எனது வாழ் நாளில் இப்படியான ஒரு பவர் கட்டை இதுவரை சந்தித்தது இல்லை. காலையில் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை, பனிரெண்டு மணியிலிருந்து மூன்று வரை, ஆறிலிருந்து ஏழு வரை, ஒன்பதிலிருந்து பத்து வரை, பனிரெண்டிலிருந்து ஒன்று வரை, மூன்றிலிருந்து நான்கு வரை திரும்பவும் ஆறிலிருந்து ஒன்பது வரை என்று ஆறு தடவை பவர் கட் செய்கின்றார்கள். வேலை பார்க்க முடியவில்லை என்பது போய், தூக்கமும் பறி போய்க் கொண்டிருக்கிறது. கொசுக்கடியில் சிக்கி நோயாளியாகவும் மாற வேண்டி இருக்கிறது. எப்படி வாழ்வது என்பது கேள்விக்குறியாய் கண்முன்னே பெரும் பூதமாய் நின்று கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்றார்கள் அதிமுகவினர். இன்று ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. தடையில்லா மின்சாரம் போய், தடையே இல்லாத மின்வெட்டினை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். யூபிஎஸ் வாங்கிப் போடலாமென்றால் மின்சாரம் இருந்தால் அல்லவா பேட்டரிகள் சார்ஜ் ஆகும். பக்கத்து வீட்டுக்காரரின் யூபிஎஸ்ஸிலிருந்து கரண்டே வருவதில்லை. தேவையற்றுப் போய் 20,000 ரூபாய் செலவு செய்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் மின் விசை கைத்தறி இரண்டு வைத்திருக்கிறார். ஒரு சேலை நெய்ய தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் தேவை. இரண்டு தறிகளும் காலை ஆறு மணியிலிருந்து ஓடினால் ஒரு நாளைக்கு நான்கு சேலைகள் கிடைக்கும். இரவில் தறி வேலை செய்ய முடியாது. ஒவ்வொரு சேலையும் 300 ரூபாய் விலைக்கு விற்கிறார். நூல் விலை போக, ஒரு சேலைக்கு 100 லிருந்து 150 வரை கிடைக்கும். ஆக ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு கல்லூரியில் படிக்கும் மகன் , மகள், சாப்பாடு, இன்னபிறவற்றிற்கும் செலவு செய்துகொண்டு பிழைத்து வந்தார். இன்றோ ஒரு சேலை கூட நெய்ய முடியாத நிலை. கடந்த நான்கு மாதமாய் சேலையும் நெய்ய முடியாமல், இரவிலும் வேலை பார்க்க முடியாமல் அக்குடும்பம் படும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. தினம் தோறும் வந்து புலம்பிச் செல்வார். அவரைப் பிழைக்க விடாமல் செய்கிறது மின்வெட்டு. சாப்பாட்டிற்கு என்ன செய்வார்? அவர் எப்படித்தான் குடும்பத்தை நடத்துவது? அதிமுக தலைமையின் கீழான தமிழக அரசு வழிகாட்டும் என்று ஓடி ஓடி கேம்பெயின் செய்தார். இன்றோ அழுது புலம்புகிறார். அரற்றுகிறார். வேதனையில் வெம்பிப் புழுங்குகின்றார். முதலமைச்சர் மீது அவருக்கு கோபம். முதலமைச்சர் கரண்டினை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றாச் சொல்கிறார்?இருந்தால் அல்லவா மின்சாரம் கொடுப்பதற்கு? இல்லாத மின்சாரத்தை எங்கிருந்து கொடுப்பது? என்று அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கிறது மனவேதனையுடன். ஆறுதல் சொன்னால் பசி ஆறும் என்று இருந்தால் எப்படி இருக்கும். அதற்கு வழி இல்லை.
