குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 6, 2009

தேசபக்தி முற்றிலும் மாறுபட்ட பார்வை

சமீபத்தில் குமுதம் தீரா நதி இதழில் திரு அ. மார்க்ஸ் அவர்கள் எழுதிய மானுடத்தை நேசிப்பவர்கள் ஏன் தேசபக்தியை வெறுத்தார்கள் என்ற தொடரினைப் படிக்க நேர்ந்தது. தேச பக்தியினைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையினை அவர் முன்னிருத்திருகிறார்.

அவரின் கட்டுரையில் சில பகுதிகள் இவ்விடத்தில் தருகிறேன். முழுமையும் படிக்க குமுதத்தில் நுழைக. இலவசம் தான். நன்றி குமுதம், நன்றி : அ.மார்க்ஸ்.
குமுதத்தில் நுழைய இவ்விடத்தில் கிளிக் செய்யவும்

டால்ஸ்டாயின் கூற்றாக விரியும் அவரது கட்டுரை தேச பக்தியின் இன்னொரு முகத்தினை காட்டுவதாக இருக்கிறது.

எந்த அரசாங்கமும் அதன் மக்களை அமைதியில் வாழவிடாது. ஏனெனில் அதன் இருப்பின் நியாயப்பாட்டிற்கான தலையாய காரணமாக விளங்குவது தேசங்களிடையே சமாதானத்தை நிலைநாட்டுகிற பணியை அது செய்கிறது என்கிற ஒரு பிம்பத்தை அது கட்டமைத்து வைத்திருப்பதால்தான். தேசபக்தியைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தப் பகை உணர்வைக் கட்டமைப்பதே இந்த அரசாங்கங்கள்தான். மக்களைப் பாதுகாக்கும் தம் திறனை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தேசங்களிடையே பகை அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தப் பகையை உருவாக்க தேசபக்தியின் துணையும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. வித்தை காட்டும் ஒரு நாடோடி, குதிரையின் வாலுக்கடியில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியை வைத்து அதைச் சீண்டிப் பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் போராடிதான் கட்டுப்படுத்திவிட்டதாகக் காட்டுகிறானல்லவா அப்படித்தான் இதுவும்...அடுத்த நாடு உங்களை ஆக்ரமிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள் என அரசு மக்களை நம்ப வைக்கிறது. அல்லது உள்நாட்டிலுள்ள சில துரோகிகளினால் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்கிறது என அது சொல்லுகிறது. எனவே இந்த ஆபத்துக்களிலிருந்து நீங்கள் தப்பவேண்டுமானால் அரசுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமென, அது மக்களை நம்ப வைக்கிறது. மக்களின் எதிர்ப்புகளின்போதும், (கொடும்) சர்வாதிகாரத்தை அது நிலைநாட்டுகிறபோதும் இவ்வாறு அது தேசபக்தியை அதிகம் வற்புறுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அரசதிகாரம் செயல்படுகிற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு அரசும் அதன் இருப்பை விளக்கியாக வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தியாகவேண்டும். தான் இப்படி இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகவிருக்கும் என்பதே அதன் தர்க்கம். மக்களுக்கு இந்த `ஆபத்து' குறித்து அது எச்சரித்தபின், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீதான கட்டுப்பாட்டை அது நிலைநிறுத்துகிறது. இந்நிலையில், அது இன்னொரு நாட்டைத் தாக்குகிற கட்டாயத்திற்குள்ளாகிறது. இவ்வாறு மற்ற நாட்டின் தாக்குதல் குறித்த அதன் எச்சரிக்கை எத்தனை `உண்மையானது' என்பது கண்முன் நிறுத்தப்பட்டு விடுகிறது...
ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளையும், பெருந் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஆளப்படுபவர்கள் தமது மனித கண்ணியம், பகுத்தறிவு, மனச்சாட்சி எல்லாவற்றையும் இழந்து அதிகாரத்திற்கு அடிமையாவதற்கும் இன்னொரு எளிய, தெளிவான, குழப்பமற்ற பெயர்தான் தேசபக்தி...தேசபக்தி என்பது அடிமைத்தனம்...


