இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பின், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் திரைத்துறையினரின் கருத்துக்களைக் காணும்போது, உலகமே கொண்டாடிய ஒரு மாபெரும் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது.
அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், "எல்லாரும் இவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே!" என்று ஆதங்கப்பட்ட வார்த்தைகள், பாரதிராஜாவின் இறுதிக்காலத் தனிமையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
தமிழ் சினிமாவில் எத்தனையோ முகம் தெரியாத புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவுக்கு உண்டு. ஆனால், அத்தகைய சாதனையாளரால் தன் சொந்த மகனை வைத்து மக்கள் ரசிக்கக்கூடிய ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுக்க முடியாமல் போனது ஒரு பெரும் அவலமே.
தன் மகனைத் திரைத்துறையில் ஜெயிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்திருக்கலாம். 'இயக்குனர் இமயம்' என்ற உயரிய பட்டம் இருந்தும், தன் சொந்த மகனின் திரைவாழ்வை அவரால் செப்பனிட முடியவில்லை என்றால், அந்தப் பட்டத்தால் அவர் பெற்ற பலன் என்ன என்ற கேள்வி எழுகிறது.
மகனின் மறைவுக்குப் பிறகு, அந்தத் துயரத்தின் காரணமாகவே அவர் திரைப்படப் பணிகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார். இறுதிநாட்களில் உடல்நலனுக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் முறையாக உட்கொள்ளவில்லை என்று கூறப்படுவது, அவர் அடைந்த மனவேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.
வாழ்வின் கணக்குகளும், காரண காரியங்களும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
அவருக்கு ஏன் இந்த நிலை? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அவர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டது போல, புதுமுகங்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் பெயர்களை மாற்றும் வழக்கம் அவரிடம் இருந்தது. "பெயரை மாற்றுவதற்கு எனக்கு உரிமை கொடுத்தது யார் என்ற எண்ணம் எனக்குள் ஒருமுறை தோன்றியது, அதன் பிறகே அதை நிறுத்தினேன்" என்று அவரே ஒப்புக்கொண்டார்.
இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோல அவருடைய திரைப்பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும். உலகில் எந்தவொரு செயலும் காரண காரியமின்றி நடப்பதில்லை.
அந்த வகையில், தன் வாழ்நாளில் யாரோ ஒருவருக்குச் செய்த செயலால் அல்லது யாரோ ஒருவரின் மனவருத்தத்தால் ஏற்பட்ட சாபமே, அவருடைய இறுதிக்காலத் துயரத்திற்குக் காரணம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால்: "யார் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒரு தொழிலையோ, செயலையோ நாம் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அதற்கான பலனை நாம் இந்த வாழ்விலேயே அனுபவித்தே தீர வேண்டும்" என்பதுதான்.
இது பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வரலாறும், மனித வாழ்க்கையும் நமக்கு உணர்த்தும் எதார்த்த உண்மை. யாரும் தப்பித்துப் போகவே முடியாது.
அவருடைய மறைவின்போது, "சினிமா உலகம் ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்துவிட்டது" என்று திரையுலகினர் கண்ணீர் வடித்தனர். பல முன்னணி நடிகர்கள் கதறி அழுததையும், அவரிடம் உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்து இன்று பெரிய இயக்குனர்களாக இருக்கும் பலரின் நாடகத்தனமான அஞ்சலிகளையும் நாம் பார்க்க முடிந்தது.
நாளைக்கு இறக்கப் போகும் நபர்கள், இன்று அழுது கொண்டிருக்கிறார்கள் என்பார்கள். வந்தோமா, அஞ்சலி செலுத்தினோமா, சென்றோமா என்று இல்லாமல் பாரதிராஜாவின் செயல்களைப் பற்றி பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது அவருடன் இவர்கள் இருந்தார்கள் என்பதுதான் பேச்சின் சாராம்சம்.
பவா செல்லத்துரை என்றொரு எழுத்தாளர் அஞ்சலிக்காக பேசிய போது பாரதிராஜா பற்றி டவுசர் போட்டுக்கிட்டு நின்றார், சாப்பிட்டார், தூங்கினார், பேசினார் என்பது போலவே தனி மனித செயல் துதியைப் பேசினார். அப்படிப் பேச அவருக்கு வெட்கம் கொஞ்சம் கூட இல்லை. அவர் நடந்தது, பார்த்தது, பேசியது, தின்றது, திட்டியது பற்றி விலாவரியாகப் பேசினார். இதை ரசித்துக் கேட்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம்.
நாம் அவர் இயக்கிய முதல் மரியாதை படத்தை ஆராயலாம்.
வயதான சிவாஜிக்கும், இளம் பெண் ராதாவுக்கும் இடையே மலரும் காதல் தான் கதையின் கரு.
இக்கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை என பாரதிராஜா பேட்டியில் சொல்லி இருக்கிறார். இளையராஜா வயதான ஹீரோவுக்கும், இளமையான ஹீரோயினுக்கும் காதல் டூயட் பாடல்களை இசையமைக்கவில்லையா என்று கேட்டால் என்ன சொல்வாரோ? அது ஒரு பக்கம் இருக்கும்.
இந்தப் படத்தில் பாரதிராஜா கையாண்ட ஓர் அருமையான விஷயம் இருக்கிறது. சிவாஜிக்கு அவரின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை கிடையாது. அவர் தனது மாமன் மகன் வேறு எவனுடனோ உறவு கொண்டதால் வயிற்றில் குழந்தை. மாமனின் வேண்டுகோளுக்காக அவளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளையும் பிறந்தது. அம்புட்டுதான் இருவரின் வாழ்க்கையும். சொத்து மாமன் கொடுத்தது. பெண்ணும் தான். குழந்தையோ தனக்கு உரிமையில்லாதது. ஒரு அவல வாழ்க்கையின் பிம்பமாக சிவாஜி. ஊருக்கு ராஜா, வீட்டுக்குள் கையாலாகாதவர்.
இந்த நிலையில் ஓடப் பெண் ராதா மீது அவர் கொண்ட காதல் நேர்தன்மை கொண்டது.
மனைவி இருக்கையில் மற்றொரு பெண்ணுடன் காதல் கொள்வத் கள்ளக்காதல். பாரதிராஜா இக்கதையில் காதலை நேர்மைப்படுத்தினார்.
எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளாத ஹீரோ, தனக்குப் பிடித்த ஒரு பெண்ணின் அன்பின் காரணமாக காதல் கொள்வது என்பது எதார்த்தமே. வயது வித்தியாசமென்பது காதலுக்கு கிடையாது.
இதுதான் இயக்குனரின் திறமை. பாரதிராஜா இப்படத்தில் சொன்ன காதல் உண்மையான காதலே.
அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமானவை. ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியாதவை.
புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதர்களைக் கொண்டாடும் இந்த உலகம், தனிமையில் இருக்கும்போது கைவிட்டுவிடும் என்பதற்கு பாரதிராஜாவின் வாழ்க்கையே ஒரு சாட்சி.
வந்தார், வாழ்ந்தார், சென்றார்.
இயற்கையை வெல்ல எவராலும் முடியாது அல்லவா?
