பாரதிக்கு மட்டும் அந்தக் கோபம் சொந்தமானதில்லை. பேச்சாளர்களும், ஆன்மீகக் குப்பைகளைக் கொட்டும் செப்டிக் ஆட்களும் அடிக்கடிச் சொல்வார்கள், ”தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்” எனப் பாரதி கூறினார் என.
அந்தக் கோபம் பாரதிக்கு மட்டும் சொந்தமானதில்லை. பசித்திருப்போருக்கு உணவிடும் ஒவ்வொருவருக்கும் அது உள்ளே உறங்கிக் கிடக்கும் தனியா நெருப்பு. சாலைகளில் பஞ்சைப் பறாரியாய் கிடப்போருக்கு சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒருவருக்குள்ளும் அந்த கோபம் இருக்கும். அவரால் முடிந்தது அந்தப் பொட்டலம்.
கோடியாய்க் குவித்து மாதம் ஒரு முறை விண்ணில் பறக்கும் சேவகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இருக்க வேண்டிய கோபம், சாதாரணன் ஒருவனிடம் இருக்கிறது. நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் தோற்று விடும் நடிப்பை நடிக்கும் நயவஞ்சக நரிகளாய், வேடமிட்டு வரும் வெண் தாடிகளும், வெள்ளுடைகளும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவை தட்டிப் பறித்து தன் அடிப்பொடிகளுக்கும், தான் அடிமையாய்க் கிடக்கும் எஜமானர்களுக்கு கொடுக்கிறார்கள். பசியால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் இந்தியர்கள்.
வங்கி கணக்கு என்றார்கள், மானியம் என்றார்கள். வங்கியில் கிடக்கும் பணத்தை உறிஞ்சி கயவாளிகளுக்கு கொடுத்து வெளி நாட்டுக்கு ஓட வைத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள்.
ஒரு வேளைச் சோற்றுக்கும் உணவின்றி தவிப்போர் இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றனர். சாலைகள் தோறும் கவனிப்பார் இன்றி பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போகின்றார்கள். அரசு பிணக்கிடங்குகளில் கிடக்கும் அனாதைப் பிணங்களின் கணக்குகள் அரை சதவீதம் கூட இருக்காது. ஆதரவின்றி, கவனிப்பாரின்றி செத்துப் போகும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே தேவை உணவு. அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் பிடுங்கித் தின்னும் வெள்ளுடைய நயவஞ்சகர்கள் நரிகளாய் ஊருக்குள் ஊளையிட்டுக் கொண்டு, சிவப்பு விளக்குப் பொருத்தி சிங்காரமாய் பவனி வருகின்றார்கள். சிவப்பு விளக்கு சிங்காரன்கள் நாட்டைப் பிறருக்கு விற்கும் கயவாளிகள்.
நான்கரை லட்சம் டன் உணவு வீணாய் போனது இந்தியாவில். பசியால் செத்துப் போவோர் கணக்கு எனக்குத் தெரியவில்லை. செத்துப் போகும் விவசாயிகள் கணக்கு மட்டும் தெரிகிறது. விவசாயி கடனால் செத்துப் போகின்றார். ஆனால் பசியால் சாவோர் எண்ணிக்கையோ பல மடங்கு என்கிறார்கள். 7 ரூபாய் தருகின்றாராம் நாளொன்றுக்கு விவசாயிக்கு. என்ன ஒரு கொடூரம்?
போகட்டும் அறக்கோபம். கோபம் தெரிந்து விழும் வார்த்தைகள் மனதுக்குள் சற்றே ஆற்றுதலைத் தருகின்றன.
”அப்பா, இன்றைக்கு ஐ,ஐ.டி ரிசல்ட்” என்றார் நிவேதிதா.
“ போன தடவை, 98 மார்க் அல்லவா? இந்த தடவை 100 எடுத்தால் மாலையில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு உணவு வாங்கித் தருவேன்” எனச் சொன்னேன்.
சிறிய புன்னகையுடன், “அப்பா, எனக்கும் திக் திக்குன்னுதான் இருக்கு?” என்றார்.
மாலைச் சரியாக நான்கு மணி பத்து நிமிடம்.
“அப்பா, 100ப்பா, என்னாலே நம்பவே முடியவில்லை” என்றார் போனில்
இரவு எட்டு மணி போல கணபதியில் இருக்கும் அன்னபூர்ணாவிற்குச் சென்றோம்.
திக்கித் திணறிச் சாப்பிட்டாலே 300 ரூபாய்க்கு மேல் சாப்பிட முடியாது. சிறிய எளிய உணவு, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம். அங்கு ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியில் வருவோரிடமெல்லாம் சென்று பலூன் வாங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எவரும் வாங்கவில்லை. களைத்துப் போன முகம். வியர்வையில் நனைந்து உப்புக் காய்ந்து போன சுவடுகள் கொண்ட சட்டை. ஒருவர் குழந்தையுடன் வெளியில் வர அவரிடம் சென்றார். அவர் தலையாட்டி மறுத்து விட்டு நகர, அவர் தடுமாறி விழப்போனார்.
பசி.....!
எனக்குள் சுருக்கென்றது.
அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பணத்தைக் கையில் கொடுத்து ’சாப்பிட்டு வரும்படி’ கேட்டுக் கொண்டேன். காசை வாங்க முடியாது என்று மறுத்தார். இரண்டு பலூன்களைப் பெற்றுக் கொண்டு காசைக் கொடுத்தேன். அவர் கண்களில் கண்ணீர் பொசுக்கென்று அருவியாய் வழிந்தோடியது. முதுகில் தட்டிக் கொடுத்து, ”போய் சாப்பிட்டு விட்டு, வியாபாரத்தை தொடருங்கள்” என்று சொன்னேன்.
வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் மகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
“ஏம்பா, அவர் அழுகிறார்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் நிவேதிதா. உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டிருந்தது. நிவேதிதாவுக்கு புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.
ஹோட்டலுக்குள் செல்லும் முன்பு இவரைப் பார்த்திருந்தால் கூடவே அழைத்துச் சென்றிருப்பேன். அவர் சாப்பிடுவதைக் கண்டு என் மனது நிறைந்திருக்கும். அந்த வாய்ப்புக் கிடைக்காமல் போனது.
ஹோட்டலுக்குள் சென்று வயிறாரச் சாப்பிட்டு வருபவர்கள் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் சக மனிதனைக் கூடவா கவனிக்க மாட்டார்கள்? என்ன மாதிரியான உலகம் இது எனக்குள் ஆயிரம் கேள்விகள். மனிதர்களிடம் இருந்த மனிதாபிமானம் மறத்துப் போனதா? திண்ணை கட்டி சோறு போட்ட தமிழர்களா இவர்கள்? என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்தன.
”தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழி!” என்ற குரல் இரவு முழுவதும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பாரதியின் குரலா என எனக்குத் தெரியவில்லை. அது உங்களின் குரலாகக் கூட இருக்கலாம் அல்லவா?
* * * * *
29/03/2019 - 12.29 PM