தேசபக்தியைப் `பழங்குடித் தேசியவாதம்' (Tribal Nationalism)) எனக் கூறும் ஹன்னா ஆரன்ட்: ``இது (தேசபக்தி) தனது மக்களனைவரும் `எதிரிகளின் உலகம்' ஒன்றால் சூழப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. `எல்லோருக்கும் எதிராக ஒருவர்' - நம் மக்களுக்கும் பிற எல்லோருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது என அது வற்புறுத்திச் சொல்கிறது. நாம் என்பது தனித்துவமானது, ஒப்புவமையில்லாதது, மற்ற எல்லோரிடமும் எந்த வகையிலும் இணைய முடியாதது எனக் கூறும் அது பொது மனிதம் சாத்தியமே இல்லை எனக் கோட்பாட்டு ரீதியாக மறுக்கிறது.

''மார்க் ட்வெய்ன்: ``ஒரு தேசபக்தன் தனது சொந்த நாட்டில், சொந்தக் கொடியின் கீழ் `செட்டில்' ஆகிறான். மற்ற தேசங்களை அவன் இழிவு செய்கிறான். சீருடை அணிந்த கொலைகாரர்களை (படைகள் / பயங்கரவாதிகள்) அமைத்துக்கொள்கிறான். அடுத்த நாட்டின் துண்டு துக்கானிகளைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கும் ஏராளமாகச் செலவிடுகிறான். இடைப்பட்ட காலங்களில் தன் கைகளில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டே `உலகளாவிய மனித சகோதரத்துவத்தை' வாயால் செயல்படுத்துகிறான்.

''அல்டாஸ் ஹக்ஸ்லி: ``தேசபக்தியின் பெரிய ஈர்ப்பு என்னவெனில், அது நமது மோசமான ஆசைகளைத் திருப்தி செய்கிறது. நாம் ரொம்பவும் மேன்மையானவர்கள் என்ற எண்ணத்தினூடாக (மற்றவர்களை) ஏமாற்றவும் அவர்களுக்கு ஊறு செய்யவும் விழைகிறான்.

''பெர்னாட் ஷா: அற்ப காரணங்களுக்காகக் கொல்லவும், கொல்லப்படவும் துணிவதே தேசபக்தி.

''ஆங்கார் வைல்ட்: ``தேசபக்தி - கயவர்களின் உயர் பண்பு.

''ஆல்பர்ட் ஈன்ஸ்டின்: ``தேசியம் - ஒரு இளம்பிள்ளைவாதம்.

கோல்ட்மான்: ``தேசபக்தி - சுதந்திரத்தின் கேடு.

''எர்னட்ஸ் பி பாக்ஸ்: ``தேசபக்தன் என்கிற சொல்லை ஒரு அவமானமாகக் கருதும் காலம் ஒன்று வரும்.

''சாமுவேல் ஜான்சன்: ``தேசபக்தி - அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.

'' (பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்த மேற்கோளைப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளதைக் காண்க).

ஆம்புரோஸ் பியர்ஸ்: ``மன்னிக்கவும். தேசபக்தி அயோக்கியர்களின் முதல் புகலிடம்.

எச்.எல். மென்கென்: ``இல்லை அது இன்னும் மோசமானது. அது முதல், இடை மற்றும் இறுதி எல்லா நிலைகளிலும் முட்டாள்தனமானது.''

Friday, January 2, 2009

யாரது யாரது ????

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. எனக்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

வாழ்க்கை அதன் பாதையினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கும்போது கொண்டாட்டங்களில் மனது செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

எங்குபார்த்தாலும் தர்மம் கொல்லப்படுகிறது. பூமி முழுதும் அதர்மம் தலை தூக்கி மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உடம்பினை அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை சுலபமாக இல்லாமல் கடும் இருள் சூழ்ந்த பாலைவனமாக மாறி வருகிறது. எங்கு செல்வது யார் மீது நம்பிக்கை கொள்வது என்று அறியாமல் மனிதர்கள் மனம் பிறழ்ந்து என்னென்னவோ செய்கிறார்கள்.

இருப்பினும் மனசினை சற்று ஆற்றுமைப் படுத்திக் கொள்ள சில பாடல்களை அவ்வப்போது கேட்பேன். எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. வெகு அழகான பாடல் வரிகள். நல்ல இசை... கேட்க கேட்க மனசு சற்று ஆறுதல் படுகிறது. இயற்கையினை விட எவரும் அழகில்லை இந்தப் பெண் உட்பட. ஆனால் இந்தப் பெண் அழகாக இருக்கிறார். இவரின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்.


Tuesday, December 30, 2008

முந்தானை முடிச்சு

எனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மீன் குழம்பு பற்றிய பேச்சு வந்தது.

