குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 6, 2013

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....

Sunday, January 27, 2013

கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்


அன்றைக்கு வெள்ளிகிழமை. முட்டம் நாகேஸ்வரரையும், முட்டத்து வாளியம்மனையும் தரிசித்து வரலாம் என்று ஆலாந்துறை புறப்பட்டேன்.  தன் வாழ்நாளில், விபரம் தெரிந்த நாள் கொண்டு காசைக் கையால் தொடாமலே வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ‘சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள்” அவர்களைத் தரிசித்து வாருங்கள் என்ற நண்பரின் அறிவுரையின் படி, முட்டம் நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து செம்மேடு வழியாக பூண்டி வெள்ளியங்கிரி ஆலயம் செல்லும் வழியில், வன காளியம்மன் ஆலயத்தின் இடதுபுறம் செல்லும் வழியில் சென்றேன். வலது புற பாதை வழியாகச் சென்றால் ஈஷா யோக மையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இடதுபுறச் சாலையில் சென்றால் புளியமரங்கள் நிரம்பிய காடு தென்படுகிறது. அங்கிருக்கும் பதி வரை செல்லும் சாலை அங்கேயே முடிந்து விடுகிறது. சத்குருவின் ஜீவ சமாதிக்கு ஒற்றை அடிப்பாதைச் செல்கிறது. அதில் சென்று ஆஸ்ரமத்தை அடைந்தேன்.

சத்குருவின் ஜீவ சமாதியில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியானம் செய்ய முடியவில்லை. செல்லும் அனைவருக்கும் உணவளிக்கின்றார்கள். ஜீவசமாதியின் அருகில் செல்ல முடியவில்லை. கல் பதிக்கின்றார்கள். அடுத்த வாரத்திற்குள் வேலைகள் நிறைவு பெறும் என்றார்கள். ஜோதி சுவாமி, அருண், சீனிவாசன் ஆகியோரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

ஈஷாயோகமையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கி வரலாம் என்று சென்றேன்.செல்லும் வழியில் தென்பட்ட ஒருவரை நிறுத்தி ஈஷா யோகமையம் செல்லும் சாலைதானே இது என்று விசாரித்தேன். அது வேறு பாதை என்றுச் சொன்னார். பைக்கை திருப்பியவுடன், “இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், பக்கத்தில் தான் வெள்ளியங்கிரி சுவாமி திருக்கோவில் இருக்கிறது, கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன் ” என்றார்.

சுற்றிலும் காடு, அதன் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் கருமை படர்ந்த தார்ச்சாலை. கணேசர் அடிக்கடித் தென்படுவார் என்ற எச்சரிக்கை வேறு மனதுக்குள் நிழலாட திக் திக் நெஞ்சுடன் வெள்ளியங்கிரிக்கு பயணமானேன்.

ஏழுமலை தாண்டி இருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தேன். வருடத்தின் ஒரே ஒரு நாள் நடக்கும் பூப்பந்தல் விழாவாம் அன்று. நல்ல தரிசனம். ஆலயத்தில் தீபம் அருளி, மலர்களும், பூக்களும், பிரசாதமும் தந்தார்கள். சத்குருவைத் தரிசிக்கச் சென்றால், அவர் இறைவனைத் தரிசிக்க அனுப்பி வைத்து விட்டார். பூண்டி கோவிலுக்குச் செல்லும் நினைப்பே என்னிடத்தில் இல்லை. எல்லாம் சத்குருவின் ஆசீர்வாதம்.

நிறைவுடன் திரும்பிய வழியில் மையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இதோ கீழே இருக்கும் படத்தில் இருப்பவர்தான் வெள்ளியங்கிரி சுவாமி.



வெள்ளியங்கிரி சுவாமி ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் பதியில் வசிக்கும் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும்,  மலைகளில் அலைந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, கோவை டவுனிற்குள் வந்து சித்த மருந்துக் கடைகளிடம் மூலிகைகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் சமைத்து அவர்களுக்குத் தருவாராம். மனிதனுக்கு என்றுமே தீரவே தீராத பிணி “பசிப்பிணி” அல்லவா. 

பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கோ அல்லது மையத்திற்கோ செல்பவர்கள் நான்கைந்து நிமிடங்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைதியாய் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து விட்டுச் செல்லுங்கள். வற்றவே வற்றாத மூலிகை ஆற்றில் ஆர தீர குளித்து விட்டுச் செல்லுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். 

ஆஸ்ரமம் செல்ல விரும்புபவர்கள் இப்போது ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கும் ஜோதி சுவாமியிடம் பேசி விட்டுச் செல்லுங்கள். இவர் திடீரென்று குகை, மலை என்று சென்று விடுவார். நீங்கள் அங்குச் சென்றால் ஒருவாய் தண்ணீராவது தர ஆள் வேண்டுமே அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டும் காரணமல்ல. அங்குச் செல்பவர்களுக்கு உணவளிக்கின்றார்கள். சொல்லாமல் சென்று விட்டால் அளவோடு சமைக்கும் உணவை நமக்கு அளித்து விடுவார்கள். தொலைபேசி எண் : 98948 15954. 



Thursday, January 17, 2013

நம்பினால் நம்பலாம்

மனையாளும், குழந்தைகளும் பொங்கல் விழாவிற்காக சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். எனக்குப் இது போன்ற பாவனை விழாக்கள், சடங்குகள் இவற்றில் எல்லாம் நம்பிக்கைகள் இல்லாது போய் விட்டது. அனுபவம் தந்த பாடம் இது. இதைப் பெறுவதற்கு நான் கொடுத்தது அனேகம்.

கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருக்கும் பிடிப்பானது அதிகம். அது மனிதனுக்கு நல் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதால்.அதன் காரணமாய் மனிதர்கள் சமூகத்தின் மீது பற்று வைக்கும் இவ்வகை விழாக்கள் பல்லாண்டுகளாய் தொடர்ந்து வர, குழந்தைகள் மனதில் அவை பதிய வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாய் இவ்வகை விழாக்களை விமரிசையாக கொண்டாடும் கிராமத்தை நோக்கி குழந்தைகளை அனுப்பி வைத்தேன்.

தனிமை என்பது எப்போதும் மனிதனுக்கு உள்ளுணர்வைத் தூண்டி விடும் அற்புதத்தின் தருணம். நான்கு நாட்களின் தனிமை தந்த உற்சாகம் இன்னும் ஒரு வருஷத்திற்கு இருக்கும். அப்படியான தனிமையின் ஊடே கோவையின் ரேஸ்கோர்ஸில் அமர்ந்திருந்தேன்.

அழகான நடைபாதை. அழகிய யுவன்களும், யுவதிகளும், வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கடந்து விட்டவர்களும் நடந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது கிட்டத்தட்ட அறுபது வயது மிக்க முதியவர் ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். வந்ததும் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“ மனிதனுக்கு எப்போதும் ஒரு கூட்டம் துணையாக இருக்க வேண்டும். அது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருப்பின் நலம். கோபத்தை விடுத்து இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை யார் யாரை எந்தெந்த வட்டத்தில் வைக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு அதன் படி அவர்களை வரிசைப்படுத்தி உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துங்கள்” என்றார்.

அவர் சொல்லிய கருத்து என்னைக் கவர்ந்தது. சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். 

அடுத்த நொடி அவர் அங்கிருந்து சென்று விட்டார். யார் அவர் ? தெரியாது. எதற்காக என்னிடம் அவர் பேசினார்? தெரியாது. விடை தெரியாத எத்த்னையோ கேள்விகளுடன் இவரும் ஒரு கேள்வியாய் மனதில் பதிந்து விட  ரேஸ்கோர்ஸ் குளிர ஆரம்பித்தது. 

நடைபாதையில் மேலும் பலர் நடந்து கொண்டிருந்தனர். ரேஸ் கோர்ஸ் சாலை வட்டவடிமாய் இருந்தது. சுற்றிலும் மரங்களும் இருந்தன.

* * *

Wednesday, January 16, 2013

துண்டு


கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு. 

இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”. 

வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார். 

அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.

ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.

நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.

நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.

நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.

வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.

ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.

நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.

இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது. 

இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.

