குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.