குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 29, 2021

நிலம் (86) - காக்கா நிலங்களும் அனுமதி பெறாத மனைப்பிரிவும்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு வெகு முக்கியமான காக்கா நிலங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம். 

அதென்ன காக்கா நிலங்கள்?

HILLS AREA CONSERVATION AUTHORITY (HACA) என்று குறிப்பிடப்படும் பகுதிகளை காக்கா நிலங்கள் என்று சொல்வார்கள்.

சமீபத்தில் என்னிடம் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். அவர் கொடுத்த நில ஆவணங்களை ஆய்வு செய்த போது அது காக்கா நிலப்பகுதியில் இருந்ததைக் கண்டுபிடித்தேன். முறைப்படி அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தேன்.

என்றைக்குமே அனுமதி வழங்கவே வழங்கப்படாத காக்கா நிலத்தின் சைட் அது. அந்த நிலத்தினை வாங்கினால் அதன் சாதக பாதகங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அவர் அந்த நிலத்தினை வாங்கவில்லை. வேறு இடம் வாங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்கள் காக்கா நிலங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் அனுமதி பெறாத (மக்களின் பார்வையில் அது பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள்) மனையிடங்களை வரன்முறைப்படுத்தி, அனுமதி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர புதிய சட்டத்தை அதிமுக அரசு வெளியிட்டது. 

என்னைப் பொறுத்தவரை அந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்து ரத்து செய்யலாம். ஏனென்றால் மாநில வரையறைக்குள் மட்டும் HACA சட்டம் இல்லை. ஒன்றிய அரசின் ஒப்புதலும் வேண்டும். அது நமக்குத் தேவையில்லை. அரசின் பிரச்சினை. (ஈஷாவுக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். யானை வழித்தடங்களில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தலாம் என்று இந்தச் சட்டம்  சொல்கிறது)

இந்தச் சட்டத்தின்படி அனுமதி வழங்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் அனுமதி பெறாத மனைகளை அனுமதி பெறவே இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திரு நெல்வேலி, விருது நகர், நீலகிரி, சேலம், வேலூர், விருது நகர் மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காக்களில் உள்ள கிராமங்கள் அனுமதி பெற இயலாதவை என்று சட்டம் சொல்கிறது.

உதாரணமாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டி, பூளுவம்பட்டி, ஆனமலை ஹில்ஸ், ஆனைகட்டி, தடாகம், ஓடந்துறை, கல்லார், ஜகனாரி, கலிக்கல், பில்லூர், நெல்லித்துறை, சுண்டப்பட்டி, கண்டியூர், நீலகிரி கிழக்கு, மேலூர், ஆனைகட்டி வடக்கு, மஞ்சம்பட்டி மற்றும் அமராவதி ஆகிய கிராமங்களில் இருக்கும் மனைப்பிரிவுகளை எப்போதும் வரைமுறைப்படுத்த இயலாது.

சமீபத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி தருவதாகச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அனுமதி பெறா மனைப்பிரிவு போலவே அதுவும் அரசின் அனுமதி இல்லாத ஆவணம் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த அனுமதி பைசாவுக்கும் பிரயோஜனப்படாது.

காக்கா பகுதியில் நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல அரசின் சட்டங்கள் இருக்கின்றன. 

காக்கா பகுதியில் தனிப்பட்ட முறையில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, அதற்குள் வீடு கட்டுவதற்காக அனுமதி பெறுவது என்பது வேறு. ஆனால் மனை இடமாக பிரித்து விற்பனை செய்யும் போது அதற்கான அனுமதி பெறுவது என்பது வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக கருதி விடக்கூடாது.

காக்கா பகுதிகள் எவை, அவைகளில் நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை என்ன? அவைகளை வாங்கலாமா இல்லையா? என்பது பற்றி தெரிந்து கொள்ள என்னைத் தொடர்பு கொள்ளவும். 

