20.10.2016ம் தேதிக்கு முன்பு வரை அனுமதியற்ற மனைப்பிரிவில் வீட்டு மனை வாங்கியவர்களும், அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களும் மனைப்பிரிவு வரன்முறைச் சட்டத்தின் படி வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்தி அனுமதி பெறலாம் என தமிழக அரசு கடந்த 04.05.2017ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வரன்முறைக்கட்டணமும், மேம்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட்டு மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த மாதம் 03.11.2018ம் தேதியோடு மூன்றாவது காலக்கெடுவும் முடிந்து விட்டது. இனியும் உள்ளாட்சிகளால் சேகரிக்கப்பட்டு மனைப்பிரிவு வரைபடங்களாக அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 50 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.
அரசு அனுமதியல்லாத மனைப்பிரிவினை அனுமதி பெற்றுக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தும் மக்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது சரியல்ல.
அனுமதியற்ற மனைப்பிரிவினை ஏன் பத்திரப்பதிவு செய்தார்கள், அது அரசின் தவறல்லவா? என்று என்னிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்து கொடுக்க மட்டுமே உள்ளது. லீகல் ஒப்பீனியன் எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். பத்திரப்பதிவாளர்கள் அது பற்றிய கேள்விகள் எழுப்ப வேண்டியதில்லை என்று பத்திரப்பதிவுச் சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதால் அரசும் அவ்வப்போது பல விதிகளை உருவாக்கி மக்களின் தேவையற்ற கால விரயத்தையும், பொருளையும் இழக்கவிடாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஏமாறவே பிறப்பெடுத்த மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம்.
03.11.2018ம் தேதி கடைசிக்காலக்கெடு. இனி என்ன ஆகும்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். திட்டக்குழுமம் அதற்கொரு வழியினைச் அரசுக்குப் பரிந்து செய்திருக்கிறது. 03.11.2018க்குப் பிறகு வரும் வரன்முறை செய்யும் மனைகளுக்கு அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கலாம் என்றொரு அறிக்கையை அரசின் கவனத்திற்காக அனுப்பி இருக்கிறது. அதன் படி 03.11.2018க்குப் பிறகு மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அதற்கு வரன்முறைக்கட்டணத்தில் 03.11.2018ம் தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் வரன்முறைக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும், அடுத்த ஆறாவது மாதத்திற்குள் விண்ணப்பித்தால் 25 சதவீதம் அபராதமும், 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணபித்தால் 50 சதவீதமும் அபராதக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் அந்த மனைகளை எக்காலத்தும் விற்கவும் முடியாது. அதில் வீடுகள் கட்டவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.