நடு நிசி. யாரோ தண்ணீருக்குள் நடக்கும் பொலக் பொலக் சத்தம். உற்றுப் பார்த்தால் இரண்டு உருவங்கள் கண்மாய்க்குள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு உருவமும் ஜட்டி மட்டும் அணிந்திருக்கின்றன. மேலே ஒன்றுமில்லை. ஒரு உருவத்தின் தோளில் சாக்குப் பை போல ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு உருவம் தண்ணீருக்குள் கை விட்டு துலாவிக் கொண்டே நடக்கிறது.
ஒரு உருவம் கையை மேலே தூக்க, முரட்டு மீன் நிலவொளியில் துள்ளுகிறது. அதைப் பிடித்து கோணிக்குள் திணிக்கும் போது, ””யாரங்கே?” ன்னு” குரல் கேட்க, குரல் கேட்ட திசையைப் பார்க்க, அங்கு கையில் கம்போடு சத்தம் போட்டுக் கொண்டே ஒரு உருவம் ஓடி வருவதைப் பார்த்த இரு உருவமும், அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றன.
வாய்க்கால், வரப்புகளைத் தாண்டி மரங்கள் சூழ்ந்த பகுதிக்குள் நுழைந்த அந்த உருவங்கள் ஓரிடத்தில் மூச்சு வாங்க நிற்கின்றன. அவர்கள்தான் முத்தையன்,மல்லையன். முத்தையன் மல்லையனைப் பார்த்து மூச்சு வாங்க வெற்றிப் புன்னகை பூக்கிறான். மல்லையன் அப்படியே தரையில் விழுகிறான்.
கோணிப்பைக்குளிருந்து இரண்டு விரால் மீன்கள் நழுவி வெளியில் வருகின்றன.இருவரும் வெற்றிப் பெருமிதத்தோடு அந்த மீன்களைப் பார்க்கின்றனர்.
காலையில் முத்தையன் ஊருக்குள் வரும் காவல்துறையினர், முத்தையனையும் மல்லையனையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.
காவல்துறையினர் எப்படி சரியாக இருவரையும் அடையாளம் கண்டார்கள்? மீன் பிடித்ததற்காகவா காவல்துறை இவர்களைக் கைது செய்தது? ஏன் கைது செய்தது? என்ன காரணம்? (கதையின் நகர்வு இந்தப் பிரச்சினையை வைத்துதான் நகர்கிறது)
முத்தையன் இளம் வாலிபன். மல்லையன் முத்தையனின் பக்கத்து வீட்டுக்கார தோழன். முத்தையன் எள்ளலும், எகத்தாளமும் உடையவன். அவனுக்கு சரியாக மல்லையன். முத்தையனின் அப்பாவிற்கு இருக்கும் நிலங்கள் மூலமாய் வருமானம் வருவதால் சாப்பாடு மற்றும் இன்னபிற செலவுகளுக்கு முத்தையனுக்குப் பிரச்சினை இல்லை. ஊர் சுற்றல், அங்கங்கே ரகளை என்று திரிகின்றவன். இப்படியான நாட்களில் ஒரு நாள், கட்சிக்காரர் ஒருவரைப் பகைத்துக் கொள்கிறான். கட்சிகாரருக்கு முத்தையனைக் கண்டாலே ஆவதில்லை. அதே போல முத்தையன் கட்சிக்காரரைப் பார்த்தாலே எரிமலையாகி விடுவான்.
இதற்கிடையில் வீரபாண்டி என்பவரைச் சந்திக்கும் முத்தையன் அவருடன் கைகோர்க்கிறான். அதன் காரணமாய் அவன் அரசுக்கு எதிரான தீச்செயல்களில் ஈடுபடுகிறான். முத்தையன் அப்பாவின் நண்பர் ஏட்டாக இருக்கிறார். அவர் முத்தையனின் நட்பு பற்றி, அப்பாவிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கும்படிச் சொல்கிறார்.
முத்தையனின் அப்பாவும், அம்மாவும் அவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள். அதன்படி பக்கத்து ஊரில் இருக்கும் தன் உறவினரிடம் பெண் பார்க்கச் சொல்ல, அவர்களும் முத்தையனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைச் சொல்ல முத்தையனை வற்புறுத்திப் பெண் பார்க்கச் செல்லும்படிச் சொல்கின்றார்கள் பெற்றோர்கள்.
முத்தையன் அருவியைச் சந்திக்கிறான். அருவி குணத்தால் அழகானவள். படுரகளையானவள். ஏட்டிக்குப் போட்டி என்றாள் அருவிதான். அத்தனையும் குறும்பு. முத்தையனின் முரட்டுத்தனமும், அருவியின் குறும்பத்தனமும் ஒன்று சேர, காதலில் விழுகின்றார்கள். காதலியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அவனுக்கு ஏதாகிலும் ஒரு பிரச்சினை வந்து, அவளைச் சந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஏன் இப்படியாய் பிரச்சினை வருகிறது என்பது அவனுக்குப் பெரும் புதிராய் இருக்கிறது.
காதலியைச் சந்திக்க விடாமல் தடுப்பது எது? யார்? ஏன்? எதற்கு?
முத்தையன் வீட்டில் திருமணத் தேதியைக் குறிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீரபாண்டியுடன் அரசுக்கு எதிரான ஒரு சம்பவத்தில் சிக்கிக் கொள்கிறான் முத்தையன். இதன் காரணமாய் முத்தையன் அந்தப் பகுதி முழுவதும் பிரபல்யமாகின்றான்.காவல்துறை முத்தையனைத் தேடுகிறது.
தேதி குறிக்கச் செல்லும் முத்தையன் அங்கு தனக்கு மனைவியாக வரப்போகிற அருவி, தன்னால் முன்பு வெறுக்கப்பட்ட கட்சிக்காரரின் மகள் என்பதையும், அந்தக் கட்சிக்காரர் தன்னுடைய உறவினர் என்பதையும் அறிகிறான்.
ஆரம்பத்தில் காவல்துறை ஏன் முத்தையனைக் கைது செய்தது? யார் அந்த வீரபாண்டி? அவர் ஏன் அரசுக்கு எதிராய் நடக்கிறார்? இவர் கூட முத்தையன் ஏன் சேர்ந்தான்? காவல்துறையினரையின் வழக்கிலிருந்து எப்படித் தப்பித்தான்? தன்னை வெறுத்த கட்சிக்காரரின் மகளை எப்படித் திருமணம் செய்தான்?