கட்டணம் உண்டு.

காக்கா பகுதி மனைகளை வாங்க நினைப்பவர்கள் லீகல் கன்சல்டேசனுக்கு என்னை அணுகலாம்.

குறிப்பு : சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெறா வீட்டு மனைப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. அவ்வாறு ரத்துச் செய்யப்பட்ட பத்திரங்கள் கொண்ட நிலத்தினை வாங்கி ஏமாற வேண்டாம். கடனும் கொடுக்க வேண்டாம்.




Monday, July 26, 2021

விடிகாலை இரண்டு மணியில் மணி

விடிகாலை இரண்டு மணி. விழித்துக் கொண்டேன்.

சன்னலைத் திறந்தேன்.

அமைதி தவழும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகள் இருளாய் தெரிந்தது.

மீண்டும் படுக்கையில் படுத்தேன். 

அருகில் கோதை  சுருண்டு சிறுபிள்ளையாய் முடிகலைந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

ஏகாந்தம் மண்டிய விடிகாலை நிசப்சத்தில் நினைவுகள் பின்னோக்கின.

அவன் வீட்டுக்கு வந்த போது அழுக்காய், சகதியில் புரண்டு, நாற்றமடித்துக் கொண்டிருந்தான். ஷாம்பூ போட்டு இரண்டு முறை குளிக்க வைத்தாள். அமைதியாக உட்கார்ந்திருந்தான். சேட்டை எதுவும் செய்யவில்லை. வெள்ளையும் செவலையும் கலந்த நிறத்தில் ஒல்லியாய் வீட்டுக்குள் சுத்தி வந்து கொண்டிருந்தான்.

ரூடோஸ் அவனைப் பார்த்து கர்ண கடூரமாய் குலைத்துக் கொண்டிருந்தான். இவளுக்காக தான் அவனைக் கொண்டு வந்திருந்தேன். ஜோதி சாமிதான் அவனை வீட்டுக்கு அனுப்பி வைந்திருந்தார்.

மணி என்று பெயர் வைத்தேன்.

மறுநாள் ரேபிட்ஸ் தடுப்பூசி மற்றும் இன்னொரு ஊசி போட்டுக் கொண்டு வந்தோம். அவனுக்கு என தனியாக உணவு தட்டு, சங்கிலி, கழுத்துப் பட்டை, பிஸ்கெட், எலும்பு மற்றும் இன்ன பிறவனவெல்லாம் வாங்கி வந்து கொடுத்தேன்.

நன்றாகச் சாப்பிட்டு விட்டு, காற்றாடியின் கீழே சுகமாய் படுத்து உறங்குவான். புதிய ஆட்கள் வந்தால் ஒரு சத்தம். ஈரக்குலை நடுங்கும் கர்ண கடூரமானது அவனது குரல்.

அவனது தலை பெரியது. சிங்கம் போல இருப்பான். அசைந்து அசைந்து நடந்து செல்லுகையில் பெண் நடப்பது போலவே இருப்பான். 

ரூடோசும் அவனும் ஒன்றாகவே இருந்தனர். ரூடோசுக்கு அவளது முழு உரிமையில் பங்குக்கு மணி வந்து விட்டான் என சில நாட்கள் சோகமாக இருந்தாள். பின்னர் பழகிக் கொண்டாள்.

(மணி - லேப்ராடர் வகை)

     



இப்படியான சூழலில் மணிக்கு ஒரு பிரச்சினை வந்தது.

ரூடோஸ் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மைக்கு வருவாள். பெண்கள் போலவே அவளது பிறப்புருப்பில் இரத்தம் வடியும். நான்கைந்து நாட்களில் அவள் மேட்டிங்க்குக்கு தயாராக ஆவாள். அவள் மணியை முற்றிலும் நிராகரித்து விட்டாள். அவனும் அவளுடன் சேர்வதற்காக என்னென்னவோ சேட்டைகள் செய்து பார்த்தான். ஊஹூம். விளைவு குரைக்க ஆரம்பித்து விட்டான். 

