குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 23, 2015

எம்.எல்.ஏ - தொடர் 2

டிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவது போல கதறிக் கொண்டிருந்தார்கள்.

”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா? கம்முனு இருக்காரு?”

“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள்? சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க?”

”மனச்சாட்சியா? மண்ணாங்கட்டி! ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம்? பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்?”

”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”

“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க! பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”

வாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.

“யாருன்னு பாருய்யா?”

“ரெகமெண்டேசனுக்கு வந்துருக்காங்கய்யா”

“சரி, சரி ! லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு” 

அரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.

”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”

குறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.

Wednesday, July 15, 2015

கடவுளைப் பார்க்க முடியுமா?

”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா? ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை. 

ஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா? அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.

எவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் ! கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....



ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே! அழுது புலம்புமே ! அலறுமே ! உடல் சோர்ந்து போமே ! இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே ! உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே? செத்துப் போய் விடலாமே! என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ! ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா? அழுததுண்டா? ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Thursday, July 9, 2015

எம்.எல்.ஏ தொடர் - 1


மாடியிலிருந்து இறங்கி வந்த எம்.எல்.ஏ, வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரில் நின்றிருந்த பிஏ சுதந்திரத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே”இன்றைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

"அதையே ஏன்னா கேட்கிறீங்க? " என்று சொல்லிய சுதந்திரத்தின் கையில் வெள்ளை வெளேர் என்று ஒரு போனைப் பார்த்தார்.

“புது போனாய்யா?”

சுதந்திரம் மந்தகாசமாய் புன்னகைத்துக் கொண்டே “அம்பதாயிரம்னா, ஐபோனு” என்று பெருமையாகச் சொன்னார்.

சுதந்திரத்தை ஏற இறங்கப் பார்த்த எம்எல்ஏ, “ஏன்யா? அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா? என்கிட்ட பிஏவா இருந்துக்கிட்டு லூசுத்தனமா இருக்காதய்யா” என்றார்.

சுதந்திரம் காற்றுப் போன பலூனாகி விட, “வேற என்னய்யா சமாச்சாரம்?”.

தொடரும் ...

குறிப்பு : எனக்கு நீண்ட நாட்களாக 150 பக்கத்தில் நாவல் எழுத வேண்டுமென்ற ஆவல். கற்பனைகளை கலந்து கட்டி எழுதுவதென்பதெல்லாம் எனக்கு ஐம்பது வயது வரும் போது சாத்தியமோ என்னவோ?

நான் எழுத நினைத்துக் கொண்டிருக்கும் நாவலின் வடிவமோ வேறு. உண்மைக்கும் பொய்யுக்குமான உரையாடலாய் சமீபகாலத்து நிகழ்வுகளை கலந்து வரலாற்றுப் பதிவாய் பதிய வேண்டுமென்ற எண்ணத்துடன் நான்கைந்து வாரமாய் சிந்தனையோட்டம் சென்று கொண்டிருந்தது. இதோ ஆரம்பித்து விட்டேன். விரும்பியவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் எப்படியோ அது அவர்கள் பாடு.