குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 2, 2024

கேள்விகள் - உச்ச நீதிமன்றத்துக்கு இது அழகா?


02.05.2024 தினதந்தி நாழிதழ் செய்தி

படித்து விட்டீர்களா?

இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள். 

''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.

1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிமன்றம் மதச்சாயத்துடன் இருக்கிறதோ என்ற ஐயத்தை மக்களிடம் தோற்று வித்திருக்கிறது. இந்து மதம் என்பது பற்றிய தெளிவான வரலாறு உள்ளது. அந்த வரலாற்றில் இந்து மதம் என்ற சொல் எப்படி வந்தது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன், இந்தியா என ஒரு முழு நாடாக என்றுமே இருந்ததில்லை என்பதால், தனித்தனியான சாம்ராஜ்யங்கள் தான் இந்தியக் கண்டத்தில் ஆண்டு வந்தன. இவைகளை எல்லாம் ஒன்றாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் முழு வரலாறாக, இந்திய வரலாறு என்னும் பெயரில், முதலில் ஹென்றி எலியட்டு என்னும் கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலரால் தொகுக்கப்பட்டது. இதன் காலம் 1867-77. 

ஆங்கிலேயர்களால் இந்த உப கண்டத்தில் புழக்கத்தில் இருந்த மதங்களின் வழிபாட்டு முறைகள் ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதின் விளைவாக சகல மதங்களையும் ஒரே மதமாக ஹிந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தனர். 

ஹிந்து மதம் என்பது ஒற்றை மதமல்ல. அது பல மதங்கள் சேர்ந்த மாலை போன்றது. இதில் சனாதனம் என்பது ஒரு மலர். முதலில் ருத்ரன் வழிபாடு இருந்தது. அது பின்னாளில் சைவம் என்று அழைத்தார்கள். சைவத்திற்கு எதிர் மறையான புனையப்பட்ட கதைகளை மூலாதாரமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டவைகள் வைணவம், சமணம், புத்தம் ஆகியவை. இந்த மதங்களின் முறையற்ற கலப்பே இன்றைக்கு ஹிந்து மதம் என்றழைக்கப் படுகின்றது. 

இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் 28.05.2021ம் தேதியில் தினமணியில் எழுதிய நாம் சைவர்களா? இந்துக்களா? என்ற கட்டுரையில், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார். 

அதென்ன ஆறு சமயங்கள்? 

சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்

விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்

சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்

விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்

முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்

சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம் 

இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.

இப்படியான வரலாறு கொண்டதுதான் இந்து மதம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு சமயம் அல்லது மதத்தில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் வேறுவிதமானவை.

மருதத் தினை - நல்லாவூர் கிழார் எழுதிய அகநானூறு நூலில் பாடல் 86,  லைவன் தோழியிடம் சொன்னது என கீழே உள்ள பாடல் உள்ளது. இப்பாடலில் தமிழர் திருமணத்தில் அக்னி பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. 

உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரிக்

கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்  

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென

உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடிக்

‘கற்பினின் வழாஅ நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’ என

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல் 

கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ

முயங்கல் விருப்பொடு, முகம் புதை திறப்ப

அஞ்சினள் உயிர்த்த காலை, யாழ, ‘நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என 

இன் நகை இருக்கை பின் யான் வினவலின்

செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர

அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து

ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்

மடங் கொள் மதைஇய நோக்கின்  

ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

என்கிறது அகநானூறு பாடல். இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

உளுந்தம் பருப்பைச் சேர்த்துச் சமைத்த பொங்கலோடு குவிந்த சோற்றுத் திரளை உண்ணுதல் ஒரு பக்கம். வரிசையாகக் கால்களை ஊன்றிய பெரிய பந்தலில், புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ”கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக” என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக்  கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.  

இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து,  ”பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ” என்று அவளை வாழ்த்தி,  என்னிடம் அவளைத் தந்தனர்.

நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம்.  தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள்.  அவளை அணைக்கும் விருப்பத்துடன்,  நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.

”உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு” என்றேன்.   இனிய மகிழ்ச்சியுடன்,  நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்தக் கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.

அக நானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளபடி அக்னி வலமும் இல்லை. தாலி கட்டுதலும் இல்லை. தமிழர் வாழ்வில் அக்னி முன்பு ஏழு அடிகள் நடந்து திருமணம் செய்வித்தல் என்பது இல்லவே இல்லை என இப்பாடலைச் சாட்சியாக கொள்ளலாம். 

அதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வரும் தமிழர்களின் திருமண முறைகள் மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவி மணம் மற்றும் மடலேறி மணம் ஆகியவைகள்.

இந்த தீர்ப்பினை ஒட்டி எழும்பும் கேள்விகள்:

சார் பதிவாளரிடம் பதிவு செய்யும் திருமணங்களின் நிலை இனி என்ன? 

கிராமங்களில் கோவிலில் மாலை சூடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன?

கொங்கு பகுதியில் அக்னி இன்றி பாடல் பாடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன? 

இதற்கு முன்பு காதல் திருமணம் செய்து பதிவு செய்தவர்களின் பதிவு ரத்தாகுமா? 

பதில் தருமா நீதிமன்றம் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

பல கேள்விகளை எழுப்புகிறது இந்தச் செய்தியும் - தீர்ப்பும்.

பல்வேறு மதங்களின் கூட்டுக் கலவையான இந்து மத திருமணங்களை சட்டம் இயற்றி அதன் படி பதிவு செய்ய அரசு முனைகிறது. ஆனால் இந்த தீர்ப்பு அதையும் செல்லாதாக்கி விடுகிறது என்பது கவலைக்குரியதாகும். 

ஒரு சமயத்தின் திருமண நிகழ்வுகளைப் பிற சமயங்களைச் சேர்ந்தவரும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு இந்த தீர்ப்பு கொண்டு செல்கிறது.

உச்ச நீதிமன்றம் சட்டத்தின் படி இயங்கவில்லையோ என்ற சந்தேகத்தை இந்திய மக்கள் மனதில் விதைத்துள்ளது இந்த தீர்ப்பு.

வாழ்க வளமுடன்..!

இந்தப் பதிவு எனது தனிப்பட்ட கருத்து. யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. தீர்ப்புக்கான விமர்சனமும் அல்ல.

1 comments:

TBR. JOSPEH said...

இந்த தீர்ப்பு நிச்சயம் திருத்தப்படும்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.