குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Thursday, May 2, 2024

கேள்விகள் - உச்ச நீதிமன்றத்துக்கு இது அழகா?


02.05.2024 தினதந்தி நாழிதழ் செய்தி

படித்து விட்டீர்களா?

இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள். 

''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.

1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிமன்றம் மதச்சாயத்துடன் இருக்கிறதோ என்ற ஐயத்தை மக்களிடம் தோற்று வித்திருக்கிறது. இந்து மதம் என்பது பற்றிய தெளிவான வரலாறு உள்ளது. அந்த வரலாற்றில் இந்து மதம் என்ற சொல் எப்படி வந்தது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன், இந்தியா என ஒரு முழு நாடாக என்றுமே இருந்ததில்லை என்பதால், தனித்தனியான சாம்ராஜ்யங்கள் தான் இந்தியக் கண்டத்தில் ஆண்டு வந்தன. இவைகளை எல்லாம் ஒன்றாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் முழு வரலாறாக, இந்திய வரலாறு என்னும் பெயரில், முதலில் ஹென்றி எலியட்டு என்னும் கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலரால் தொகுக்கப்பட்டது. இதன் காலம் 1867-77. 

ஆங்கிலேயர்களால் இந்த உப கண்டத்தில் புழக்கத்தில் இருந்த மதங்களின் வழிபாட்டு முறைகள் ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதின் விளைவாக சகல மதங்களையும் ஒரே மதமாக ஹிந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தனர். 

ஹிந்து மதம் என்பது ஒற்றை மதமல்ல. அது பல மதங்கள் சேர்ந்த மாலை போன்றது. இதில் சனாதனம் என்பது ஒரு மலர். முதலில் ருத்ரன் வழிபாடு இருந்தது. அது பின்னாளில் சைவம் என்று அழைத்தார்கள். சைவத்திற்கு எதிர் மறையான புனையப்பட்ட கதைகளை மூலாதாரமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டவைகள் வைணவம், சமணம், புத்தம் ஆகியவை. இந்த மதங்களின் முறையற்ற கலப்பே இன்றைக்கு ஹிந்து மதம் என்றழைக்கப் படுகின்றது. 

இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் 28.05.2021ம் தேதியில் தினமணியில் எழுதிய நாம் சைவர்களா? இந்துக்களா? என்ற கட்டுரையில், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார். 

அதென்ன ஆறு சமயங்கள்? 

சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்

விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்

சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்

விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்

முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்

சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம் 

இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.

இப்படியான வரலாறு கொண்டதுதான் இந்து மதம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு சமயம் அல்லது மதத்தில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் வேறுவிதமானவை.

மருதத் தினை - நல்லாவூர் கிழார் எழுதிய அகநானூறு நூலில் பாடல் 86,  லைவன் தோழியிடம் சொன்னது என கீழே உள்ள பாடல் உள்ளது. இப்பாடலில் தமிழர் திருமணத்தில் அக்னி பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. 

உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரிக்

கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்  

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென

உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடிக்

‘கற்பினின் வழாஅ நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’ என

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல் 

கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ

முயங்கல் விருப்பொடு, முகம் புதை திறப்ப

அஞ்சினள் உயிர்த்த காலை, யாழ, ‘நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என 

இன் நகை இருக்கை பின் யான் வினவலின்

செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர

அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து

ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்

மடங் கொள் மதைஇய நோக்கின்  

ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

என்கிறது அகநானூறு பாடல். இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

உளுந்தம் பருப்பைச் சேர்த்துச் சமைத்த பொங்கலோடு குவிந்த சோற்றுத் திரளை உண்ணுதல் ஒரு பக்கம். வரிசையாகக் கால்களை ஊன்றிய பெரிய பந்தலில், புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ”கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக” என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக்  கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.  

இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து,  ”பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ” என்று அவளை வாழ்த்தி,  என்னிடம் அவளைத் தந்தனர்.

நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம்.  தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள்.  அவளை அணைக்கும் விருப்பத்துடன்,  நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.

”உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு” என்றேன்.   இனிய மகிழ்ச்சியுடன்,  நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்தக் கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.

அக நானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளபடி அக்னி வலமும் இல்லை. தாலி கட்டுதலும் இல்லை. தமிழர் வாழ்வில் அக்னி முன்பு ஏழு அடிகள் நடந்து திருமணம் செய்வித்தல் என்பது இல்லவே இல்லை என இப்பாடலைச் சாட்சியாக கொள்ளலாம். 

அதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வரும் தமிழர்களின் திருமண முறைகள் மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவி மணம் மற்றும் மடலேறி மணம் ஆகியவைகள்.

இந்த தீர்ப்பினை ஒட்டி எழும்பும் கேள்விகள்:

சார் பதிவாளரிடம் பதிவு செய்யும் திருமணங்களின் நிலை இனி என்ன? 

கிராமங்களில் கோவிலில் மாலை சூடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன?

கொங்கு பகுதியில் அக்னி இன்றி பாடல் பாடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன? 

இதற்கு முன்பு காதல் திருமணம் செய்து பதிவு செய்தவர்களின் பதிவு ரத்தாகுமா? 

பதில் தருமா நீதிமன்றம் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

பல கேள்விகளை எழுப்புகிறது இந்தச் செய்தியும் - தீர்ப்பும்.

பல்வேறு மதங்களின் கூட்டுக் கலவையான இந்து மத திருமணங்களை சட்டம் இயற்றி அதன் படி பதிவு செய்ய அரசு முனைகிறது. ஆனால் இந்த தீர்ப்பு அதையும் செல்லாதாக்கி விடுகிறது என்பது கவலைக்குரியதாகும். 

ஒரு சமயத்தின் திருமண நிகழ்வுகளைப் பிற சமயங்களைச் சேர்ந்தவரும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு இந்த தீர்ப்பு கொண்டு செல்கிறது.

உச்ச நீதிமன்றம் சட்டத்தின் படி இயங்கவில்லையோ என்ற சந்தேகத்தை இந்திய மக்கள் மனதில் விதைத்துள்ளது இந்த தீர்ப்பு.

வாழ்க வளமுடன்..!

இந்தப் பதிவு எனது தனிப்பட்ட கருத்து. யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. தீர்ப்புக்கான விமர்சனமும் அல்ல.

Sunday, December 11, 2022

நாசமாகிக் கொண்டிருக்கும் தமிழினப் பெண்கள்

சமூப் பிராணியான மனிதன், எல்லாமும் நிரந்தரமென்று நினைத்துக் கொண்டு இருக்கிறான். இந்தச் சிந்தனையை ஏற்கலாம். அபாயகரமான போக்கு ஒன்று இப்போது பெண்களிடம் திணிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

நாளைக்கு என்னவோ நடக்கட்டும், இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கணும் என நினைப்பது பேராபத்து.

அதுமட்டுமல்ல நவீன சாமியார்கள் தமிழர்களுக்கு வாழ் - அதை இன்றே என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். கொண்டாட்டமாய் வாழுங்கள் என்கிறார்கள். 

இதைப் போன்ற சாமியார்களுக்கு குடும்பமாய் இருப்பது பிடிக்காது. இது அவர்களின் உளப்பான்மை. ஆனால் வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பேச்சாற்றலால் குடும்ப அமைப்பை நிர்மூலமாக்குவார்கள். அவர்களை ஆசிரத்திற்கு அடிமையாக்குவார்கள். சம்பளமில்லா வேலைக்காரர் ஆக்குவார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் அபத்தம்.  உலகெங்கும் கிளைகளைத் துவக்குவார்கள். இவர்களை நம்பி ஆசிரம அடிமைகளாக மாறும் நபர்கள், தங்களின் வயதான காலத்தில், உதாசீனப்படுத்துவதை அறிவார்கள். உள்ளே வரும் வரை எல்லாம் கிடைக்கும், வந்த பிறகு எதுவும் கிடைக்காது. இந்த நயவஞ்சக வேலையைக் காலம் கடந்த பின்னர் தான் அறிவர். 

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கு அனுபவம் இருக்கிறது. அதைப் படிக்க எனது ”கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகத்தை அமேஷானில் வாங்கிப் படித்துப் பாருங்கள். அதிரும் ஆசிரம உண்மைகளை பகிர்ந்து உள்ளேன்.


(அமேசான் கிண்டிலில் படிக்கலாம் - இந்த புத்தகம் உங்களுக்கான வழிகாட்டி)

குடும்பம் சிதைந்தால் குதூகலம். பெண்ணுரிமைப் பேசித் திரியும் பல ஈத்தரைகள் - ஆணாதிக்கம் பற்றிப் பேசுவார்கள். ஆணாதிக்கம் என்பது கொடும் சிறை என்பது போல பேசி மதி மயக்குவார்கள். அவ்வாறு பேசும் ஆண்களின் குறி பெண்ணுடல். குடும்பத்தோடு இருந்தால் முடியாது, தனியால் இருந்தால் ஈசியா மடியும்.