“ என்னதான் சொல்லுங்க தங்கம், என் மனைவி வைக்கும் மீன் குழம்பை சாப்பிட்ட பிறகு வேறு எங்கும் மீன் குழம்பே சாப்பிட பிடிக்காது. மட்டன் குழம்பும், மட்டன் வறுவலும் இவள் கை பட்டால் போதும். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். நானும் ஊர் உலகமெல்லாம் சுற்றி வந்து விட்டேன் தங்கம். என்னவள் சமையல் செய்து சாப்பிட்டால் தான் சாப்பிடவே தோன்றும்” என்றார்.

ஆமோதித்தேன்.

நண்பரின் மனைவி தன் சமையல் பக்குவத்தால் கணவனை தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் என்பது புரிந்தது. எவ்விடத்திற்குச் சென்றாலும் மனைவியின் நினைப்பு வருவது என்பது பெரிய விஷயம். நண்பரின் மனைவிக்கு தாம்பத்தியம் பற்றிய சரியான அர்த்தம் தெரிந்திருக்கிறது.

யாருக்காக சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனைவியின் முகம் அவனுக்குள் புரளும். மனைவியின் முகமும், அவளின் சுவையான சமையலும் அவனுக்குள் மனைவி மீதான அன்பினை ஊழிக்காற்றாய் ஊதிப் பெருக்கும். அவனுக்காக அவனுடன் இசைந்து பெற்றுத் தரும் குழந்தைகளையும், குடும்பம் நடத்தும் அழகினையும் எண்ணி அவன் மாய்ந்து போவான். அவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவிக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்ற ஆவல் மேலோங்க ஓடி ஓடி சம்பாதிப்பான். இது தான் வாழ்க்கை. இது தான் தாம்பத்தியம். பிறருக்காக வாழ்வது தான் வாழ்க்கை.

கிராமப்புறங்களில் இந்த வாழ்வினைத் தான் முந்தானை முடிச்சு என்பார்கள். வாழ்வியல் கல்வியில் சமையல் கலை என்பது ஒரு முக்கியமான பகுதி. ஆனால் இன்றைய நவ நாகரீக பெண்கள் சமையல் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். விளைவு தாம்பத்திய வாழ்வு முறிவு.

மனிதன் வாழ்வது எதற்கு ? சிருஷ்டிக்காக. அதை மறந்து விட்டார்கள் இன்றைய மாந்தர்கள். புலனின்பமே வாழ்வின் அர்த்தமென்றெண்ணி வாழ்வினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கின்றார்கள்.


தாம்பத்திய வாழ்வின் இன்றியமையா பகுதி உணவு. இன்றைய ஸ்பெஷல் தென்னிந்திய மீன் குழம்பு வைப்பது எப்படி என்ற விளக்கப் படம். இப்படத்தைப் பார்த்து முயற்சிக்கவும்.

குறிப்பு : மீன் குழம்பில் கவுச்சி வாடை அடிக்க கூடாது. அப்படி கவுச்சி வாடை வந்தால் மீன் குழம்பு சரியில்லை என்று அர்த்தம். மீனை நன்கு கழுவி சற்று லெமன் சாறு சேர்த்து மீண்டும் கழுவினால் கவுச்சி வாடை போய் விடும். சங்கரா, வஜ்ஜிரம், பாறை, மஞ்சக்கிளி, உளி, தட்டக்காரா, செம்மீன், வெள மீன் போன்றவை மீன் குழம்புக்கு ஏற்றது. காரமும், புளிப்பும் சேர்ந்தால் தான் மீன் குழம்பு சுவையாக இருக்கும். ஆற்றிலிருந்து பிடித்து வரும் மீனுக்கும், கடல் மீனுக்கும் சுவை மாறுபடும்.

Monday, December 29, 2008

கோடீஸ்வரனும், குடியானவனும்

கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகனின் உடல் நிலைக்கு சற்று ஹாட்டான இடம் தேவை என்று டாக்டர் நண்பர் அறிவுறுத்தியதால், என் நண்பர் சஹாரா என்று சொல்லும் சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. வேறு வழியின்றி ட்ரெயினில் பயணம். ஏசி சேர்கார் ஒத்து வருமா என்று விடிகாலையில் டாக்டரிடம் கன்சல்ட் செய்த பின்னர் ட்ரெயின் ஏறினோம். காலை ஆறு முப்பதுக்கு கிளம்ப வேண்டிய ட்ரெயின் ஏழு பத்துக்குத்தான் கிளம்பியது. இரண்டரை மணிக்குச் சென்னை சென்று சேர்ந்தாகி விட்டது. தம்பி காருடன் காத்திருந்தான்.
இரண்டு நாட்கள் மகனின் உடல் நிலையின் மீது கவனம் கொண்டேன். சரியாகி விட்டான்.