அடுத்து பக்கத்து தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்த டூல்ஸ் தற்போது குறைந்து விட்டது. வேலைக்காரர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். தொழில் நடத்த வேண்டுமானால் டூல்ஸ் ப்ரடக்ஷன் குறையக்கூடாது. வருமானம் வரவே இல்லை என்றாலும் பரவாயில்லை தொழில் நடக்க வேண்டும் என்பதற்காக ஜென்செட் வாங்குவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு யூனிட் ஜென்செட் மின்சாரம் 15 ரூபாய் ஆகும். ஏற்கனவே கடன் வாங்கிப் போட்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் கடன் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் அவரின் நிலை என்ன என்று நினைத்துப் பார்த்தால் மீண்டும் ஒரு கேள்விக் குறி எழும்புகிறது.
பெரும்பான்மையான திருப்பூர் சாயப்பட்டறைகள் குஜராத் போன்ற மா நிலங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. பெரிய திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு தங்கள் கம்பெனியினை ஷிஃப்ட் செய்து விட்டார்கள். திருப்பூரில் வேலை இழப்பின் காரணமாய் பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றார்கள் தமிழக இளைஞர்கள்.
சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பணிபுரியும் பல நண்பர்களின் கண்ணீர்க் கதைகளை எழுதப் புகுந்தால் இதயம் வெடித்துப் போய் விடும். கடன் உடன்களை வாங்கிப் போட்ட வீடுகளுக்கான கடன் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவிலிருந்து வேலை செய்து வந்தவர்களுக்கு மின்வெட்டினால் ஏற்படும் இழப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. மின்சாரம் இல்லாமல் வேலை செய்ய முடியவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சாஃப்ட்வேர் வேலை முடிக்காமல் போனால் ஆர்டர் கை விட்டுப் போய் விடும். எத்தனை எத்தனையோ சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் வேதனையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் மின்வெட்டு.
ஷெட்யூலற்ற மின்வெட்டினால் வீடுகளில் இருக்கும் மின்சாதனங்கள் பழுதடைகின்றன. டிவி, மிக்சி, கிரைண்டர் என்று பெரும்பான்மையான மின்சாதனங்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. அதுமட்டுமா சுண்டு விரல் தடிமன் மெழுகுவர்த்தி ஆறு ரூபாய்க்கு விற்கின்றது. இதற்குள் கேஸ் லாரி டாங்கர் ஸ்ட்ரைக் பிரச்சினையால் கேஸ் கிடைப்பதும் தடைபடும் என்பதால் சமைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இல்லத்தரசிகள் வேதனையில் வெம்பிக் கொண்டிருக்கின்றனர்.
மின் உற்பத்தியை சரி வர நிர்வகிக்காமல் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றி விட்டனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து அங்கும் தமிழர்கள் வாழ முடியாமல் செய்தார்கள். அங்கிருந்து தமிழர்கள் தமிழகத்திற்கு வந்தனர். இன்றோ தமிழர்களுக்கென இருக்கும் தமிழகத்தில் தமிழர்கள் வாழ முடியாமல் செய்கின்றனர். தமிழர்கள் தமிழகத்திலிருந்து பிழைக்க வேறு மாநிலம் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தொழிற்சாலைகள் மின்சாரம் இன்றி மூடப்பட்டு விடுவதால் தொழிலாளர்கள் பசியில் கிடந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். சிறு தொழில், குறும் தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் கிடக்கின்றன. கோடை வெயில் தகிக்கும் காலங்களில் காற்றுக்கூட புக முடியாத நகரத்து மூடப்பட்ட சிறை வீடுகளில் மக்கள் கிடந்து வெந்து நொந்து நூலாகின்றனர். குழந்தைகள் கொசுக்கடியில் சிக்கி நோய் வாய்ப்படுகின்றனர். இரவுகளில் காற்றாடி இல்லாது அழுகின்றனர்.
இது பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி, தமிழகத்தினை இந்தியாவில் முதன்மை மாநிலமாக்குவோம் என்று சூளுரைக்கின்றனர் ஆட்சியர்கள். மனிதர்கள் பிழைக்கவும், வாழ முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் வேதனையில் வெம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடை வெயில் அவர்களை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கு வழிதான் என்ன? இதுவரையிலும் தென்படாத பாதையாய் கிடக்கிறது தமிழர்களின் வாழ்வு. இப்படியும் ஒரு நிலை வருமா என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். விடிவுகாலம் கிடைக்குமா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத மர்மமாய் மவுனமாய் கிடக்கிறது.
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்.