குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அட்ஜுடிகேசன். Show all posts
Showing posts with label அட்ஜுடிகேசன். Show all posts

Monday, December 12, 2022

நிலம் (102) - வெளிநாட்டு மக்களின் சொத்துக்கள் நூதன திருட்டு

யாரோ ஒருவர் தன் நலத்துக்காகச் செய்யும் செயல், ஏதோ ஒரு குடும்பத்தையே சீரழித்து விடுகிறது. ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு சரியில்லை எனில் ஒரு நபர் மட்டும் பாதிப்பதில்லை - குடும்பமே பாதிப்படைந்து சீரழிந்து விடும். கோர்ட்டை நன்கு பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு சாமானியன் ஒருவனின் சொத்தினை எளிதில் திருடி விடலாம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் - சொத்துரிமை சட்டங்கள் அவ்வளவு குழப்பமானவை. அதுமட்டுமின்றி நயவஞ்சக முறையில், நரித்தனமான வக்கீல் ஒருவரின் வாதத்தால் சட்டம் கேள்விக்குறி ஆக்கப்படும் பல்வேறு சம்பவங்களை நாமெல்லாம் பார்த்து வந்திருக்கிறோம்.

அனுபோகப் பாத்தியம் என்றொரு விதி உள்ளது அல்லவா? இது சட்டம் எனில் அதுவே அறமாகும் அல்லவா? 

உங்கள் மனசாட்சியைத் தொட்டு, எனது இந்தக் கேள்விக்குப் பதிலை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். 

இன்றைக்கு உத்திரப்பிரதேசத்தில் ராமருக்கு கோவில் கட்டும் இடத்தின் 800 ஆண்டுகால உரிமை மசூதிக்கு இருக்கிறது அல்லவா? 800 ஆண்டுகால மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது. இது சரியா? அவ்வளவுதான் என் கேள்வி. இந்தக் கேள்விக்கு சார்பற்ற நிலையில் இருந்து சட்டமே மேல் என்ற அறிவின் மூலம் பதிலைத் தேடிப்பாருங்கள்.

எனக்கு மதம், மொழி, இனம் ஆகியவற்றில் அதீத ஈடுபாடு இல்லை. ஏனென்றால் என் பிறப்புக்கு முன்பே மனிதர்கள் இவைகளுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். அந்த வகையில் நானொரு அடிமை வம்சத்தில் பிறந்தவனே. மதமும், மொழியும், இனமும் மனிதர்களை அடிமைப்படுத்தும் மாய வலை என்பதை புரிதல் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்போது திருட்டுக்கு வரலாம்.

சமீபத்தில் என்னிடம் சொத்துரிமை ஆய்வுக்கு வந்த ஆவணங்களில் இருந்த அட்ஜுடிகேசன் ஆவணத்தைப் பார்த்த போது - அதன் தன்மை எனக்கு சரியாகப்படவில்லை. வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தன் சொத்தினை விற்பதற்கு எழுதிக் கொடுக்கும் பொது அதிகார முகவர் பத்திரத்தினை, பதிவு அலுவலகத்தின் அட்ஜுடிகேசன் செய்து பதிவு செய்வர். 

சந்தேகம் வந்து விட்டால் எனக்குத் தூக்கம் வராது. இந்த நிலத்தை வாங்குபவரிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இடத்தின் லொகேசன் கேட்டேன். அனுப்பி வைத்தார். மறுநாள் சென்று விட்டேன்.  எனது வழியில் விசாரித்து அந்த நில உரிமையாளரைப் பிடித்தேன். 

நிலம் விற்பனை செய்வதாகக் கேள்விப்பட்டேன் என்று ஆரம்பித்த போது, அவர் விற்பனை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்தேன். புரபைலில் அவரின் போட்டோ பார்த்து அதிர்ந்தேன். இந்தப் போட்டோவில் இருந்ததும், புரபைல் போட்டோவும் வேறு. 

முற்றிலும் போகசாக தயாரிக்கப்பட்ட அட்ஜுடிகேசன் பத்திரம் அது. அதுமட்டுமல்ல இரண்டு பத்திரங்கள் ஆனவுடன், அந்த இடத்தில் வெளி நாட்டு நபரின் பெயரும், போலிப்பத்திரங்கள் செய்தவர்களின் பெயரும் கூட்டாக இருக்கின்றன. ஆன்லைனில் பார்க்கும் போது நம் பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

சம்பவத்தை எழுதி விட்டேன். 

இந்தச் சொத்தினை வாங்க வேண்டாமென்று சொல்லி விட்டேன். ஏன் என்று கேட்டார் வாடிக்கையாளர் - மோசடிப்பத்திரங்கள் என்று மட்டும் சொல்லி விட்டேன். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

ஆகவே, வெளி நாடு வாழ் தமிழர்களே, உங்கள் சொத்துக்கள் மீது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

* * *

உங்கள் மனதில் சஞ்சலமா? துன்பத்தில் இருக்கின்றீர்களா? எதைச் செய்தாலும் முடிவு தவறாகவே இருக்கிறதா? 

எனது வாழ்க்கையில் நான் பெற்ற துன்பங்கள் - அதில் நான் பெற்ற வெற்றிகள் பற்றிய அனுபங்களைச் சுவாரசியமாக எழுதி அமேசான் கிண்டிலிலும், டிஜிட்டல் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். உங்களுக்கு வழிகாட்டும் தோழனாக இருக்கும் என நம்பிக்கை உண்டு.

. டிஜிட்டல் புத்தகம் விலை ரூ.120/- விருப்பமுள்ளவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.