பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனதும் இந்தியா வல்லரசாகி, எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். கண்ணை மூடினால் வெண் தாடி மோடிஜி மாவீரன் சிவாஜி போல தோற்றமளித்தார். ஓட்டைக் குத்தி விட்டு வந்தேன்.
எனக்கு இருக்கும் அரைகுறை பொருளாதார அறிவில், மோடிஜியின் செல்லா நோட்டு அறிவிப்பு கண்டு குஷியானேன். ஆஹா என்னே ஒரு திட்டம் என்று புளகாங்கிதம் அடைந்தேன். வயித்துப் பாட்டுக்கே தகிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருக்கையில் பிளாக்கில் ஏது பணம்? தேர்தல் நேரங்களில் பஸ்களிலும், கண்டெய்னர்களிலும் கட்டுக்கட்டாக கரன்சிக்களை, டிவிக்களில் பார்ப்பதோடு சரி. தமிழகத்தை நல்ல மாநிலமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் எனது ஆஸ்தான நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களில் கட்டுக் கட்டாகப் பார்த்ததுண்டு. ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு கோடிகளைக் குவிக்க ரஜினியின் டிரைவராக இருந்திருக்க வேண்டும். ம்... அதையெல்லாம் யோசித்து என்ன செய்ய? அதிர்ஷடம் வேண்டும். அதுவும் எப்படித் தெரியுமா?
நம்ம யோக்கியனுக்கு எல்லாம் யோக்கியராகப் படம் எடுக்கும் சங்கரின் படத்தில், கிட்ட நின்னு பார்க்கக் கூட முடியாத இலியானா அழகியின் மெத் மெத் சமாச்சாரம் இடிக்க, ஸ்கூட்டரில் பயணிக்கும் கும்பகோணத்து சுப்ரமணியம் ஹோட்டலுக்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம் போல நமக்கும் அடித்தால் மூட்டை மூட்டியாக கரன்சிக்கள் கிடைக்கும். உடனே சங்கர் படத்தில் கும்பகோணத்து அய்யர் எப்படி நடித்தார் என்று கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நம்ம இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் சென்று அதெப்படி நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரானீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். (இந்த அரசியல் எல்லாம் தெரிந்தால் நீ பிளாக் எழுத வருவாயா என்று திட்டுகிறவர்களுக்கு ஒரு சல்யூட். நிச்சயமாக இந்த அரசியல் தெரிந்தால் நானல்லவா இந்தியாவின் பிரதமராக இருந்திருப்பேன்?)
காசு பணம் சேர வேண்டுமெனில் அவரவருக்கு நேரம் வர வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதைய தமிழக அரசில் எம்.எல்.ஏவாக இருப்போரும் எம்.பியாக இருப்போரும் லக்கால் சூழப்பட்டவர்கள். கொட்டிக்கொண்டிருக்கிறது மழை. என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கின்றார்கள். அந்தளவுக்கு மழை கொட்டோ கொட்டுன்று கொட்டிக் கொண்டிருக்கிறது. (அமலாக்கத்துறையினரும், அய்ட்டிக்காரர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள். நான் உண்மையிலேயே மழையைத்தான் சொல்கிறேன் அரிச்சந்திரன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே. தவறாகப் புரிந்துகொண்டு விடாதீர்கள் ப்ளீச்....!(ஷ்க்குப் பதில் ச் தான் இங்கு சரியாக வரும்)
என்ன சொல்கிறேன் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் நீங்களெல்லாம் ஆஃபிரிக்காவுக்குச் சென்று விடுங்கள். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை. அப்பிராணிகள் ஆஃப்ரிக்காவில் தானே இருக்க வேண்டும். என்ன நான் சொல்வது?
இன்று கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். பகலிலேயே கனவு வருகிறது. கனவில் அலறி அடித்துக் கொண்டு எழும்புகிறேன். பகல் கனவு பலிக்காது என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். அப்படியா? உங்களுக்குத் தெரியுமா?
சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன். வழக்கம் போல தினமலரில் இந்தச் செய்தி வரவில்லை. தினகரனில் படித்தேன். படித்தவுடன் பக் என்று ஆகி விட்டது. நீங்களும் படியுங்கள். இந்தியா நிச்சயம் வல்லரசாகி விடுமென்று நான் அடித்துச் சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்??? அதுமட்டுமா அரோகரா அரோகராவும் இனி போட வேண்டிய சூழல் வந்து விடும். ஆகையால் பழனி முருகனை வழி பட்டு வாருங்கள். ஒரே ஒரு கோவணத் துணி கூடவா நம்ம இந்தியாவில் கிடைக்காமல் போய்விடும்? நிச்சயம் கிடைக்கும் கோவணம். கோவணம் இருந்தும் என்ன பயன் என்று புலம்பும் பெண்மணிகளுக்கு “அம்மா, தாய்மார்களே! ஏதோ பிழைச்சுப் போகிறேன்” என்று பெரிய மனது பண்ணி விட்டு விடுங்களேன். ப்ளீஸ்...!
செய்தி கீழே. நன்றி தினகரன்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வங்கிகள் திவாலானால், அதனை மீட்டெடுக்க வாடிக்கையாளர்கள் போட்ட பணத்தை பயன்படுத்திக்கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது எனவும், இந்த விதியை நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. சிறுசேமிப்பு என்பது சிறுவயது முதல் பெரியவர்கள் கற்றுத்தரும் அனுபவ பாடம். பணத்தை பாதுகாப்பாக போட்டு வைப்பதற்காகவே வங்கிகளில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளவர்கள் ஏராளம். சேர்க்கப்பட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்ற நிம்மதி வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் இந்த அடிப்படை அம்சத்தையே ஆட்டிவைக்கும் நிலையில், புதிய நிதி மசோதா பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் 14ம் தேதி, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ‘நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு - 2017 மசோதா’ என்ற ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வங்கிகள் திவால் ஆகிவிட்டால், அதில் வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள டெபாசிட் பணத்தை வங்கிகள் எடுத்துக்கொண்டு திவால் பிரச்னைக்கு தீர்வுகாண பயன்படுத்திக்கொள்ளும் என்ற ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, ஜூன் 14 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - 2017 மசோதா’வுக்கு (எப்ஆர்டிஐ மசோதா) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் 10 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இந்த மசோதா மீதான தனது அறிக்கையை, வரும் 15ம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையை சேர்ந்த ஷில்பா என்ற பெண் சேஞ்ச்.ஓஆர்ஜி இணையதளம் மூலம் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ‘நிர்வாக குறைபாட்டால் திவாலான வங்கிகளை மீட்க, அதில் டெபாசிட் செய்துள்ள அப்பாவி மக்களின் பணத்தை பயன்படுத்தாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கைெயழுத்து இயக்கம் தொடங்கி 24 மணி நேரத்தில் சுமார் 40,000 பேர் கைெயழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இது 74,000ஐ தாண்டிவிட்டது. இதன்பிறகுதான் இந்த மசோதா பற்றிய அச்சம் பலரையும் தொற்றிக்கொண்டு விட்டது.
அதாவது, இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தீர்வுக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும். இதை செயல்படுத்த இயக்குநர் குழு அமைக்கப்படும். இதில் நிதியமைச்சகம், செபி, ரிசர்வ் வங்கி, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகியவற்றில் இருந்து ஒரு நபரும், மத்திய அரசு சார்பில் ஐந்து உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். வங்கி, கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அபாய கட்டணத்தை எட்டியிருப்பதாக கருதப்பட்டால், அந்த நிறுவனத்தை மூடுவதற்கும், வேறொரு நிதி நிறுவனம் அல்லது வங்கியுடன் இணைப்பதற்கும், ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பவும் இந்த கழகத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது. அதோடு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சொத்துக்களை விற்று தீர்வுகாணவும் உத்தரவிடலாம். வங்கிகள் திவாலானால், மேற்கண்ட தீர்வுக்கழகம் ஒரு குறிப்பிட்ட அளவு வரை டெபாசிட் காப்பீடு வழங்கும். ஆனால் எந்த அளவுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறப்படவில்லை. இதை தீர்வுக்கழகம்தான் முடிவு செய்யும். தற்போது வங்கிகள் திவால் ஆனால் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பொரேஷன் மூலம் ஒரு லட்சம் கிடைக்கும். ஆனால் இந்த உத்தரவாதம் புதிய மசோதா விதிகளில் உள்ளதா என்பது தௌிவுபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
அதோடு, காப்பீடு அளிக்கப்படும் தொகைக்கு மேல் உள்ள டெபாசிட் பணத்தை, திவாலான வங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல், ஐந்து ஆண்டுக்கு இருப்பு வைத்து அதன்பிறகு திருப்ப அளிக்கலாம். ஆனால், அவசரத்துக்கு தேவைப்பட்டால் இதை எடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களில் கூட முறையீடு செய்ய இயலாது. வங்கிகள் பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுக்கின்றன. இவை திரும்ப வராதபட்சத்தில் வங்கிகள் நிதிநிலை மோசமாகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு வாடிக்கையாளர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்பது எதிர்ப்பு தரப்பின் வாதம். ஆனால், வாடிக்கையாளர் வங்கியில் போட்ட பணத்துக்கு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளில் உள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பு இதிலும் உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
* கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
* மசோதாவில் உள்ள பிரிவு 52ன்படி , வங்கி திவாலானால் டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை கோரும் உரிமையை இழக்கிறார்கள்.