1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

 நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)

திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்

Thursday, December 27, 2012

செப்பிடு வித்தைக்காரனின் கும்கி



( எனது நண்பர் இயக்குனர் கதிரின் ரீமிக்ஸ்- சொய் சொய் பாடல்) 

என் மகளின் பத்து நாள் போராட்டம், நேற்று வெற்றியடைந்தது. வழக்கம் போல அரசாங்கம் (அடியேன்)தோல்வியுற்றது. யானைப் படம் போச்சு, போச்சுன்னுச் சொல்லிச் சொல்லி நச்சரிப்பு தாங்காமல் அழைத்துச் சென்றேன்.

கும்கி படத்தில் யானையை போஸ்டரிலும், விளம்பரத்திலும் இடம்பெற வைத்து, தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்களைக் கவர்ந்தார் ஞானவேல்ராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வெறும் இரண்டு கோடி ரூபாயில் வாங்கப்பட்ட அட்டக்கத்தி பதினாறு கோடியைத் தந்தது என்றால் அவரின் சுக்ரதிசையை என்னவென்றுச் சொல்வது? அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று ஒரு குடும்பமே “சுக்ரதிசையில்” சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று கோடிகளைக் குவிக்கின்றார்கள். அது அவர்கள் முன்பிறப்பில் செய்த பலன். அனுபவிக்கின்றார்கள். சுக்ரதிசை வந்தால் ரோட்டில் போகிறவன் கூட வீட்டுக்கு வந்து காசைக் கொடுத்து விட்டுப் போவான் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும்.

’நானும் செத்துருவேன்’ என்றுச் சொல்லும் அல்லியினால், பொம்மன் இழப்பது அவனுக்கு நடையாய் நடந்து சம்பாதித்துப் போட்ட யானை, மாமா, எடுபிடி உண்டியல் ஆகியோரை. எப்போதுமே பெண்களுக்கு இழப்பு அதிகமில்லை. பெரும்பாலும் ஆண்கள் தான் இழக்கின்றார்கள். பெண்களின் சில சொற்கள் ஒருவனை வாழவைக்கும், சிலரை அழித்து விடும்.ஹஸ்தினாபுரத்திலே பாஞ்சாலி தண்ணீர் என்று நினைத்து ஏமாந்து நின்ற துரியோதனனைப் பார்த்து சிரித்த சிரிப்பு, துரியோதனால் பலபேரின் முன்னிலையில் பாஞ்சாலியின் துகிலுரிய வைத்தது. அன்று அவள் அவிழ்த்து விட்ட கூந்தல் துரியோதனா வகையறாவையே அழித்தது. பெண்கள் எப்போதும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒன்றே ஒன்றுதான். பெண்கள் ஆயுதம் போன்றவர்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் குறுக்கே திரும்பி குத்திக் குதறி விடும். ஜாக்கிரதை நண்பர்களே !

என் மனையாள் படம் பார்த்து விட்டு திரும்பும் போது, ”ஏங்க, ஓங் பேக் என்ற படத்தில் சிறுவன் ஒருவன் யானையுடன் விளையாடுவதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்திருப்பார் போல, உடனே ஒரு ‘ நாட்’ கிடைத்து படத்தை எடுத்து விட்டார்” என்று கூறினாள். அப்படியும் இருக்கலாம். எப்போதுமே நம்மவர்களுக்கு சுயச் சிந்தனை வருவது குறைந்து வருகிறது. கூக்கிள் சிண்ட்ரோமினால் மூளை இறப்பு நோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு கூடுதல் தகவல். ஆகவே நெட்டில் உலவும் நண்பர்கள் ஜாக்கிரதை.இதற்கென்று தனி வைத்தியம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கும்கி ஒன்றுமே இல்லாத வெறுமையான, முழுமையற்ற, விட்டேத்தியான கதை. காட்டுவாசிகளின் வீடுகள் அனைத்தும் செட்டிங்குகள். பச்சைப் பசேலைக் காட்டினால் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற பிரபு சாலமனின் நினைப்பு பலித்தே விட்டது. கோவில் யானை, காட்டு யானையை விரட்டி அடிப்பதுதான் கதை. அதாவது சொங்கி ஒருவன் வீரனை வெல்வது. கதைக்களமும், காட்சிப்படுத்தியதும் வித்தியாசமானது என்பதால் படம் போரடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி எரிச்சல் தரும் கிளைமேக்ஸ். முழுமையைத் தராத படமாக்கம். 