இதற்கிடையில் நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் அவரின் வீட்டுக்கு டின்னர் சென்றோம். வண்டி அனுப்பி இருந்தார்கள். குடும்பத்தோடு பயணம். துரைப்பாக்கத்திலிருந்து ஆறு மணிக்கு கிளம்பினோம். முகப்பேருக்கு எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம். இரண்டரை மணி நேரம். டிராபிக்கில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்.

இரண்டு கோடி செலவழித்து வாங்கிய பென்ஸ் காரில் அமர்ந்திருக்கும் கோடீஸ்வரனும், வெறும் ஆயிரம் ரூபாயில் வாங்கிய சைக்கிளில் அமர்ந்திருக்கும் குடியானவனுக்கும் ஒரே தீர்ப்பை வழங்கிய சென்னையின் சிக்னல்கள் தான் உண்மையான நீதியரசர்களாய் தெரிந்தார்கள்.

சைக்கிள்காரர் நின்றிருந்தார். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பென்ஸ் கார் முதல் அனைவரும் சிக்னலில் காத்து கிடந்ததைப் பார்த்த போது உலகில் உண்மையான சமத்துவம் நிலவும் இடமாக சென்னை ட்ராபிக் சிக்னல்கள் தெரிந்தது. உடனே அமைச்சர்கள், உயரதிகாரிகள் என்று விதண்டாவாதம் பேச ஆரம்பிக்க கூடாது.

வாழ்க்கையினூடே சில இடங்களில் சில தவிர்க்க இயலாத சம்பவங்களில் நாமும் மாட்டிக் கொள்வோம் என்பது உண்மை என்று அறிந்து கொண்டேன்.

Friday, December 19, 2008

சாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Monday, December 15, 2008

பெண் சமத்துவம்




பெண்கள் விடுதலை பற்றிப் பேசிவரும் பெண்ணுரிமையாளரும், பெரியாரிஸ்டுமான ஓவியா அவர்களின் பொன்மொழி :

”குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு எந்த பாலின சமத்துவத்தையும் கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் பெண் விடுதலை என்ற பாதையின் வழியாக போராடும் போது இந்தக் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து விடும் என்பது என் கருத்து. அப்படி சிதைவதுகூட இருபாலாருக்கும் நன்மைதான் ”


மிஸ் வோர்ல்ட் 2008 இல் முதல் ரன்னர்அப்பாக வந்த பார்வதி, இரண்டாவது ரன்னரப் Gabrielle Walcott, மிஸ் வோர்ல்ட் 2008 பட்டத்தை வென்ற Ksenia Sukhinova இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். வாழ்க பெண்கள் விடுதலை. வாழ்க பெண் சுதந்திரம்.

Saturday, December 13, 2008

சகோதரியும் குழந்தைப்பேறும்

எனது தூரத்து உறவுக்காரச் சகோதரிக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத டாக்டருமில்லை என்றும் சொல்லும் அளவுக்கு ட்ரீட்மெண்டுகள் எடுத்தாலும் ஒன்பது வருடமாக பயனில்லாமல் இருந்திருக்கிறது. மனது வெறுத்துப் போய், என் அக்கா, வருத்தத்தில் இருந்தபோது ஒரு நாள் மருத்துவரிடம் கறாராக எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்று வேதனையில் கேட்டார். டாக்டர் யோசித்து விட்டு ஜெனரல் ஜெக்கப் எழுதி கொடுத்தார். அப்போது தான் தெரியவந்தது தைராய்டு சுரப்பியில் சற்றுப் பிரச்சினை என்று. இதன் காரணமாகத் தான் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கண்டு பிடித்தார்கள். 50 மாத்திரைகள் கொண்ட மருந்து புட்டிதான் என் சகோதரியின் குழந்தையின்மைப் பிரச்சினையைத் தீர்த்தது. தைராய்டில் ஹைபோ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று இரு பிரச்சினைகள் இருக்கின்றனவாம். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார் என் சகோதரி.

