குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 2, 2011

உணவே விஷமான சம்பவம்

மிகச் சமீபத்தில் மனைவி சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அன்றைய இரவு உணவுக்காக ஹோட்டல் செல்லும் வழியில், கேரளக்கார கடை ஒன்று கண்ணில் பட்டது. ஆப்பம், கொண்டக்கடலைக் குழம்பு என்று போர்டில் எழுதி இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொச்சின் செல்லும் வழியில், பாலக்காட்டில் ஆப்பமும், கொண்டக்கடலைக் குழம்பும் சாப்பிட்டது நினைவுக்கு வர, உடனடியாக டூவீலரை நிறுத்தி உள்ளே சென்றேன்.

சூடாக இரண்டு ஆப்பமும், குழம்பும் பரிமாற சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து விட்டேன். மறு நாள் காலையில் எச்சில் முழுங்க முடியவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல இருந்தது. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. சரி மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். காரம், புளி சேர்க்காமல் சாப்பிட்டு வந்தேன். இரண்டு நாளாக தொண்டையில் கட்டிக் கொண்ட உணர்வு மட்டும் போகவே இல்லை. வேறு வழி இன்றி மருத்துவரிடம் சென்றேன். தொண்டையில் புண் என்று சொல்ல திக்கென்றாகி விட்டது.

இரு நூறு ரூபாய் செலவு, பதினைந்து நாட்கள் ஆயின தொண்டைப் புண் ஆறுவதற்கு.  முப்பது ரூபாய்க்கு ஆப்பம் சாப்பிட்ட கொடுமையால், உடம்பே ஏறுக்கு மாறாய் மாறி விட்டது. அதுமட்டுமா பதினைந்து நாட்கள் அவஸ்தை வேறு. இந்த ஹோட்டலின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இத்தனைக்கும் கோயமுத்தூர் ஹெல்த் டிபார்ட்மெண்டில் எனது நண்பர் வேலை செய்கிறார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு, தூக்கி விடுகிறேன் என்கிறார். அதன்பின் வரும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் விட்டு விட்டேன்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கதைகள் அனைத்தும் படு பயங்கரமாய் இருந்தன. மட்டன், சிக்கன் சாப்பிடாத காரணத்தால் மீன் உணவை மாதமொருமுறை பயன்படுத்தி வருகிறேன். அந்த மீனில் இருக்கும் படுபயங்கரம் என்ன தெரியுமா? மீன் பிடித்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகு தான் விற்பனைக்கே வரும் என்றும், அந்த மீனைச் சாப்பிடுவதால் ஏகப்பட்ட வியாதிகள் வரும் என்றும், பேசாமல் டேம் மீனுக்குச் சென்று விடுங்கள் என்றும் சொன்னார். டேம் மீன் மட்டும் சும்மாவா, மீனுக்கான உணவிற்காக குளத்தில் யூரியாவைக் கொட்டுகிறார்கள் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விற்பனைக்கு வரும் மீன்கள் பெரும்பாலும் கடைசித் தரமானது என்றும் சொன்னார். கேட்கவே படுபயங்கரமாய் இருந்தது. 

கடந்த வாரம் எனது நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு முற்றிலுமாய் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்கிறார்கள். நல்ல இள நீர் ஒன்றினை அருந்தி விட்டு, வரும் வழியில் காலிஃபிளவர் தோட்டத்தைப் பார்த்தேன். அய்யோ என்று கதறலாம் போலிருந்தது. மருந்தால் பயிராகும் ஒரு  உணவுப் பொருள் என்றால் அது காலிஃபிளவர்தான். பேஸ்டு போல மருந்து ஒட்டி இருந்தது. காலிஃபிளவரில் இருக்கும் செலோனியம் புற்று நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கின்றன என்று படித்த ஞாபகம் வந்தது.

நவீனகாலம் உணவை விஷமாக்கியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை மனித குலத்திற்கு என்பது உண்மை.

3 comments:

சாந்தி மாரியப்பன் said...

//நவீனகாலம் உணவை விஷமாக்கியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை மனித குலத்திற்கு என்பது உண்மை//

200 சதவீதம் உண்மை..

Thangavel Manickadevar said...

இக்கால மனிதர்கள் உணவினை விஷமாக்கி, அதன் பிறகே சாப்பிடுகின்றனர். விளைவு சிறிய வயதிலேயே நோய் வந்து விடுகிறது. உணவு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். நன்றி அமைதிச்சாரல்

இளங்கோ said...

//உணவு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்.//
Yes Anna..
Thanks

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.