குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label முஸ்லிம் சட்டம். Show all posts
Showing posts with label முஸ்லிம் சட்டம். Show all posts

Monday, August 28, 2017

நிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா?

நண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,

ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா?  அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். 

நன்றி,  தஸ்.கார்த்தி.


இப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்?

கார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா? என்பதுதான். சரியா?

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.

ஒரு உபகுறிப்பு:

இந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்களின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.

மேலும் ஒரு உபகுறிப்பு:

உங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம். 

தொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.