்குப் பிறகு எனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு தொழிலை கவனிப்பதற்காக சென்று விட்டேன்.

மனைவி வயிற்றில் என் வாரிசு ரித்திக் நந்தா. மனைவிக்கு தங்கிய இடம் புதுசு. புது உறவுகள். மூன்று மாடி வீட்டில் செல்லக் குழந்தையாய், துள்ளித் திரியும் மானாய் வளர்ந்தவள். உயர்தர பொன்னி அரிசி சாப்பிட்டு, பஞ்சு மெத்தையில், மின் விசிறி கீழே உறங்கியவள். எனக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்தாள். அவள் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த ஒரு சுடிதார். காதில் ஒரு இரண்டு கிராமில் தோடு ஒன்று.
என் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தாள். நித்தம் வாந்தி. சாப்பாடு பிடிக்கவில்லை. கொட்டை அரிசி சாப்பாடு. எல்லாம் புதுசு. பெரும்பாலும் பட்டினிதான் கிடப்பாள். விடிகாலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பசி எடுக்குமாம். என்னவளுக்கும் பசி. ஆனால் உறவினர் வீட்டிலோ ஒன்பது மணிக்கு தான் சாப்பாடு கிடைக்கும். வெளியில் சொல்லவும் பயம். மார்கழி மாதம் அது. என் மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் ஒரு சிவன் கோவில். அங்கு மார்கழி மாதம் வந்தால் தினமும் விடிகாலையில் பஜனை செய்வார்கள். தேவாரம், திருவாசகம், வள்ளலார் பாடல்கள் பாடுவார்கள். பஜனை முடிந்ததும் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் சுண்டல் தருவார்கள். நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்தக் கோவில் சிவபெருமானை தினமும் சந்தித்து சிறிது நேரம் ஏதாவது பேசி விட்டு, கும்பிட்டு வருவேன்.





விடிகாலையில் என் மனைவிக்கு பசி வந்து விடும். பசியால் சுருண்டு விடுவாள். அவள் தங்கியிருந்த எனது உறவினரின் பையன் தினமும் கோவிலுக்கு சென்று விட்டு, வரும் போது பொங்கலை வாங்கி வந்து தருவான். அவன் வரும் வரை பசியோடு பாட்டு எப்போ முடியும் என்று பாட்டை கேட்டபடியே காத்து இருப்பாள். அந்த பொங்கலை சாப்பிட்டு என் மனைவி பசி ஆறுவாள்.

இதை நேரில் சந்தித்தபோது என்னிடம் சோகமாக சொல்லுவாள். மகன் பிறந்து என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் சிவபெருமான் கோவிலைப் பார்த்தால் என் தகப்பனின் நினைவு தான் வரும். வயிற்றில் இருந்த என் மகனுக்காக சாப்பாட்டை அனுப்பி வைத்த சிவபெருமானின் அருளை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்வேன். எனக்கு கடவுள் ஆசி உண்டு அல்லவா.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என் விசயத்தில் அதுதான் நடந்தது. கர்ப்ப காலத்தில் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். பசி அறிந்து உதவி செய்தது தெய்வம்.

ஆகவே நண்பர்களே தெய்வத்திடம் வேண்டுங்கள். நமக்கு வேண்டியதை தரும் கற்பக விருட்சம் அது. எப்படியாவது யார்மூலமாவது உதவி செய்ய அனுப்பிவிடும். தொலைபேசி இல்லா காவல்காரர் அவர். சேவைக்கு கட்டணம் வசூலிக்காதவர் அவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் அவர். எண்ணற்ற பேண்டு வித் கற்றையை உடையவர். எத்தனை கோடி பேர் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் ஆக்சஸ் செய்யலாம் அவரின் உள்ளத்தை. அவரின் உள்ளத்தில் உமது அழைப்பை பதிவு செய்தால், ஓடோடி வருவார் உதவி செய்ய. அதற்கு தேவை உமது உள்ளத்தை அவரின் உள்ளத்தோடு இணைக்க வைக்கவேண்டியது மட்டும் தான். இதற்கு மாத வாடகை தேவையில்லை. இலவசம் அவனை அழைப்பதற்கு. அவுட்கோயிங்கும் இலவசம். இன்கமிங்கும் இலவசம். முக்கியமாக ஹேன்ட் செட் அது கலராகவோ அல்லது பிளாக்காவோ இருக்க தேவையே இல்லை.

அவர் நமக்கு ஒரு உகந்த ஒரு தோழன். அவரிடம் ரகசியத்தை சொன்னால் அது தான் ரகசியம். சாவி இல்லாத பெட்டகம் வைத்து இருக்கின்றார். நம்மை தவிர வேறு எவரும் அந்த ரகசிய பெட்டகத்தை திறக்க முடியாது. அழையுங்கள் ஓடோடி வருவார். நாம் எப்போது அழைப்போம் என்று காத்து இருக்கிறார் அவர்...

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.