மிருக மனம். இயற்கையின் அழைப்பு. மணி சோர்வடைந்து விட்டான். தினமும் அவளைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தான்.

பிள்ளைகள் இருவரும் வளர்கின்றனர். ரித்திக் இருவரையும்  நன்கு கவனித்துக் கொள்வான். நிவேதிதா மணியின் அருகில் செல்வதில்லை. பதின்ம வயதில் இருக்கும் இருவருக்கும்மிருகங்களின் இனச்சேர்க்கை சேட்டைகள் தேவையற்ற பதிவுகளை உருவாக்கி விடும் என மனதின் ஊடே சிந்தனைகள். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விதமான சம்பவங்கள் ஏதேனும் மனதுக்குள் பதிந்து உணர்வுகளை கிளர்ச்சி அடைய வைத்து விடும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமே என்ற பயம் வேறு.

மணியை வேறு இடத்தில் விட்டு விடலாமென முடிவெடுத்து விட்டேன். மனசு கேட்கமாட்டேன் என்கிறது. நான்கைந்து நாட்களுக்கு குரைத்துக் கொண்டிருப்பான். சரியாகி விடுவான் என்றாலும் மணியின் இயற்கை உணர்வுகள் பாதிக்கப்படும் போது அவன் தன் கோபத்தினை அவன் முன்னால் இருக்கும் பொருட்கள் மீது காட்டுகிறான். கடித்து துவம்சம் செய்கிறான்.

விளாங்குறிச்சியில் மேட்டிங்குக்கு அடிக்கடி நாய்கள் வரும். ஆனால் இங்கே அதற்கான வாய்ப்பில்லை. 

தாராபுரத்தில் இருக்கும் நண்பரின் தோட்டத்தில் ஜூலி இருந்தாள். அவள் திடீரென இறந்து போனாள். பெரிய தென்னைத்தோட்டம் வைத்திருக்கிறார். தோட்டத்துக்குள் வீடு.

அவரை அழைத்தேன்.  ஏனென்றால் நாய் வளர்த்தவர்களுக்குத் தான் நாய்கள் மீதான அன்பு இருக்கும்.

“கொண்டு வந்து விடுங்கள் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

இவரின் நண்பரின் வீட்டில் சில்க்கி இருப்பதாகவும். அவளுக்கு மணி மேட்டிங்குக்கு சரியாக இருப்பான் எனவும் சொன்னார். 

அவனுக்கு இது எதுவும் தெரியாது. 

எனக்குதான் விடிகாலையில் விழிப்பு வந்து பதட்டத்தோடும், மன வருத்ததோடும் இருந்தேன். அவன் உணர்ந்து கொண்டானா எனத் தெரியவில்லை.

ஏழு மணிக்கு காரின் பின்னால் உட்கார்ந்து கொண்டான். அவனது தடுப்பூசி புத்தகம், அவனது உணவு தட்டு, சங்கிலிகளை எடுத்து காருக்குள் வைத்தான் ரித்திக். நிவேதிதா சோகமாக இருந்தாள். எனக்கோ மனமெல்லாம் டன் கணக்கில் கனத்தது.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நினைவுகள் வந்து சென்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். அதுவும் மணலில் வடித்த கல் போல அடிக்கடி உதிர்ந்து கொண்டே இருந்தது.

காரில் சமத்தாக உட்கார்ந்து கொண்டான். அவன் காரின் பின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், நேரம் செல்லச் செல்ல படுத்து விட்டான். பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் சாலையில் இருக்கும் நாயக்கர் ஹோட்டலில் இரண்டு இட்லி சாப்பிட்டேன். கோதை பொங்கல். பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தோம். அமைதியாகச் சாப்பிட்டான். அழைத்தேன். திரும்பிக் கூட பார்க்கவில்லை.

