குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 18, 2019

நரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)

அன்பே ராதே...!

எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் எண்ணற்ற தூசிகளில் ஒரு தூசியான பூமியில் பூத்த கள்ளம் கபடமற்ற ஒரே ஒரு ஜீவன் நீதானடி..!

சத்தங்கள் அற்ற உலகில் வசிக்கும் என் மென்மையான இதயத்தை, உன் புன்னகையால் கீறிச் செல்லும் ஒலியைக் கொண்டவளே...!

உதட்டோரம் நெளியும் சுளிவுகளில் நடனமாடும் புன்னகையை நிரப்பி, பூமியில் நிற்கவே முடியாமல் நிலை தடுமாறும் வகையில் நின்று கொண்டு, உன் மோகனப் புன்னகையால் கோடானு கோடி ஈட்டிகளை, என்னை நோக்கி எரியும் அன்பானவளே...!

உன்னால் உன்மீது காதலால் தகித்துப் பொங்கும் எரிமலையில் உன் அமுத கண்களில் துளிர்க்கும் ஒரு துளி நீரை விட்டு காதலால் அணைத்து முகிழும் அற்புத அழகே...!

பிரவாகத்தில் அமைதியாய் பூக்கும் மலரைப் போல மென்மையானவளே, உன் காதுகளில் அணிந்திருக்கும் அழகான பொன் வேய்ந்த காதணிகள் ஆடும் நர்த்தனம் கண்டு, உள்ளம் சோர்ந்து போனதடி....!

ராதே... உன் பெயர் தானடி காதல்... நீதான் காதல்... காதலில் மூழ்கிப் போய் மூச்சடைத்து பிரஞ்கையற்றுப் போய்க் கொண்டிருக்கிறேனடி....!

என்னை உன் காதலால் நிரப்பி விட்டாயடி மோகனத்தில் மோனத்தைக் காட்டும் தேவியே...!

காதல்...! காதல்...!! காதல்...!!!

ராதே...! ராதே...!! ராதே...!!!



* * *

வில்லன் இப்படி காதலில் மூழ்கி விட்டால், இந்த நாவல் எப்படி நகரும்? வாசகர்களே, நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நாவல் ஆசிரியன் இந்த நாவலை எழுதிக் கொண்டே செல்வானென்று. ஆனால் அவனுக்கும் இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கும் இடையில் சச்சரவுகள் எழும்பி விட்டதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அல்லவா? கதாபாத்திரங்கள் ஆசிரியருடன் முரண்பாடு கொண்டால் என்ன ஆகும்? நாவல் வடிவு பெறாதே? கவலையாய் இருக்கிறேன் நாவலாகிய அடியேன்.

அஸாஸில் காதலில் மூழ்கிப் போனான். உலகம் இனி எப்படி இயங்கும்? என்னை இப்படி புலம்ப விட்டு விட்டானே ஆசிரியன். நாவல் இனி எப்படி உருவாகும் எனத் தெரியவில்லை. 

இந்தப் பாழாய்ப் போன காதல் அஸாஸிலுக்கு ஏன் வந்தது? ராதேயின் மீது காதல் கொண்டு, பித்துப் பிடித்தவன் போல அலைகிறான். ஏற்கனவே இந்த ராதே, இன்னும் கண்ணனை அடையாமல், ஏங்கி யமுனா நதிக்கரையோரம் அலைந்து கொண்டிருக்கிறாள். அவளை இவன் காதலிக்கிறானாம். என்ன கன்றாவியோ இது?

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.