சரியான நேரத்தில் சரியான ட்ரீட்மெண்ட் கிடைக்கவில்லை என்பதால் என் சகோதரி பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளக் காரணம் இருக்கிறது. மக்களில் அதிக பேர், தலைவலி வந்தால் தலைவலி போக மட்டும் தான் மருந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த தலைவலிக்குக் காரணமென்ன என்று அறிந்து கொள்வதில்லை. இதைப் போன்றே வாழ்விலும் சில பிரச்சினைகள் வரும் போது பிரச்சினைக்குக் காரணம் என்ன்வென்று கண்டுபிடித்து தீர்க்க வேண்டும். இல்லையெனில் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும்.

Thursday, December 11, 2008

மந்திரம் கால் மதி முக்கால்

இந்தக் கதையில் வசிய மை பற்றி வந்திருப்பதால் வசிய மை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தனியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை படித்தால் இந்தக் கதை சற்று சுவாரசியமாய் இருக்கும்.

இந்தக் கதையோடு தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நிறைவு பெறுகிறது. காரணம் மனிதர்களின் தவறுகளினால் தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது எனவும், எல்லோரும் தர்ம சீலர்கள் ஆகி விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது எனவும் எனது இங்கிலாந்தில் வசிக்கும் பெண் தோழி ஒருவர் மொபைலினார். அவரின் கருத்துக்காக, இந்தத்தலைப்பில் வரும் கதைகள் இத்தோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்.

அவருக்கு இரண்டு பெண் மகவுகள். இருவரும் பேரழகிகள். ஊரிலிருப்போரின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலும், வாந்தி பேதி எடுத்தாலும் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார். மற்றும் இன்னபிற சொல்ல இயலா பிரச்சினைகளுக்கும் இவர் தான் நிவர்த்தி செய்ய வருவார். பிரச்சினை தீருமா என்றால் ”மோ”. (”மோ” என்றால் என்ன என்பதற்கு விரைவில் கட்டுரை ஒன்றினை மேற்கோள் காட்டுவேன். அதுவரை பொறுத்தருள்க)

இதுவுமின்றி இவருக்கு மற்றொரு தொழிலும் இருந்திருக்கிறது. வசிய மை தயாரித்துக் கொடுப்பது. கொடுத்தால் மட்டும் போதுமா ? பலன் கிடைத்ததா என்றால் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு சாகும் வரையில் மவுசு இருந்தது.

ஆண்களுக்கு பெண் வசிய மை கொடுப்பார். பெண்களுக்கு ஆண் வசிய மை கொடுப்பார். இதை விடுத்து இன்னுமொரு காரியமும் செய்து வந்திருக்கிறார். இவரின் மகளை ஊரின் பெரிய பணக்காரி ஒருத்தி விளக்குமாற்றால் அடி பின்னி எடுத்து விட்டார். தடுக்க வந்த இவருக்கும் சேர்த்து அடிகள் கிடைத்திருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். பணம் ஏழையோடு மோதுகிறது என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம். இவர் அப்போது ஒரு சபதமிட்டார். உன்னை ஒரு வாரத்திற்குள் பூமியிலில்லாதவாறு செய்து விடுகிறேன் என்று.

சொல்லி ஒரு வாரம்கூட முடியவில்லை. காலையில் நன்றாக இருந்த பணக்காரி சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கினாள். ஊரே பேசியது. இவர் தான் அவளைக் கொன்று விட்டார் என்று. ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை. பயம்.. பயம்.
இவர் செய்து வந்த காரியம் என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

நாட்கள் சென்றன. இவரின் இளைய மகள் தூக்கில் தொங்கினாள். மூத்த மகளுக்கு பைத்தியம் பிடித்தது. மனைவி இறந்தாள். பேரன் ஒருவன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இருக்க இடமும் இல்லை. பட்டினியாய் திரிந்தார். தொழிலும் நசிந்தது. படுக்கையில் கிடந்து இறந்தார்.

நான் தான் கொன்றேன்.. நான் தான் கொன்றேன்.... என்று அடிக்கடி முனகிக் கொண்டிருப்பாராம்.

தர்மம் சூட்சுமமானது தானே ?

பின்குறிப்பு : ஆண் வசிய மை தயாரிப்பு பற்றி எழுதவில்லையே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். பெண்ணை மயக்குவது தான் பெரிய பாடாய் இருப்பதால் பெண்ணைப் (அதாவது ஆணை மயக்கும் வித்தை) பற்றிய கவலை இன்றி இருந்து விட்டனர் போலும். எல்லா ஆண்களும் நடிகர்கள் போலவா இருக்கின்றார்கள் ? இல்லை ஆர்பி ராஜநாயஹம் போல அழகானவராகவா இருக்கின்றார்கள்?

அவர்பொருட்டு எல்லாருக்கும்

பெங்களூரில் இருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயன் ஓவரா உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவை படித்து பாருங்கள்.

அவர்பொருட்டு எல்லாருக்கும்


நேரம் இருக்கும் போதெல்லாம் இந்த இணைய தளத்துக்கு சென்று வரவும். வெகு அருமையாக எழுதுகிறார்.

சரவணகார்த்திகேயன் - www.writercsk.com


நன்றி : ரைட்டர் சிஎஸ்கே இணையதளம்.

Wednesday, December 10, 2008

கண்ணதாசனின் சப்பைக்கட்டு

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்காவது பகுதியில் தெய்வம் அன்றே கொல்லும் என்ற கதையினைப் பார்த்தோம். சும்மா கதை விடுகிறானென்று படிப்பவர்கள் நினைப்பார்கள். இங்கு, எனக்கு துணையாய் வருபவர் கண்ணதாசன். அவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவம் தெய்வம் அன்றே கொடுக்குமென்பதற்கு உதாரணமாய் மிளிர்கிறது.

திரையுலகின் ஜாம்பவான் சின்னப்பாதேவர் (பஹ்ரைன் செந்தில் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை) முப்பத்தைந்து வயது வரையில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற போதிலும் நேர்மையினைக் கடைப்பிடித்தார். வெற்றிலைப்பாக்கு கடையில் வாங்கிய ஆறு ரூபாய்க் கடனுக்காக கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினான் கடைக்காரன். நிதித் துன்பம் தாங்காமல் மருதமலை கோவிலுக்குச் சென்று முருகனிடம் அழுது புலம்பி விட்டு திரும்பிய போது காலில் இடறிய சிகரெட் பாக்கெட்டினை எத்தியவாறே வந்தவர் ஏதோ நினைத்தபடி பாக்கெட்டை எடுத்து பிரிக்க, உள்ளே இரு சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். கடன் ஆறு ரூபாய். தெய்வம் கொடுத்தது பத்து ரூபாய். அழுத அன்றே கொடுத்தது தெய்வம்.
தொடர்ந்து கண்ணதாசனே எனது கதைகளுக்கு உதவியாய் வருகிறார். அவரது அந்தக் கட்டுரையில் இருந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

" பாவமாம் புண்ணியமாம் எந்த மடையன் சொன்னான், சொர்க்கமாம் நரகமாம் எங்கே இருக்கின்றன அவை?, பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே " இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள். நரம்பு தளர்ந்து போன கிழவர்கள் மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை என்று நினைக்கிறார்கள். எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள் என்கிறது கிறிஸ்தவம். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது.

இப்படி எழுதி வரும் கண்ணதாசன் தர்மத்தின் தீர்ப்பு சூட்சுமமானது என்று சொல்லிவருமெனக்கு உதவியாய் கதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே சற்று சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

மாயவரத்திலே வாழ்ந்து வந்த விதவையினை ஐந்து பேர் சேர்ந்து கற்பழித்தனர். மூச்சுத் திணறி இறந்த பிறகும் பிணத்தையும் ஒருவன் கற்பழித்தான். நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஏழு பேர். ஏழு பேருக்கும் மறுநாள் தூக்கு. ஆறுபேர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக இருந்தான். நானும் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைதியாக இருந்த மனிதனிடம் பேச்சுக் கொடுத்தோம். அவன் சொன்னான்.

"ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதவாறு அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று, நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன் தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்து விட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததினால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கனவே செய்த கொலைக்களுக்காக சாகப் போகிறேன். "

அவன் சொல்லி முடித்த போது "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார். " என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா! " ஆமாம் பாவம் கொடுத்த "போனஸ்" தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

"என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தக் கதையில் தர்மம் சற்று சூட்சுமமாகத்தான் தன்னை நிலை நாட்டி இருக்கிறது என்பதும் படிப்போராகிய உங்களுக்கு புரிகிறதா.

ஆதலால் தான் சொல்கிறேன் " தர்மம் சூட்சுமமானது தானே? "

நன்றி : கண்ணதாசன், வானதி பதிப்பகம்.