தோட்டத்துக்குள் காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கினான். கோதையால் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அங்கிருந்த ஒரு கருப்பு நாட்டு நாயிடம் சென்று முகர்ந்து பார்த்தான். ஒரு சில இடங்களில் ஒன்றுக்குச் சென்றான். நண்பர் அவனை கோதையிடமிருந்து வாங்கி, மரத்தில் கட்டினார்.

அவன் அவரைப் பார்த்து தன் அன்பினைத் தெரிவித்தான். 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினோம். அவன் காரில் இருக்கும் என்னைப் பார்த்துக் குரைத்தான். ஒரே ஒரு தடவைதான் குரைத்தான்.

அவனுக்குத் தெரிந்து விட்டது. 

இனி நான் அவனின் எஜமானன் அல்லவென.

நெஞ்சுக்குள் கத்தியைச் சொருகியது போல வலித்தது.

விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.

கோதை அறியாமல் துடைத்துக் கொண்டேன். நான் கலங்குவதை அவள் எப்போதும் பார்த்தது இல்லை. அது என் இயல்பும் இல்லை.

எங்கிருந்தோ வந்தான். இடையில் என்னோடு சில காலம் வாழ்ந்தான். இனி அவன் என்னோடு இல்லை. 150 கிலோ மீட்டர் தூரத்தில் வாழ்கிறான்.

இதோ இன்றைக்கு விடிகாலைப் பொழுதில் அவனின் நினைவுகளால் நிரம்பிக் கிடக்கிறது மனசு.

அன்பு வலிகள் நிறைந்தது. வேதனைப்படுத்துகிறது.

அவனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

கண்கள் கலங்கி மனதும் தளர்ச்சி அடைகிறது.

அவன் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியோடு வாழட்டும்.

Saturday, July 17, 2021

நிலம் (85) - ரத்து செய்யக்கூடிய பத்திரங்கள் எவை?

நல்ல குளிர். காலையில் சீரகத் தண்ணீர் ஒரு குவளை அருந்தினால் தான் மட்டுப்படுகிறது. சுற்றிலும் மலை. எங்கெங்கு நோக்கினும் பச்சை. இன்னும் சிறிது நேரத்தில் பட்சிகள் படபடப்பாய் குரல் எழுப்ப ஆரம்பித்து விடும். அமைதி தவழும் இயற்கைச் சூழல்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரவாகமெடுக்கும் சிறுவாணியின் சுவையான நீர், நல்ல காற்று, இயற்கை சூழல் வீட்டின் மேற்கே சலசலத்து ஓடும் சிற்றோடை -- பிள்ளைகள் படிப்புக்காக மாறிய இடம். நடக்கும் தூரத்தில் கல்விச் சாலை. 

ஹாஸ்டலில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விளாங்குறிச்சியில் பரபரவென ஓடும் வாழ்க்கைச் சூழல். இங்கோ அமைதி. பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

முதலில் ஒன்றியப் பிரச்சினையைப் பார்க்கலாம். 

இந்திய அரசமைப்பு மார்ச் மாதம் 31ம் தேதி 2008 - திருத்தி அமைக்கப்பட்டதன் தமிழ் வடிவத்தில் மாநிலங்கள் சேர்ந்த ஒன்றிய அரசு எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் ஒன்றியம் என தான் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதாரம் கீழே

இது இந்திய அரசுக்காக சட்ட (ஆட்சிமொழிப் பிரிவு) துறையினரால் மொழி பெயர்கப்பட்டு அது 2009 ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகவே ஒன்றிய அரசு என்பதே சரி. பேச்சு மொழிக்காக மத்திய அரசு என்று அழைக்கலாம். அல்லது பிஜேபி அரசு என்று அழைக்கலாம். அல்லது மோடி அரசு என்றும் அழைக்கலாம். அது அழைப்பவரின் வசதி.