* மசோதாவில் உள்ள இந்த விதியை நீக்கக்கோரி ஆன்லைனில் நடத்திய எதிர்ப்பு பிரசாரத்தில் 74,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
* வராக்கடனால் வங்கி நிதி நிலை மோசமாகும்போது, கடன் வாங்கியவர்கள் அல்லாமல், டெபாசிட்தாரர்கள் பலிகடா ஆவதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
* ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 12 கடனாளிகளிடம் வசூலிக்க வேண்டிய சுமார் ரூ.2.5 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. இது வராக்கடனில் 25%
* இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தீர்வுக்கழகம் உருவாக்கப்படும். இதை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி, செபி அதிகாரிகள் அடங்கிய இயக்குநர் குழு அமைக்கப்படும்.
* வங்கிகளில் உள்ள மொத்த வராக்கடனில் ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி திரும்ப தராத நிறுவனங்கள் 88% உள்ளன.
* 2016-17 பட்ஜெட் தாக்கலின்போது, நிதிநிறுவனங்கள் திவால் தொடர்பான தீர்வுகளுக்கு சட்ட விதிகள் ஏற்படுத்துவது பற்றி ஜெட்லி குறிப்பிட்டார்.
* இந்த மசோதாவை வரையறுக்க 2016 மார்ச்சில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அஜய் தியாகி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
‘பாதுகாப்பு உண்டு’ அரசு விளக்கம்
நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீட்டு மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், நாடாளுமன்றத்தி–்ல் அறிமுகம் செய்துள்ள எப்ஆர்டிஐ மசோதாவில், வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கு உள்ள தற்போதைய பாதுகாப்பு உத்தரவாதம் நீடிக்கிறது. அதைவிட கூடுதல் பாதுகாப்பும், வெளிப்படை தன்மையும் புதிய மசோதாவில் உள்ளன. நிதிச்சேவை நிறுவனங்கள் திவால் ஆவது அசாதாரணமான நிகழ்வு. இதற்கு விரைவான தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்ற சட்ட விதிகளில் உள்ளது போன்று டெபாசிட் பணத்தை சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி பயன்படுத்திக்கொள்ள வகை செய்யப்படவில்லை. நாடாளுமன்ற குழு பரிசீலனையில்தான் உள்ளது. வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு ஏற்ற மாற்றங்களுடன் இது உருவாக்கப்படும். தற்போது டெபாசிட்களுக்கு உள்ள கிரெடிட் கேரன்டி திட்டம் இதிலும் தொடரும். அச்சம் அடையவேண்டாம் என தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய விதி என்ன?
வங்கிகள் திவால் ஆகும்போது வாடிக்கையாளருக்கு பணத்தை அளிக்க காப்பீடு அவசியம். அனைத்து கமர்ஷியல் வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் இந்த காப்பீட்டை தர வேண்டும். இந்த காப்பீட்டை ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பொரேஷன் (டிஐசிஜிசி) வழங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு வங்கிகள் தங்களின் டெபாசிட் அடிப்படையில் பிரீமியம் தொகையை செலுத்துகின்றன. இந்த காப்பீட்டின்படி ஒரு நபர் எவ்வளவு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், திவால் ஆன பிறகு அசல், வட்டி சேர்த்து அதிகபட்சம் ஒரு லட்சம் கிடைக்கும்.