பெண்களுக்கு இண்டிபெண்டன்ஸ் என்ற வாழ்வியல் முறை பல வழிகளில் புகுத்தப்படுகிறது. அவர்கள் அதை நம்புகிறார்கள். விளைவு இண்டிபெண்டட் மதர் என்றொரு கேட்டகரியில் நுழைகிறார்கள். இந்த இண்டிபெண்டட் முறையினால் பெண்கள் செய்யும் சேட்டைகள் பற்றிய ஒரு பதிவு வாட்சப்பில் பகிரப்பட்டது. அதை அப்படியே தருகிறேன். எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். அதிர வைக்கும் பெண்களின் மன நிலையினால் அவஸ்தைப் பட போவது அவர்களே என்பதை அறியாமல் தமிழினப் பெண்கள் தன் நிலையை மறந்து போயினர். பரிதாபத்துக்குரியவர்களாகப் பெண்கள் மாறிய கொடுமையைப் படியுங்கள் கீழே.

* * * 

பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அனுபவப் பதிவு. 

கோவையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த அதிர்ச்சி செய்தி.

இவரது மேரேஜ் சென்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்து இருக்கிறார். 

சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன்.

பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா.

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது.

போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.

ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா.

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம் என்றார்கள் அந்தப் பெற்றோர்.

அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்.

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. 

அதுக்கு அந்தப் பையன் குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்னு சொல்லி இருக்கான். 

அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்கன்னு சொல்ல வேண்டியது தானே. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான். இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான். சமைக்கணுமாம். காஃபி போடணுமாம்னா, பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்கறா. 

அவ சொல்றதும் எங்களுக்கும் நியாயமா படுது என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா.

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.

பேசிப் பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை.

என்ன விசயம் என்ற கேட்ட போது, நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். யார்கூட போனேன்னு கேட்டான். 

இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே. ஐ வாண்ட் மை ஸ்பேஸ். 

எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல. இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை "காம்ப்ரமைஸ்". நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை என்றாள் ஒரு பெண். 

அவளும் 30 வயதை நெருங்குகிறாள். ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது. எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.

அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்குற மாதிரி பையன் இருக்கா என்றார்கள்.

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள். எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். 

அவளுக்கு காஃபி கலக்க கூடத் தெரியாது. இதைச் சொல்லிடுங்க முதல்ல என்றார்கள்.

எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்.

எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது என்று சொல்லும் பெற்றோர்.

எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. 

அவங்க விளக்கு கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் மூட் அவுட் ஆயிடுவா என்று தகவல் தரும் பெற்றோர்.

இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால் கூட, பையன் வீட்டினர் தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு, வரன் ஏதாவது வந்திருக்கா என்று பொறுப்பாக திரும்ப கேட்கிறார்கள். 

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட

பொண்ணு ஃப்ரைடேதான் வருவா. சண்டேதான் பேசணும். சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா. அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். 

இன்னும் சிலர், நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது.

இவர்தான் இனி நம் வாழ்க்கை. என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான் என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.

இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன் என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன். அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு. என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும் என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.

அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக் கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க  கூடாது என்று நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண். அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை.

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது.

ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே. கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய்,

இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம் என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

அனைவரையும் சொல்லவில்லை. ஒரு சில பர்சன்டேஜ்தான்.
இன்றைய பெண்களிடம் இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும் என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப் போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார். நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
பட்டிருக்கிறார் என்றால்

அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா.

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது. 

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி,

தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்.

* * *
குறிப்பு : தமிழினப் பெண்களின் இந்த மன நிலையால் - தமிழர்களின் குடும்ப அமைப்புச் சிதைக்கப்பட்டு விட்டால் முடிவில் தமிழர்களின் வாழ்வியலையும் மொத்தமாக அழித்து விடலாம் என்றொரு சிந்தனை செய்யும் சதிகாரர்கள் தான் இத்தகைய வாழ்வியலுக்குப் பெண்களை பல வழிகளில் பேசியும், எழுதியும் ஈர்க்கிறார்கள் என்றொரு பேச்சு உலா வருகிறது.