குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 14, 2019

நரலீலைகள் - பீமா (18+ மட்டும்) (7)

அவர்கள் இருவர், பீமா மற்றும் ஜூனா.

விடிகாலைக்கும் முந்தைய பொழுது. செயற்பொறியாளர், பொதுப்பணித்துரை என பித்தளை தகட்டினில் எழுதப்பட்டிருந்த வீட்டு கேட்டினை தாண்டிக் குதித்தனர். பூட்டப்பட்ட கதவினை பீமா எதையோ ஒன்றினை வைத்து திறந்து உள்ளே சென்றான்.

செல்வம் கொழிக்கும் வீடு. கிரானைட்டால் மெழுகி இருந்தார் அந்த செயற்பொறியாளர்.

இருவரும் படுக்கை அறைக்குள் சென்றனர்.

செயற்பொறியாளர் நாற்காலியில் கட்டப்பட்டிருந்தார். வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

எதிரில் அவரின் செல்ல மகன்கள் இருவரும், அழகிய மனைவியும் கைகள் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுக் கிடந்தனர்.

செயற்பொறியாளரின் கண்கள் விரிந்து கிடந்தன. கண்ணீரில் கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கத்தவும் முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் அந்த அகலமான ஏசி ஓடிக் கொண்டிருந்த படுக்கையில் மூவரும் கிடந்தனர். அவர்கள் மீது கைகளால் அழுத்தி அமர்ந்து கொண்டு, கையில் கூர்மையான கத்தியுடன் ஜூனா.

கையில் ஒரு பேப்பருடன் பீமா பொறியாளர் முன்னிலையில் நின்றிருந்தான். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

இது வரை தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளமாகப் பெற்றது ஒன்றைரைக் கோடி. லஞ்சமாகப் பெற்றது 20 கோடி. இது அத்தனையும் இதோ உங்கள் முன்னால் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் மனைவிக்கும், மகன்களுக்கும் பெறப்பட்டவை. ஆகையால் இவர்கள் மூவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்படப் போகின்றார்கள். உங்களைக் கொல்லப்போவதில்லை. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் லஞ்சமும், கமிஷனும் இவர்களுக்காக என்பதால், இனி இவர்கள் இருக்கப் போவதில்லை. 

இந்தக் கொலைகளைச் செய்வது பீமா மற்றும் ஜூனா ஆகிய நாங்கள். இதை ஒப்புதல் வாக்குமூலமாக உங்களிடம் கொடுத்து விடை பெறுகிறோம்.

”ஜூனா, மூவரின் கழுத்தையும் அறுத்து, தலையை மட்டும் இவரின் காலடியில் வைத்து விடு. இவர்களைக் கொன்றது இவரின் பேராசை”

“சரி, அண்ணா...!”

முதலில் மகன்களின் தலையை அறுத்தான். ஒவ்வொருவரின் உடம்பு துடித்து அடங்கியது. கடைசியில் மனைவியின் கழுத்தை அறுத்தான் ஜூனா. பீமா அமைதியாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். செயற்பொறியாளர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

அவர் கண்களை மூடிக் கொண்டார். கண்கள் பீமாவைப் பார்த்துக் கெஞ்சியது. அழுதன. எல்லாம் முடிந்தன.

ஆர்ப்பாட்டமின்றி இருவரும் வெளியில் சென்றனர்.

அவர்கள் வெளியேறுவதைக் கண்டு புன்னகைத்த அஸாஸில் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். 

* * *

”ஆஹா...! நாவல் ஆரம்பித்து விட்டது. எழுத்தாளன் எழுத ஆரம்பித்து விட்டான். இனி அதகளம் தான். நாவல் வடிவம் பெற ஆரம்பித்து உள்ளது. இனி பீமாவும், ஜூனாவும் உலகில் நடக்கும் ஒவ்வொரு அக்கிரமங்களுக்கு காரணமானவர்களைக் கொன்று ஒழிப்பார்கள். இனி உலகம் சுபிட்சம் பெறும். ஆஹா, அற்புதம். அஸாஸிலைக் காவல்துறையினர் கைது செய்து தூக்கில் போடுவர். இனி அஸாஸில் ஆட்டம் குளோஸ்” 

”மாயாண்ணே, இதெல்லாம் நடக்குமா?”