ஆனால் மிகச் சரியானது இந்திய ஒன்றிய அரசு என்பதே. அது மட்டுமின்றி ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பிலும் யூனியன் ஆஃப் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடுத்து கொங்கு நாடு பிரச்சினை

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராய் பொறுப்பேற்ற போது கொங்கு நாடு என்று கையொப்பம் இட்டாராம். அப்படி எல்லாம் தன் விருப்பத்துக்கு எழுத அவருக்கு உரிமை இல்லை. அது தனி பிரச்சினை. 

ஒரு மாநிலத்தினை பிரிக்க குடியரசு தலைவரின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தின் வழியாக அந்த மாநிலத்தின் சட்டசபைக்கு பரிந்துரை கோரி அனுப்ப வேண்டும். அம்மாநில சட்டசபை அதை அங்கீகரிக்க வேண்டும். 

இது கடைசி நடைமுறை. 

இதற்கு முன்பு மாநிலத்தினை பிரிப்பதற்கான தேவை இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். மக்கள் விரும்பி அதை போராட்டத்தின் வழியாக அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். தமிழர்களைத் தனித்தனியாகப் பிரித்து விட்டால் எளிதில் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவது போல நுழைந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் சிற்றறிவு கொண்ட அதிகாரப் பசி கொண்டலையும் பாக்டீரியா தமிழர்களின் நயவஞ்சக எண்ணம் இது.

மொழி வழி  மாநிலங்களைப் பிரிப்பது என்பது இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும். இங்கு தமிழர்களாய் இருக்கும் நய வஞ்சக பதவி ஆசை பிடித்தலையும் நரிகளின் ஊளை இது.

ஆகவே கொங்கு நாடு என்பது கனவிலும் நடக்காத ஒன்று. தமிழர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் பேசும் மக்களை தனி மாநிலமாக பிரிப்பது என்பது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும் என்று ஒன்றிய பாரதீய ஜனதாவுக்குத் தெரியும். 



வெட்டிப் பேச்சு, ஒன்றுக்கும் உதவாத அரசியல் வார்த்தைகள் என பார தீய ஜனதா கட்சி கேவலமாக அரசியல் செய்கிறது. தமிழக மக்கள் இக்கட்சியையும், இக்கட்சியினை தமிழகத்தில் வேரூன்ற வைத்த லீச்சசுமான ஊழலுக்காகவே நான்கு  லட்சம் கோடியை கடனாக வைத்துச் சென்றிருக்கும் அதிமுகவின் துரோகிகளையும் அடையாளம் கண்டு கொண்டு அமைதியாக அதற்கான வேலையினைச் செய்ய வேண்டும்.

டிவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் மூலம் போலி அடையாளத்துடன் லட்சக்கணக்கான பதிவுகள் போடப்படுகின்றன. அதையும் தமிழர்கள் தான் செய்கிறார்கள். ஆகவே இவ்வகைப் போலிப் பதிவுகளையும் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

அடுத்து ரத்துச் செய்யக்கூடிய பத்திரங்கள் பற்றிப் பார்க்கலாம்.

சமீபத்தில் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். தான செட்டில்மெண்ட் ரத்துப் பத்திரம் ஒன்றின் மூலம் சொத்தின் உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நிராகரித்து விட்டேன். சொத்தானது கிரையம் ஆகவில்லை. மூன்று கோடி ரூபாய் தப்பித்தது.

தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது. அவ்வாறு செய்து சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது செல்லாது என்பதை அறிந்து கொள்க.

பதிவுத்துறை என்பது ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தின் மற்றொரு பகுதி. ஆரம்பகாலத்தில் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தான் பதிவு செய்யப்பட்டன. இப்போதும் வங்கிக்கடனுக்காக மீட்கப்படும் சொத்துக்களின் பத்திரங்கள் நீதிமன்றங்கள் மூலமாக பதிவு செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆவணங்களை எளிதாகக் கையாள பதிவுத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சொத்துரிமைப் பதிவுகளை நீக்கவோ அல்லது ரத்துச் செய்யவோ நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதை அறிந்து கொள்க. யார் எதைச் சொன்னாலும் நம்பி விடக்கூடாது.

