குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பக்தர்கள். Show all posts
Showing posts with label பக்தர்கள். Show all posts

Saturday, October 17, 2026

திருச்செந்தூர் முருகனும் பக்தர்களும்

ஏதோ ஒன்று தேவை, இது கிடைத்துவிடும், அது நடந்துவிடும், இது எப்படியாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கைளால் மனிதர்கள் வாழ்க்கையின் மீது பிடிப்பு கொண்டு வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூங்கிக் கிடக்கும் அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக, அவன் யாரையும் நம்பாமல், ஒருவரை மட்டும் நம்புகிறான். அது அவனுக்குப் பிடித்த கடவுள்.

அந்தக் கடவுள் அவனுக்கு நன்மை செய்கிறாரா, இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அதை புரிந்துகொள்ளும் தன்மைகூட அவனுக்கு இருக்காது. ஆனால், கடவுள் நமக்கு நன்மைதான் செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் கடவுளை மகிழ்ச்சிப்படுத்திட, அதனால் அந்தக் கடவுள் அவனின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதற்காக கோவில்களுக்குச் செல்கிறான்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாட்டுக்குச் சென்றிருந்தேன்.

காலையில் திருச்செந்தூர் கோவிலில் வழிபாடு செய்யச் செல்லும்போது, சன்னதியின் முன்னால் பயங்கரமான சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நான் ஓரமாக வீல் சேரில் அமர்ந்திருந்தேன்.

நான் கோவிலின் கருவறையின் அருகில் காத்துக்கொண்டிருந்தபோது, எனக்குப் பின்னால் ஒரு குடும்பம் நின்றுகொண்டிருந்தது. அவர்களின் கழுத்துகளிலும், கைகளிலும், கால்களிலும் தங்கங்கள் மின்னின. அவர்களின் உடம்பில் செல்வத்தின் தன்மை வழிந்துகொண்டிருந்தது. அவர்கள் அங்கு பாதுகாப்பாக நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். பொது மற்றும் 100ரூ கட்டண மக்கள் தரிசன வரிசை தடுக்கப்பட்டது. கருவறையின் முன்னால் இருந்த தடுப்பு விலக்கப்பட்டு, அந்தப் படிக்கட்டின் முன்னால் அவர்கள் அமர வைக்கப்பட்டார்கள். அவர்கள் அங்கு 15 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்தும் இருந்தார்கள். அவர்களுக்கென தீபாராதனை நடந்தது. மாலைகள் கிடைத்தன. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டார்கள்.

அதைப் பார்த்த அங்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண்கள் கத்தினார்கள், கதறினார்கள். பல பெண்கள் செக்யூரிட்டிகளுடன் சண்டை போட்டார்கள். பல பேர், “எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று திட்டிக்கொண்டிருந்தார்கள். அதற்கு எந்தப் பதிலும் யாரும் கொடுக்கவில்லை. செக்யூரிட்டிகள் வரிசையில் செல்லும்படி எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள்; சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். செக்யூரிட்டி ஆண்களும், பெண்களும், உப பணியாளர்களும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வைப் பார்த்தபடி சாட்சியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

மாற்றுத்திறனாளியாகையால் எனக்காக வரிசை தடுக்கப்பட்டது. தீபாராதனையும், விபூதி பிரசாதமும் கொடுத்தார்கள். அப்போது ஒரு பையன் அம்மா, இந்த அங்கிளால் நாம் சிறிது நேரம் நின்று தரிசனம் செய்கிறோம் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தான். இரு நிமிடங்களுக்குள் திரும்பி விட்டேன்.

அந்த எளிய மக்கள் ஒரு நொடிக்குள் தங்களுக்குப் பிடித்த முருகப்பெருமானை முகம் பார்த்து விட்டு, அந்த நொடியில் தங்கள் பிரார்த்தனையை அவரிடம் வைத்து விட்டு வர வேண்டும். கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் இலவச தரிசன வரிசை நிற்கிறது. ரூ100 கட்டண தரிசை வேறு நிற்கிறது. இதற்கிடையில் பண வரிசை. அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கடித வரிசைகள், அதிகாரிகள் வரிசை, அரசியல்வாதிகள் வரிசை, தெரிந்தோர் - அவருக்கு இவர் நண்பர் தொடர்பான வரிசைகள். இப்படி ஒவ்வொரு நாளும் எளிய மனிதர்கள் - எம் பெருமான் முருகனை தரிக்க முடியாதவாறு பல்வேறு தடைகள். இதில் என்னைப் போன்ற் ஆட்களின் வரிசை வேறு. மன வேதனை மண்டியது. கோவிலுக்கு சென்று வந்தால் இறைவனைத் தரிசித்து விட்டோமே என்ற மகிழ்ச்சி அல்லவா ஏற்பட வேண்டும்? ஆனால் எனக்கோ மன வேதனை மண்டியது.

இத்தனை மக்களை துன்பப்படுத்தியா இறைவனைத் தரிசிக்க வேண்டும்? என எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டேன்.

ஏன் இப்படி நடக்கிறது? நான் காரணமா என்று எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டேன்.

சுவாமி ஐயப்பனை தரிசிக்கச் சென்ற போது, எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைத்து, பக்தர்கள் மகிழ்ச்சியில் இருந்ததைக் கண்டேன். பல கேரளாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்ற போது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான தரிசனங்கள் கிடைத்தன.

ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இப்படி?

யாரோ ஒரு அலுவலருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கவலைப்பட்டவர்கள் - அந்த அலுவலருக்கு சம்பளம் ஒரு சாமானியனின் உழைப்பில் இருந்து கொடுக்கப்படுகிறதே - அவனைப் பற்றி எவரும் கவலைப்படுவதே இல்லை. ஏனோ? இது தான் காலம் காலமாக நடந்து கொண்டே இருக்க வேண்டுமா?

கட்டண வரிசைகளை நிறுத்தி, எல்லோருக்கும் ஒரே விதமான தரிசன வாய்ப்பை வழங்க உத்தரவிட முடியாதா?

எளிய மனிதர்களின் வழிபாட்டைக்கூட நிம்மதியாகச் செய்யவிடாமல் தடுத்து இறைவனை தரிசிக்க எப்படி மனம் வருகிறது என்றே புரியவில்லை.

எல்லா மனிதர்களுக்கும் கருணை நிரம்பி வழிந்தால், இத்தகைய ஒரு பிரச்சனையையும், இத்தகைய ஒரு பெரும் துன்பத்தையும் துயரத்தையும் கடவுளைத் தேடி வருபவர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை.

வளமுடன் வாழ்க.