அதென்னவோ தெரியவில்லை, பிறரை அடிப்பதும், கேவலப்படுத்துவதும் தான் நகைச்சுவை என்பதாய் அனைத்து சினிமாப்படங்களும் வருகின்றன. கவுண்டர் மேனியா போய் அரை நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. இன்றைக்கும் இயக்குனர்கள் இப்படிப்பட்ட லூசுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவது எரிச்சலோ எரிச்சல்.

ஹீரோ யானைமீது வருகிறார். காதல் வந்தால் பைத்தியம் போல குதிக்கிறார். தலையை ஆட்டுகிறார். கையை விரித்து விரித்து காதலை வானத்தைப் பார்த்துச் சொல்கிறார். காதல் வேதனையில் முள்ளில் கையை வைத்து அழுத்தி ரத்தம் வர வைக்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, சினிமா காதலர்கள் கையை மட்டும் அறுத்துக் கொள்கிறார்கள்). 

அல்லிக்கு பின்புறம் அழகாவே இல்லை. சப்பைக் குண்டி ஹீரோயின். மூக்கு புடைத்து, உதடு புடைத்து இருக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறார். எத்தனையோ படங்களில் பார்த்திருக்கும் ஹீரோயின் போலவே தண்ணீரில் மூழ்குகிறார். பாடுகிறார். சிரிக்கிறார். சிணுங்குகிறார்.கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்கள் இப்படியே நடிப்பார்களோ தெரியவில்லை. ஹீரோயின் சுந்தரபாண்டியனில் கொஞ்சம் முற்றிப் போய் இருக்கிறார். காதல் வருவதும், அதைச் சொல்வதும், பின்னர் அதை மறுப்பதும் எரிச்சலைத் தரும் படமாக்கம். பொம்மனின் மாமாவாக வரும் தம்பி ராமையா மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டு படம் நகர உதவி செய்கிறார்.

சிவாஜியின் பையனுக்கு முதல் படம் சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் படத்தில் ஒட்டாமல் தனியே நிற்கின்றன. படத்தின் களத்திற்கும் பாட்டுக்கும் இசைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சிந்து பைரவி படத்தில் சிவகுமார் கர் நாடக சங்கீத மேடையில் வெஸ்டர்ன் மியூசிக் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போது புரியும் நானென்ன சொல்ல வருகிறேன் என்று.

ஒன்றுமே இல்லாத கதை. எல்லாம் இருக்கிறது என்பதாய் காட்டும் செப்பிடு வித்தையைத்தான் பிரபு சாலமன் கும்கியில் செய்திருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும் தமிழர்களின் ரசனை மாற. 

Monday, December 24, 2012

மூன்று வகை உணவுகள் எது?


முதல் வகை உணவு :- ஆயுளை வளர்ப்பது, மனவலிமை அளிப்பது, உடலுக்கு தின்மை தருவது, நோய் அளிக்காதது, சுகம் தருவது, ரசமாய் இருப்பது, குழம்பாய் இருப்பது, நெய் கலந்தது, மனதுக்கு இதம் தருவது

இரண்டாம் வகை உணவு :- கசப்பு, புளிப்பு, உப்பு, உலர்ந்தது, சூடு, காரம் கொண்டவை. பசி வராமல் தடுப்பது, குடலுக்கு புண் அளிப்பது.

மூன்றாம் வகை உணவு :- வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றியது, கெட்ட வாடை, மிச்சம் மீதியைச் சாப்பிடுவது.

சாத்வீக குணத்துடையவனுக்கு உரியது முதல் வகை உணவு. ராஷச குணத்துக்குடையவன் உரியது இரண்டாவது. மூன்றாவது முட்டாளுக்கு (தாமச) உரியது என்கிறான் கண்ணன்.

