"எல்லோருக்கும் எல்லாமும்" என்ற நிலையை எட்ட, ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாட்டில் மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
"மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழி" என்பார்கள். அதைப்போல, மக்களின் தேவைகள், மனநிலை மற்றும் எண்ணங்கள் எவையோ, அவைதான் ஒரு மிகச்சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியும்; அதற்கு அடிப்படையான காரணமாகவும் இருக்க முடியும்.
இந்த அடிப்படையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றை ஒன்றுதான்: முதலில் கதை கேட்பதையும், கதை சொல்வதையும் நிறுத்துங்கள். உலகிலேயே மிக மிக பிரபலமான, அதிகாரம் மிக்க, ஆனால் முழு உண்மையற்ற ஒரு விஷயம் உண்டென்றால் அது கதை சொல்வதும் கதை கேட்பதும்தான்.
மனிதர்கள் தோன்றி எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன.
ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு எழுத்தறிவோ, இலக்கண அறிவோ எதுவுமே இருந்ததில்லை.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் பின்னரே ஒலிகள், குறிகள், மொழிகள், எழுத்துக்கள் போன்றவை உருவாகி, தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றன.
இந்த வடிவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவை கதைகள்தான்.
கதைகள் என்பவை சாதாரணமானவை அல்ல. அது ஒரு மிகச்சிறந்த, அதிகாரம் மிக்க, ஒவ்வொருவருக்குள்ளும் மிக அந்தரமாக ஊடுறுவும் தன்மை கொண்ட, மிக மிக வலுவான ஊடகம் (Medium) ஆகும்.
இந்தக் கதை கேட்பதையும் கதை சொல்வதையும் மனிதன் எப்போது நிறுத்துகிறானோ, அப்போதே அவன் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் கதைகளில் நாம் அவ்வாறு கேட்பதில்லை. அது கதை என்று நிறுத்தி விடுகிறோ. நிலாவில் பாட்டி கதை இன்றைக்கும் பலரின் மனதில் அச்சாணி போல பதிந்திருக்கும். இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்றால் இல்லை. ஆனால் நிலாவைப் பார்த்ததும் பாட்டி கதை நினைவுக்கு வந்து விடும். இப்படித்தான் இந்தக் கதைகள் மனிதர்களின் வாழ்வியலை சீர்குலைக்க ஆரம்பித்தன.
ஒவ்வொருவரும் தாய், தந்தையரும் கதைகள் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகளின் உண்மை என்னவென்று யாருக்கேனும் தெரியுமா? என்றால் தெரியாது. தேவையில்லை ஏனெனில் அது கதை. அப்படியான கதைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய அழிவை உண்டாக்கி இருக்கின்றன என வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
ஒரு நல்ல ஜனநாயகத்தையும், நல்லதொரு அரசாட்சியையும் நாம் உருவாக்க வேண்டும் என்றால், நாம் முதலில் இந்தக் கதை சொல்வதிலிருந்தும், கதை கேட்பதிலிருந்தும் விடுபட வேண்டும்.
உண்மையான ஜன நாயகம் என்பது ஒவ்வொரு மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படித்தான் ஜன நாயக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறதா?
சிந்தியுங்கள் !

