குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 24, 2024

இர்பானுக்கு மன்னிப்பு - சட்டம் பிரபலமானவர்களின் காலடியில் புதைக்கப்படுமா?

இர்பான் என்ற ஒரு தனி நபர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை கேலிக்கு ஆட்படுத்தி இருக்கிறார். பிரபலமாக இருப்போர் தன் செயலைப் பலரும் கவனிப்பார்கள் என்ற நினைவு இல்லாமல் இருப்பார்கள் என்று நம்ப நாமொன்றும் முட்டாள்கள் இல்லை.

உலகெங்கும் சுற்றிச் சுற்றி சாப்பிட்டு - அது சரியில்லை, இது சரியில்லை, இங்கே நல்லா இருக்கு, அங்கே நல்லா இருக்கு என பல ஹோட்டல்கள் நடத்தியவர் போலவும், சமையல் கலையில் உலகளவில் தேர்ந்தவர் போலவும் - பல வீடியோக்களைப் போட்டு காசு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நபர் - தான் செய்த செயல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரியாமல் வீடியோ போட்டார் என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் - அதை சட்டம் ஏற்றுக் கொண்டால் - சட்டம் செத்துப் போனது போல் ஆகும்.

இர்பான் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர். வீடியோ எடுக்கும் போது அவருடன் இருந்தவர்கள் எவருக்கும் ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்ற சட்டம் பற்றித் தெரியாதா? 

இவரின் மனைவி மருத்துவமனைக்கு ஆலோசனைக்குச் சென்றிருப்பாரே அப்போது ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்று தெரியாமலா வீடியோ எடுத்தனர்.

தெரியாமல் செய்து விட்டேன். மன்னிப்பு  தாருங்கள் என்றால் - சட்டம் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இனி எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பே தண்டனை என்றால் சிறைச்சாலை எதற்கு? 

காவல்துறை எதற்கு? 

வக்கீல்கள் எதற்கு? 

நீதிமன்றம் எதற்கு? 

நீதிபதி எதற்கு? 

விசாரணை எதற்கு? 

எதுவும் தேவையில்லையே. தேவையற்ற வகையில் மக்களின் வரிப்பணத்தினை ஏன் செலவு செய்ய வேண்டும்.

தெரியாமல் ஹெல்மெட் போடவில்லை - போக்குவரத்துக் காவல்துறை மன்னிக்குமா?

போர்சே காரை தெரியாமல் எடுத்து இருவரைக் கொன்று விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

தெரியாமல் ஊழல் செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

தெரியாமல் கொலை செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

இவருக்கு மன்னிப்பு வழங்கினால் சட்டம் தன் மதிப்பை இழக்கும். நீதிமன்றம் தன் மாண்பை இழக்கும். சட்டசபைகளில் சட்டம் இயற்றி, ஆளுநர்களிடம் போராடி சட்டமியற்றினால் இர்பான் போன்றவர்கள் அதை மீறினால் சட்டசபைக்கு என்ன மரியாதை? 

சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதிக்கு என்ன மரியாதை?

ஏன் மக்கள் ஓட்டுப்போட வேண்டும்? சட்டசபை எதற்கு? ஜனாதிபதி எதற்கு? எல்லாவற்றையும் நீக்கி விடலாமா?

இர்பானின் திமிர் இது. 

தன்னை மீடியாவில் பேசுபொருளாக மாற்றவும், எப்போதும் தனக்கொரு ஹைப் இருக்க வேண்டுமென்பதற்காகவும் - இதைப் போன்ற சட்டத்தினை மீறும் வீடியோவை இர்பான் போட்டிருக்கிறார்.

இவருக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை எனில் தமிழக அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கருதப்படும் நிலை உண்டாகும்.

என்ன வேண்டுமானாலும் செய்வேன் - செய்து விட்டு மன்னிப்புக் கேட்பேன்  என்றால் அவனுக்கு சட்டம் என்ன செய்யும் என்று சட்டப்படி காட்ட வேண்டும். இல்லையெனில் சட்டம் பிரபலங்களின் காலடியில் புதைக்கப்படும்.

இவரைப் பாலோ செய்யும் இளம் தலைமுறையினருக்கு சட்டத்தை மீறினால் - மன்னிப்புக் கேட்டால் போதும் என்ற எண்ணம் ஏற்படும். அது சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல சமுதாயத்தில் தேவையற்ற அமைதியின்மையை உண்டாக்கும்.

தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவர் மீது சட்டப்படியான கடுமையான தண்டணையைப் பெற்றுத் தர வேண்டும்.

உணவுகளைப் பற்றி வீடியோக்களில் பேசும் இர்பான் - என்ன படித்திருக்கிறார்? உணவுகள் பற்றியும், அந்த உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் பற்றியும் - அதன் பின் விளைவுகள் பற்றியும் தெரிந்திருக்கிறாரா? பின் எப்படி அந்த உணவு நன்றாக இருக்கிறது, இது சுமாராக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்? 

இவரின் வீடியோக்களில் காட்டப்படும் உணவகங்களை - தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆராய்ந்திருக்கிறதா?  இப்படி பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வரும் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - சட்டத்தினை மீறும் அனைவருக்கும் - அரசு மன்னிப்பு வழங்க வேண்டும்.

சவுக்கு சங்கரும் ஃபெலிக்ஸும் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுமா சட்டம்? இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இவர்கள் இருவருக்கும் மன்னிப்புக் கொடுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்...!


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.