”சந்து, நிச்சயம் நடக்கும். இந்த நாவல் ஆசிரியன் ஆரம்பகாலத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கொட்டைப் பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை படித்தவன். தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுவான். யோக்கிய சிகாமணி”

“அண்ணே, ஒருத்தன் யோக்கியன் என்றால், அவனுக்குப் பயம் ஜாஸ்தி என்று அர்த்தம்னே. தைரியசாலிதான் அயோக்கியத்தனம் செய்வான். யோக்கியன் என்பவன் பேசிக்கல்லி பயந்தாங்கொள்ளிண்ணே”

“அட, சந்து, நீயாடா இதெல்லாம் பேசுறே, நீ சொல்றது கூட சரியாத்தான் படுது”

“உண்மைதாண்ணே, வாழும் வரை வாழ்ந்து பார்த்துடுவோம், பின்னால் எது வந்தாலும் பார்த்துக்கிடலாம்னு பயமின்றி இருப்பவன் தான் அக்கிரமங்களைச் செய்கிறான், இதுதான் உண்மையும் கூட”

“சந்து, நீ ரொம்ப அறிவாளியாப் பேசுகிறாயே, ஆச்சரியம் தான் போ...!”

”அண்ணா, எழுத்தாளன் வந்து விட்டான் மீண்டும். என்ன எழுதுகிறான் என பார்ப்போம்”

* * *

செயற் பொறியாளர் படுக்கையில் இருந்து பதறி எழுந்தார். வியர்க்க விறுவிறுக்க அருகில் பார்க்க மனைவியும், மகன்களும் ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

அவருக்கு சற்றே நிம்மதியானது. அறையின் மூலையில் நின்று கொண்டிருந்த அஸாஸில் புன்னகையுடன் வெளியேறினான்.

“நான் இருக்கும் வரையில் இங்கு எதையும் உங்களால் மாற்ற முடியாது பீமா. உங்களை விட சக்தி வாய்ந்தவன் இந்த அஸாஸில். நான் ராதை மீது காதலில் விழுந்து விட்டேன் என நினைத்தீர்களோ? அது காமம். இது எனது டிசைன். மனிதர்களை அயோக்கியர்களாக மாற்றி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் வரை விடமாட்டேன். ”

”நீதியின் பால் நம்பிக்கை வைத்திருந்தீர்களே! அதுவும் இனி நடக்காது. ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் தினமும் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறேன். இனி கோடிகளில் வீடு சென்று சேரும். என்னிடம் பணம் என்று ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் மாற மாட்டார்கள் பீமா. விடவும் மாட்டேன்”

கொக்கரித்தான் அஸாஸில்.

பீமாவும், ஜூனாவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

* * *

செயற்பொறியாளரின் மனதில், கனவில் தன் முன்னே வந்து நின்று கொண்டு, தான் வாங்கிய சம்பளம் முதற்கொண்டு, லஞ்சம் பணம் மொத்தம் எவ்வளவு என சொன்ன பீமாவின் உருவமும், கையில் கத்தியுடன் ஆழ்ந்த அமைதியாக அவரைப் பார்த்த ஜூனாவின் பார்வையும் மறையவே இல்லை. உள்ளுக்குள் நடுங்கினார் அவர்.

அவர் காலத்தின் சுழல் அச்சை நோக்கி ஒரு இஞ்ச் நகர்ந்தார்.

அஸாஸிலின் கால் நகத்தில் சிறிய கரும்புள்ளி தோன்றியதை அவன் கவனிக்கத் தவறினான்.

காலம் சிரித்தது.
* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.