கண்ணன் கீதையிலே சொல்கின்றான் இப்படி என்று எழுதுகிறார் கண்ணதாசன். ( நன்றி : கண்ணதாசன்)

பகவத் கீதையின் பதினேழாவது அத்தியாயத்தில் 8,9,10 ஸ்லோகங்களில் மேற்கண்ட உணவுகள் பற்றிக் “கண்ணன்” அருளியிருக்கின்றான். 

அன்பு நண்பர்களே, நல்ல உணவை கண்டுபிடித்து உடலுக்கு நன்மை தரும் உணவை மட்டும் உண்டு, தன்னையே நம்பி வந்திருக்கும் மனைவிக்கும், உங்களுக்கு குழந்தையாய் அவதரித்து இருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து உதவுங்கள்.

பேக்கிங் உணவுகள், ஹோட்டல் உணவுகளை அறவே தவிருங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கோவையின் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. ஹாஸ்பிட்டல்களில் டாக்டரைப் பார்க்க மூன்று மணி நேரம் காத்திருக்கும் அளவுக்கு கூட்டம் வழிகின்றன. மருத்துவர்கள் அருவியாய்க் கொட்டும் பண மழையில் நனைகின்றார்கள். உங்கள் உடம்புகளுக்குள் நோய்க் கிருமிகள் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்கின்றன. எனது பிரியத்துக்கு உரிய சக ஆன்மாக்களை தங்களின் உடம்புகளில் தாங்கி வந்திருக்கும் அழிவற்ற ஆன்மாக்களை உடைய உள்ளங்களே, கொஞ்சம் யோசியுங்கள்.

ஹோட்டல்கள் உங்களுக்கு சுவையுடன் நோயையும் சேர்த்து தருகின்றன. காசைக் கொடுத்து வம்பினை விலைக்கு வாங்காதீர்கள். 

Tuesday, December 18, 2012

ரசம்



தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவு என்றால் முதலிடம் பிடிப்பது ரசம். தமிழர் உணவு முறை மருந்து சார் உணவாக, உடலுக்கு எந்த வித தீங்கும் தராத இருந்து வந்தது. இதுகாறும் பல கிராமங்களில், பண்டைய வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் குடும்பங்களில் உணவுகள் என்றும் மாறாமல் ஒரே வகையானதாக சமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன கலாசாரத்தின் பின்விளைவுகள் ஏற்படுத்திய பல தாக்கங்கள் தமிழர் உணவுகளுக்கும் நுழைந்து விட்ட காரணத்தால் தமிழர்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்தச் சர்க்கரை நோய் உடம்பிலிருந்து முழுவதுமாய் விரட்டி அடிக்க கை வைத்திய முறை இருக்கிறது. உடனடி நிவாரணம் மட்டுமே இக்கால மனிதர்கள் விரும்புகின்றார்கள். ஜலதோஷம், சளி, இருமல், நாட்பட்ட காச நோய்க்கு வீட்டிலேயே செய்யும் அருமையான பல வைத்திய முறைகள் இருக்கின்றன. அதுமட்டுமா என் அம்மா குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஒரே ஒரு முறை மருந்து கொடுப்பார். உடனடியாக கரு உண்டாகி விடும். இதெல்லாம் கை வைத்திய முறையில் செய்வது. குழந்தை உண்டாக இப்போதெல்லாம் எத்தனையோ லட்சங்களைச் செலவழிக்கின்றார்கள். 

படித்து முடித்து வேலை செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது, உடம்பையும் மனதையும் பாதுகாத்திட எந்த  கல்வியும் தமிழரிடையே இல்லை. அக்காலத்தில் குருகுலவாசத்தில் இறை வணக்கம், தியானம், யோகா, உடலுழைப்புச் சார்ந்த வாழ்வியல் கல்வி முறைகளை பிரதிபலன் பாராது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பணம் சார்ந்த வாழ்வியல் நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தில் ஆசிரியர்களும் மாறி விட்டார்கள். கல்வி முறையும் மனிதனை எந்திர மயமாக்கி விட்டது. ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்கள் தேய்வடைந்து ஒரு நாள் தொழிற்சாலையை விட்டு குப்பைக்கு அனுப்பப்படுவதைப் போல இன்றைய மக்கள் பணியிடங்களில் இருந்து குப்பையைப் போல வெளித்தள்ளப்படுகின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. இது தான் பணத்தின் மீதான மாயை எனப்படுவது.

