குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 24, 2015

குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே, வருகின்ற 01.03.2015 தேதியன்று கோயமுத்தூர் மாவட்டம், முள்ளங்காடு, பூண்டியில் அமைந்திருக்கும் எமது குரு நாதரின் ஆஸ்ரமத்தில் குருபூஜை விழா சிறப்புற நடைபெற உள்ளது. ஆன்மீக நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு குருவின் அருள் பெற வேண்டுகிறேன்.



Monday, February 2, 2015

ஆனந்தக் குளியல்


விபரம் தெரிந்த வயதில் நான் ஆவணம் கிராமத்தில் உள்ள கிளை ஆற்றில் ஆட்டம் போடுவதுண்டு. கண்கள் சிவக்கச் சிவக்க குளியல். காவிரியாற்றின் கடைமடை ஊரின் கிழக்கிலே செல்லும் ஆற்றிலிருந்து ஒரு சிறு வாய்க்கால் போல பிரிந்து செல்லும் சிறு ஆற்றின் இணைப்பில் உள்ள படிகளில் தான் குளியல் போடுவது வழக்கம். தடுப்பிலிருந்து சீறும் தண்ணீரில் தலையைக்காட்டிக் குளிப்பது ஆனந்தமோ ஆனந்தம். மாலை வேளைகளில் இரு சுவற்றின் மருங்கிலும் சின்னஞ்ச் சிறு மீன்கள் பாசியில் குத்திக் கொண்டு சரம் சரமாய் தொங்கும் அழகு மனதை அள்ளும். அதைக் கையால் தண்ணீருக்குள் தள்ளி விடுவேன். மொசு மொசுவென மொய்க்கும். ஆஹா அற்புதம்.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால் குளத்தில் குளியல், கோடையில் வடக்குத் தெருக்காரரின் தோட்டத்தில் உள்ள போரில் குளியல் போடுவதுண்டு. எனது வகுப்புத் தோழன் பனைமரத்துக் கள் இறக்குவான். தோட்டத்துக்குப் போகும் வழியில் தான் அவன் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு மக் பனங்கள் வாங்கிக் குடிப்பேன். அதற்கு சைடு டிஷ் நண்டு வறுவல், ஆம்லேட் மற்றும் காரச் சுண்டல். சும்மா அள்ளும். கள் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றால் மாமா தோலை உரித்து உப்புத் தடவி விடுவார். ஆகவே அதை மறைக்க தோட்டத்து போரில் இரண்டு மணி நேரத்திற்கு குளியல் போட்டு விட்டு கள் வாசம் அடிக்காதவாறு சரி செய்து கொள்வதுண்டு.

ஆனால் வீரியன்கோட்டை சித்தப்பா வீட்டிலோ தலை கீழ். கோடையில் வீரியன்கோட்டைக்குச் செல்வதுண்டு. குளத்து மீனை விடிகாலையில் பிடித்து வந்து வறுத்து வைத்துக் கொண்டு, சின்ன தம்பி சிதம்பரம் வாங்கிக் கொண்டு வரும் தென்னங்கள்ளை குடித்துக் கொண்டே வறுத்த மீனைச் சாப்பிடுவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சித்தப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். சின்னம்மா தான் கோவித்துக் கொள்வார்கள். தம்பி விடவே மாட்டான். சின்னம்மா வைக்கும் மீன் குழம்பின் ருசியை இதுவரையில் நான் எங்கும் சாப்பிட்டதே இல்லை. அந்தக் கைப்பக்குவம் போனது போனதுதான். சின்னம்மா இறந்த பிறகு அந்தக் குழம்பின் ருசியும் அவரோடு சென்று விட்டது. இப்போது வாழ்க்கையோ முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. 

கோவை வந்த பிறகு குளியல் ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. உடம்புச் சூடு போக குளிக்க முடிவதில்லை என்பதில் எனக்குள் ஒரு ஆற்றாமை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளிப்பது எல்லாம் குளியலே இல்லை. சும்மா கோழி கொத்துவது போலத்தான் குளியலும். எரிச்சல் மண்டும் சில நேரங்களில். ஊருக்குச் செல்லும் போது கரூர் தாண்டி திருச்சி வழியில் செல்லும் போது சில நேரங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் ஒரு அவசரக் குளியலைப் போட்டு விடுவேன். இருப்பினும் அந்த சந்தோசம் கிடைப்பதில்லை.


சமீபத்தில் எனது குரு நாதரைத் தரிசிக்க வெள்ளிங்கிரி சென்றேன். பாரஸ்ட் காரர்கள் ஆஸிரமத்துக்குச் செல்லும் வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி விட்டார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை. அங்கிருக்கும் மக்கள் பள்ளத்துக்குள் இறங்கி ஆற்றுக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஆக்டிவா ஆசிரமத்துக்கு போக முடியாது. காரும் போக முடியாது. எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமிகள் ஒரு வண்டியை வாங்கி விட்டார். காங்கேயம் காளைகள் பூட்டிய வண்டி. ஆக்டிவாவை கொண்டு போய் நிறுத்திவிட்டு வண்டியில் அமர்ந்தேன். ’ஜல் ஜல்’ என சலங்கை மணிகள் இசைக்க மாட்டு வண்டியை வெள்ளிங்கிரி மலையிலிருந்து வழிந்து வரும் ஆற்றுக்குள் இறக்கி ஆற்றின் ஊடே ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றார் சாமி. வண்டியை நிறுத்தி விட்டு, மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த கரையோரமாய் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு சாமி வண்டியில் அமர்ந்து விட்டார். 

குளியல் போட ஆரம்பித்தேன். அப்பப்பா என்ன ஒரு ஜில்! ஐஸ் கட்டி போல தெளிந்த தண்ணீர். உடம்பே சில்லிட்டது. நல்ல குளியல். உடம்பெல்லாம் சில்லிட்டு விட்டது. அப்படி ஒரு குளியல். புத்துணர்ச்சி என்றால் புத்துணர்ச்சி. எத்தனை மூலிகளைக் கடந்து வருகிறதோ தெரியவில்லை. சுவையோ சுவை. ஆசை தீர குளியலை முடித்து விட்டு ஆசிரமம் வந்தேன். அற்புதமான மனம் ஒடுங்கிய தியானத்தினை என் குரு நாதர் அருளினார். சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

மனத்தில் எந்த வித சிந்தனையும் இல்லாது, மனம் ஒடுங்கிய நிலையில் எனது குரு நாதரின் ஆசீர்வாதத்தில் குளித்த அந்தத் தருணங்களை இனி எப்போது எனக்கருளுவாரோ?