இந்த நடைமுறையில் ஒரு சில ஆவணங்களை ரத்துச் செய்வதற்கு பதிவுத்துறைக்கு அனுமதி உண்டு.

உயில் பத்திரம்

பொது அதிகார ஆவணம்

கிரைய ஒப்பந்த பத்திரம்

மேலே கண்ட மூன்று பத்திரங்களை மட்டும் துணைப்பதிவாளர் அலுவலகம் மூலம் ரத்துச் செய்யலாம்.

உயிலை எழுதியவர் அதை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்து மறு உயில் எழுதலாம் அல்லது எழுதாமலும் இருக்கலாம். உயில் ரத்து, புதிய உயில் ஆகியவைகளை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளலாம்.

பொது அதிகார ஆவணத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்யலாம். இப்போது அதிகாரம் எழுதி வாங்கியவரும் பதிவு அலுவலகம் வர வேண்டும் என்கிறார்கள். இந்த ரத்துப் பத்திரம் பதிய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் பொது அதிகார ஆவண அதிகாரம் பெற்றவர் சொத்தின் உரிமையாளர் இல்லை என்பது. சொத்தின் விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளரின் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டு முகவரின் பெயருக்கு வழங்கக் கூடாது.

கிரைய ஒப்பந்த ஆவணத்தை - அதில் குறிப்பிட்டிருக்கும் சாராம்சங்களின் படி  துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரத்துச் செய்யலாம்.

சொத்துக்கள் வாங்கும் முன்பு இவைகளைக் கவனத்தில் கொள்க.

 ==================================

 #செட்டில்மெண்டுபத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம்
#இரத்துபத்திரம் #பாகபிரிவினை  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை #தாய்பத்திரம் #சார்பதிவகம்

Saturday, July 10, 2021

தமிழ்திசையின் மனம் குழப்பும் செய்தி - பொதுச் சொத்தினை மக்களுக்கு நிர்வகிக்க தெரியாதா?

இன்று காலை தினசரியில் கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். செய்தியின் தலைப்பில் ஏதோ உள் குத்து இருக்கிறது என்று புரிந்தது. கட்டுரை எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். புரிந்து போனது.

இதை நன்கு படித்துப் பாருங்கள். இதன் தாக்கம் மனதுக்குள் விரியும்.

கோவில் அடிமை நிறுத்து என ஆரம்பித்து வைத்த டான்சர் ஜக்கிவாசுதேவ்  அவர்களைத் தொடர்ந்து மனவிரோத மதக்கட்சிகளும் இணை, துணை, குறுக்குசாலை, ஆன்லைன், டிவி பொய்யர்கள் போர்டு ஜோலிக்காரர்கள் எல்லாம் பொங்கு பொங்குவென பொங்கினார்கள்.

கோவில் அடிமை நிறுத்து என்று யாருக்குச் சொல்ல வேண்டும்? 

இன்றும் கோவில்களில் தீண்டாமையைக் கொண்டு வரும் ஆகம விதிகளை செயல்படுத்துவர்களிடம் சொல்ல வேண்டும். 

ஒரு கால் கட்டை விரலை குருதி வழிந்த சிவலிங்கத்தின் கண்களில் வைத்துக் கொண்டு தன் இன்னொரு கண்ணைப் பிடிங்கி எடுத்த கண்ணப்பருக்கு ஆகம விதிகளின் படி சிவபெருமான் காட்சி தர முடியாது என்று சொல்லவில்லை. 

இல்லாத ஒரு விதியை வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இறைவனுக்கு பூஜை செய்யும்படி எந்த இறைவனும் அவதாரம் எடுத்து வந்து கருத்துத் தெரிவிக்கவில்லை. 

இறைவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். பக்திக்கும் கட்டுப்படுபவனல்ல.

இவர்கள் கோவிலை மக்களிடம் திருப்பிக் கொடு என்கிறார்கள். அப்படிச் சொன்னவர்களின் மூதாதையரோ அல்லது அப்பன், தாத்தாக்களோ கோவிலைக் கட்டிக் கொடுக்கவில்லை. 

கோவில்களில் இருக்கும் செங்கல்கள் ஒவ்வொன்றும் மக்களின் வரிப்பணம். மன்னர்கள் வரிப்பணத்தில் கோவில் கட்டினார்கள்.

அரசு நிர்வகிப்பது ஒன்றே சட்டப்பூர்வமானது. 

மசூதிகள், சர்ச்சுகளுக்கும் தமிழர்கள்  இனத்துக்கும் தொடர்பில்லை. அதை ஏன் தமிழ்நாடு அரசு நிர்வகிக்க வேண்டுமென்று தெரியவில்லை.

தமிழும், தமிழ் மதமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.  

மதத்தின் வழியாக பொய் புரட்டுகளையும் பேசிக் கொண்டு, செங்கல்களால் ஆட்சியைப் பிடித்தவர்களின் அல்லுசில்லுகளும், அயோக்கிய சிகாமணிகளும் கூப்பாடு போடுகின்றார்கள்.

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை வைத்திருக்கும்.

இங்கே தமிழகத்தில் பல சதிகாரர்களின் நயவஞ்சகத்தினால் மூளை குழம்பிப் போன மக்களிடம் ஒரே ஒரு செங்கலைக் காட்டி திமுகவை வெற்றி பெற வைக்க உதயநிதி உதவினார்.

செங்கல் என்பது சாதாரணமானது அல்ல.

கட்டுரையில் மேய்ச்சல் நிலம் என்ற வார்த்தையை நாராயணி பயன்படுத்துகிறார். நாராயணி அவர்களே, அது தமிழர்களின் வார்த்தை.

“சாதாரண மனிதர்களுக்கு  எதையும் சுயமாக நிர்வகிக்க தெரியாது என்ற கருத்தாங்கள் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றன” என குறுந்தலைப்பு வைத்திருக்கிறது தமிழ் திசை. (கட்டுரையின் விஷம் இதுதான். மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்குவது)

(நன்றி தமிழ் திசை)
 

சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது எங்கனம் சமத்துவ பரிபாலனம் நடக்கும்? ஜாதியின் வேர்கள் ஆழத்தில் கிடக்கின்றன. இவ்வகையான சூழலில் சமத்துவமான நிர்வாகம் நடக்காது. இன்றைக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கின்றன. தனித்தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 

நாங்கள் மிகத் தெளிவாக எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். ஆங்கிலேயர்கள் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி வைத்து விட்டார்கள். இல்லையெனில் தமிழ் இசை கர்நாடக சங்கீதமென மாற்றமெடுத்து நிற்பது போல, இல்லாத மொழியில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். சதிராட்டம் பரத நாட்டியம் என்று மாற்றியது போல மாற்றி இருப்பார்கள்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளிநிலம், கிராமக்காடுகள், இட்டேரி போன்றவை தமிழர் வாழ்வியலில் ஒன்றியவை.

அரசின் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்ய வேண்டுமெனில், கோவில்களையும் அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அரசின் அலுவலர்களும், மக்கள் பிரதி நிதிகளும் நன்றாகத்தான் நிர்வகிக்கின்றார்கள் இதுகாறும். இனிமேலும் அவ்வாறே. வம்பு வழக்குகள் வந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கும். ஏற்கனவே அதற்கான அமைப்புகள் இங்கே உள்ளன. 

ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான ஜாதிகள் உண்டு. பொருளில் ஏற்றத்தாழ்வு கொண்டோர் உண்டு. அன்றாட வேலைக்கு செல்வோரும், வீட்டில் உட்கார்ந்து வாழ்வு போக்கும் மனிதர்களும் உண்டு. இவர்கள் எல்லோரும் தான் கோவில்களுக்குச் செல்கிறார்கள். 

கோவில் நிர்வாகத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்றால் மீண்டும் அதே கதை. கோவில்களுக்குள் நின்று கொண்டு ஆகமத்தைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கொடுத்தல் தான் நல்லது ஏனென்றால் இவர்களால் நிர்வகிக்க வாய்ப்பில்லை என்பதுதானே அது?

கோவில்கள் என்பது மக்கள் சொத்து. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிர்வகிப்பதில் தெய்வ குற்றம் ஏதும் இல்லை.

அங்கே அப்படி, இங்கே இப்படி என செய்திகளை வெளியிட்டு ஒருவிதமான எதிர்ப்பு மன நிலையை தமிழ் திசையும், கட்டுரையாளரும் உருவாக்கி வருகிறார்கள்.

தமிழ் திசை தமிழர்களின் மன நிலையை குழப்பும் விதமாக சமீபகாலமாக அதுவும் திமுக அரசு பதவி ஏற்கும் முன்பே செய்திகளை வெளியிட்டு வருகிறது. 

பல தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழர் விரோத போக்கினையும், மூளைச்சலவை செய்யும் செய்திகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன. மக்கள் இவற்றை விலக்கி விட வேண்டும்.

கட்டுரை எழுதிய ஆசிரியரின் உள் நோக்கம் அதுவும் அழுகிப் போன ஜாதிய உள் நோக்கம் தமிழக மக்களின் மனதில் விஷத்தை விதைப்பது. இக்கட்டுரை அதைத்தான் சொல்லி இருக்கிறது. மீனவர்கள் போராட்டத்துடன் கோவில்களையும் இணைப்பது போல ஸ்லோ பாய்சனை எழுதி இருக்கிறார் அவர்.

கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் அதன் போராட்டங்கள் வேறு. கோவில்களின் நிர்வாகம் என்பது வேறு. ஒன்றுக்கும் ஒன்றுக்கும் தொடர்பில்லை. ஆனால் தொடர்பு படுத்தி இருக்கிறார் கட்டுரை எழுதியவர்.

கோவில்களில் இருக்கும் ஜாதி வெளியேற வேண்டும். அதை காலம் கொண்டு வரும். இனிமேலும் மக்களை இறைவன், ஆகமம், விதிகள் என்றுச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு சுகபோகத்தில் வாழ முடியாது. 

தமிழக கோவில்கள் தமிழர்களின் சொத்து. அதை அரசு மட்டுமே நிர்வகிக்கும். அது தனிப்பட்ட மக்களின் சுய நல ஜாதிய கீழ் நிலை மனம் கொண்டவர்களின் மக்களை நாளடைவில் விரட்டி அடிக்கும்.

தன் உடம்பில் ஜாதிய அடையாளங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் மனித குலத்தின் விரோதிகள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

குழந்தைகள்ம் மதச் சின்னங்கள் இல்லாமல் தான் பிறக்கின்றன. வாழ்வியல் நெறிமுறைகளுக்கான பாதையை மதங்கள் உருவாக்கி நெறிப்படுத்துகின்றன. அது வழிகாட்டி மட்டுமே. மனம் குருகிய மனிதர்களின் இரக்கமற்ற ஜாதிய சிந்தனைகள் தான் ஏற்ற தாழ்வுகளுக்கு காரணமாயிருக்கின்றன.

தமிழ் திசை தன் நிலை மாற்றாவிடில் காலம் மாற்றி விடும். வாழ வைத்திருக்கும் தமிழர்களுக்கு கொஞ்சமாவது நன்றிக் கடன் படல் வேண்டும். இல்லையெனில் கோபுரங்களும் குலைந்து போன வரலாற்றில் பதிந்து போய் விடும்.

#tamilthisai #tamilmagazine