இப்படிப்பட்டவர்களிடமிருக்கும் மிச்ச சொச்ச பணத்தையும் கார்பொரேட் சாமியார்கள் பயிற்சிகள் கொடுக்கிறேன் பேர்வழி என்று உறிஞ்சிக் கொள்கின்றார்கள். சில முதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலையில் பணிசெய்யும் எந்திரங்களாக மாற்றி அவர்கள் மூலம் பெறும் பணத்தின் வசதியின் காரணமாய் தனிமைப்படுத்தப் பட்டு முடிவில் எந்திரமாகவே மாறிப் போன பிள்ளைகளின் ஆதரவு இன்றி இது போன்ற சாமியார்களின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கும் சொத்துக்களையும் அவர்களின் பெயரில் எழுதி வைத்துச் சென்று விடுகின்றார்கள்.

சில தனியார் சாமியார்களின் ட்ரஸ்டுகள் எப்படிக் கோடிகளைக் குவிக்கின்றார்கள் தெரியுமா? தொண்டு என்றுச் சொல்லி சில பல அடிமுட்டாள்களை சிஷ்யர்களாக்கி சம்பளமே கொடுக்காமல் சோறு மட்டும் போட்டு தங்கள் நிறுவன வேலைகளை செய்து கொள்வதால் அப்படிச் சேரும் பணமே பெரும் கோடிகளைக் குவித்து விடுகின்றன. நானும் ஒரு காலத்தில் இப்படியான ஒரு சூழலில் நான்காண்டுகள் எனது காலத்தைச் செலவழித்திருக்கிறேன். 

சரி அது அவர்களின் பாடு !

ரசத்திற்கு வந்து விடுகிறேன். கடுகு, சீரகம், மிளகு, புளி, பெருங்காயம், பூண்டு, உப்பு ஆகிய ஏழு பொருட்களின் மிகச் சிறப்பான கூட்டுக் கலவையே ரசம்.  இந்த ரசத்தின் வேலை ஜீரணத்திற்கு உதவுவது. இப்போதைய அவசர உலகத்தில் எவரும் உணவை மென்று தின்பதே இல்லை. உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் உணவை பற்களால் நன்கு மெல்லும் போது குழம்பாய் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவின் சத்தை எளிதில் பிரித்து சேர வேண்டிய இடங்களுக்குள் வயிறு செலுத்தி விடுகிறது. ஆனால் இப்போதைய மக்கள் பற்கள் செய்யும் வேலையை வயிற்றினைச் செய்ய வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு இந்த ரசம் பெரும் உதவிகரமாய் இருக்கிறது. மென்று தின்னாமல் கடித்து விழுங்குகின்றார்கள். அதன் காரணமாய் வயிறு படாதபாடு படுகின்றது. 

எந்த நாட்டிலும் உணவே மருந்தாய் உட்கொள்வது கிடையவே கிடையாது. ஆனால் பாரம்பரியமும், பழைமையும் மிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையே உணவே மருந்து என்று காயத்தை நன்கு பாதுகாத்து வந்தது. கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண் நகரத்திற்குச் சென்றால் தன்னையே ஒரு மாதிரியாக மாற்றிக் கொண்டு அவ்வாழ்க்கையை கிராமத்திற்குள் வந்து காட்டி பெருமையடைவது எப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியாய் இருக்குமோ அந்தளவுக்கு தமிழர்களின் உணவும் இப்போது மாறிப் போய் விட்டது. அது காலத்தின் கொடுமை அல்ல. மனிதர்களின் மடைமை என்றுதான் சொல்ல வேண்டும்.

Thursday, December 13, 2012

தாரா என்ற அழகி


தனக்குத் துன்பம் ஏன் வருகிறது? என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இறைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.

ஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் ? பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

தன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.

ரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.

குறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட கொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.

மேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.

சமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Wednesday, November 28, 2012

தர்மம் பேசுகிறது - ஒன்று



அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.

இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.

தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.

மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?

இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )