குழந்தைகள் இரண்டும் லீவில் இருக்கின்றார்கள். 5 மணிக்கு எழுந்து எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு நேரம் மிகச் சரியாக இருக்கும். பரபரப்பான அந்த நாட்களில் இருந்து இருவருக்கும் கொஞ்சம் விடுதலை.
இந்த வருடம் கோவையில் குளிர் மிக அதிகம். வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தால் உடல் சில்லிட்டுப் போகிறது. சுற்றிலும் தென்னை மரங்களும், வேப்பமரமும் இருந்தாலும் கதகதப்பு இல்லை. ரூடோஸ் எப்படி குளிரைத் தாங்குகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது ரூடோஸை ஆஸ்ரமத்தில் விட்டுச் சென்றோம். வீட்டுக்கு வந்தவுடன் ரூடோஸ் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்காமல் ஏதோ இழந்தது போல இருந்தது. டென்சனில் உடனே ஆஸ்ரமத்திற்குச் சென்று அழைத்து வந்து விட்டோம். ”ரித்திக்கிட்டே தான்பா பாசமா இருக்கு. அவன் வந்தா அவனுடன் ஈச ஆரம்பித்து விடுகிறாள் ரூடோஸ்” என்று நிவேதிதா குறைபட்டுக் கொள்வாள். ரூடோஸ் பெயரைப் போலவே முரட்டுத்தனமானவள். வாயைத் திறந்தால் பார்ப்பவருக்கு குலை நடுங்கி விடும். குரைக்கும் போது முடிகள் சிலிர்த்து சிங்கம் போல சீறுவாள். என் மீது வந்து மோதினால் நான் அம்பேல். மல்லாக்க விழுந்து விடுவேன். ஆகையால் அருகில் விடுவது இல்லை. காலையில் தலையில் கொஞ்சம் தடவிக் கொடுப்பதோடு சரி. தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடு என்று தலையை அசைத்துக் கொண்டிருப்பாள் ரூடோஸ்.
கடந்த வெள்ளியன்று அம்பாள் சினிபார்க்குக்கு “வேலைக்காரன்” படம் பார்க்க மனைவியுடன் இருவரும் சென்றிருந்தனர். எனக்கு சிவகார்த்திகேயனின் லூசுத்தனமான பேச்சு பிடிக்காது. ஆகவே வர இயலாது என்றுச் சொல்லி மறுத்து விட்டேன். வீட்டுக்குள் நுழையும் போதே, “ஏங்க, நல்ல டிவிடிக்கடை இருக்கான்னு தேடனும்ங்க” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார் மனையாள். பசங்க,”அப்பா, லைட்டைப் போடுங்கடா, வீட்டுக்கு போறோம்னு, தியேட்டரில் கத்துறாங்கப்பா, சரியான மொக்கைப்படம்பா, நல்லவேளைக்கு நீங்க வரவில்லை, அம்மா, நெட்டில் பாத்துக்கலாம்மா இனிமேல், காசு தான் வேஸ்டா போச்சு” என்றார்கள் இருவரும் கோரசாக. நான் ஏற்கனவே ப்ளூசட்டை விமர்சனம் பார்த்து விட்டேன் என்பது மூவருக்கும் தெரியாது. பசங்க இனி சினிமாப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். நமக்கு அதுதானே வேண்டும்.
சிவகார்த்திகேயனுக்கு மிக்க நன்றி !
ப்ளூசட்டை என்றவுடன் மாமா டிவி புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று தாங்களே தங்களைக் கைதட்டிக் கொண்டு சிரித்துக் கொள்ளும் லூசுப்பயல்கள் செய்யும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸில் ப்ளூசட்டை போலவே காமெடி பண்ணினான் ஒருவன். எரிச்சலில் அவன் மண்டையை உடைக்கலாமா என்று கூட தோன்றியது. இவனுங்க காமெடியும், நக்கலும் சகிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தங்களைப் பெற்ற அம்மாவையும் பிறரோடு சேர்த்து வைத்துப் பேசி காமெடி பண்ணுவான்கள் கிறுக்கன்கள்.
அடுத்த வாரம் ஐபிஎஃப்பில் கம்ப்ளைண்டு செய்ய வேண்டும். அழிச்சாட்டியத்துக்கு ஆப்பு அடிக்கணும். நாடகத்துக்கு எல்லாம் சென்ஸார் இருப்பது போல டிவி நாடகங்களுக்கு சென்சார் வைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இது பற்றி விபரமாக எழுதிப் போட்டால் அவர் ஏதாவது ஆவண செய்வார் என்று நினைக்கிறேன்.
ஈரோடு மகேஸ் என்றொரு திமிர் பிடித்த ஒருவரை நான் இது நாள் வரை பார்க்கவில்லை. ஆனானப்பட்ட டிடி இப்போது மாமா டிவியில் இல்லை. இவனெல்லாம் சும்மா பச்சா? என்னா பேச்சு பேசுறான் தெரியுமா இவன்? அகங்காரமும், ஆணவமும் நிரம்பிய ஒருவன் இருக்கிறான் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். மகேஷ் பிறரை மதிக்கக் கற்றுக் கொள். இல்லையென்றால் காலம் உன்னை அடக்கி விடும்.
நேற்று குருநாதரிடம் ஆசீர்வாதம் வாங்க வெள்ளிங்கிரி சென்றிருந்தேன். கடந்த வாரம் பசங்க இருவரும் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தனர். லீவு விட்டால் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து விடுவது வழக்கம். யானையை மிக அருகில் பார்த்ததாகச் சொன்னார்கள். எனக்குத்தான் திக்கென்றது. பூண்டி கோவிலில் கூட்டம் அள்ளியது. கோவில்கள் தோறும் மக்கள் பெருக்கம்.
ஜோதி ஸ்வாமியிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ”சாமி அந்தக் காலத்தில் தினம் தோறும் தர்மம் போடுங்க என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் யாரையும் அப்படிப் பார்க்க முடியவில்லை” என்றேன்.
”வீடுகளில் இருந்து தர்மம் நீங்கிப் போய் விட்டது. தர்மம் இப்போது அதர்மமாக மாறிப் போனது. தர்மத்தை வாங்க இன்று யாருமில்லாது போயினர்” என்றார் ஸ்வாமி.
தர்மம் அதர்மமாக மாறியதன் காரணமாகவோ என்னவோ, இப்போதெல்லாம் மொத்தம் மொத்தமாக மனிதர்கள் இயற்கையால் கொல்லப்படுகின்றார்கள். ஏழை என்று பார்ப்பதும் இல்லை பணக்காரன் என்றும் பார்ப்பதும் இல்லை. கொத்துக் கொத்தாக அழிவுகள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழர்கள் அதிகம் இயற்கையால் அழிக்கப்படுகின்றனர். இதெல்லாம் அதர்மம் அதிகரிக்கும் போது பாரத்தைக் குறைப்பதற்காக தர்மம் செய்யும் வேலை என்றார் ஸ்வாமி.
ரஜினி காலக்கெடு வைத்த போதே தெரிந்திருக்கும். அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லப்போகிறார் என்று. ஆனால் ரஜினிக்குத் தெரியாத ஒன்று உள்ளது. தன் படத்தையே ஜெயிக்க வைக்க முடியாத ரஜினி, தமிழக அரசியலில் எப்படி ஜெயிப்பார்? என்பது தெரியவில்லை. ரஜினி ரசிகர்கள் பலரும் பல கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள். மாறிப்போன அரசியல் களத்தில் ரஜினிக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கவே முடியவில்லை. பிஜேபியின் மிஸ்டுகால் போலத்தான் ரஜினியின் இணையதளமும், ஆப்பும் இருக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. கமல் பாவம். ரஜினி வழக்கம் போல முந்திக் கொண்டார். கமலுக்கு இப்போது டிவிட்டர் பக்கம் வேலை இருக்காது என நினைக்கிறேன்.
அறுபது வயதில் கிட்னி கெட்டுப்போய் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தன் ரசிகனின் கையைக் கூட குலுக்க முடியாத நிலையில் ரஜினிக்கு இந்த வேலை தேவையா என்று தோன்றுகிறது. கிட்னி பத்திரமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அதுதான் பிரச்சினையானது. ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியும், புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியையும் மறக்க முடியாது. அவரின் உண்மையான நடிப்பில் மிளிர்ந்த அந்த வேடங்களுக்கு சமமாக அரசியல் வேடம் எடுபடாது என்றே தோன்றுகிறது.
மானிட உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆன்மீகம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. ஆன்மீகத்தின் பெயராலிந்த உலக மாந்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாத ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களால் உலக மாந்தர்களின் வாழ்க்கைக்கு என்ன செய்து விட இயலும். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவர்களால் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும். ஒரு சாதாரண அரசியல்வாதியை விட மிக ஆபத்தானவர்கள் ஆன்மீக அரசியல்வாதிகள்.
அதிமுக, திமுக பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆன்மீக தொடர்பான கட்சிகளின் செயல்பாடுகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மீகம் ஒட்டிய அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும்புகிற போது தற்போது நடந்து வரும் செயல்கள் கண் முன்னாலே தோன்றி மறைகின்றன.
மானிட உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆன்மீகம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. ஆன்மீகத்தின் பெயராலிந்த உலக மாந்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாத ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களால் உலக மாந்தர்களின் வாழ்க்கைக்கு என்ன செய்து விட இயலும். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவர்களால் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும். ஒரு சாதாரண அரசியல்வாதியை விட மிக ஆபத்தானவர்கள் ஆன்மீக அரசியல்வாதிகள்.
அதிமுக, திமுக பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆன்மீக தொடர்பான கட்சிகளின் செயல்பாடுகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மீகம் ஒட்டிய அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும்புகிற போது தற்போது நடந்து வரும் செயல்கள் கண் முன்னாலே தோன்றி மறைகின்றன.
இருப்பினும் காலத்தின் கையில் இருக்கும் அவரின் நூல்கண்டு என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தினை வழி நடத்தும் தர்மத்தின் பாதையில் முட்களும் இருக்கும். பூக்களும் இருக்கும். ரஜினிக்கு முட்களா இல்லை பூக்களா என்று காலம் பதில் சொல்லும்.