குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 22, 2009

நரலீலைகள்

சாதனையென்ற சத்தம்

சாதனை என்ற சொல்லை மனிதர்கள் அனைவரும் கேட்டிருப்பார்கள். சாதனையின் பால் ஈர்க்கப்பட்ட மனிதன் மதி மயங்கி, மனம் குறுகி, இயக்கம்மாறி, வழி தெரியாமல், இது தான் வழி, இது தான் சாதனை என்றோடிக் களைத்தபிறகு திரும்பிப் பார்த்தானென்றால் அவன் முன்னே வெட்டவெளியாய் கடந்துபோன காலம் நகைக்கும். விரக்தி நிலையில் மனம் வெதும்பி, ஆயாசமாய், அனைத்தும் முடிந்து போய் விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து குமைந்துகுழப்பமுறுவான்.

அந்தச் சொல்லின் சத்தம் மூளையின் ஏதோ ஒரு நரம்புக்குள் சிக்கி உடம்பெங்கும்அதிர்வுகளை கிளப்பிக் கொண்டேயிருக்கும். ஒலியின் வேகம் தாங்காமல் மனம்அதனோடு கூட ஓடி ஓடி சத்தமடங்கும் வேளையிலே அவனைச் சுற்றும் வெளிப்பேய்களிடமிருந்து தப்பிக்க இன்னும் வேகமாக ஓடுவான். ஓடுவான்... வாழ்க்கையின் எல்லைக்கே. ஆம் எல்லைக்கே ஓடி முடிப்பான் சாதனையின்ஓட்டத்தை.

என்ன தான் வாழ்க்கை, என்ன இருக்கிறது வாழ்வில் என்று புரியாமல், சாரம்புரியாமல், சூட்சுமம் தெரியாமல், எங்கெங்கோ ஓடி, ஓடிக் களைத்து, இளைப்பாறவும் முடியாமல் உயிரை விடுவான்.

அந்த மனித வாழ்க்கையின் ஓட்டங்களில் பங்குபெற்ற பீமாவின் ஓட்டத்தையும், அவனோடு கூட ஓடி வந்த சில ஓட்டக்காரர்களின் ஓட்டத்தையும் நரலீலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வழக்கம் போல உங்களின் அன்பான உள்ளத்தில் எனக்கும் ஒரு இடத்தை தந்துஅருள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.

Wednesday, December 9, 2009

கொடூர மனம் படைத்த மருத்துவர்

ஏம்மா, உனக்கு அறிவு இருக்கா? படிச்ச ஆள் தானே நீ? உன் புருஷனுக்கு சொல்ல வேண்டாம்? உனக்கு என்ன அவ்வளவு அவசரம்? என்று கேட்க, எதிரே உட்கார்ந்திருந்த பெண் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

இப்போது பாரு, குத்துது குடையுதுன்னு வந்து நிற்கிறாய் என்று மேலும் அர்ச்சித்திருக்கிறார் அந்த மருத்துவர்.

ஊசியைப் போட்டுக் கொண்டு புருஷன் வீட்டுக்குப் போகாமல் எங்கோ சென்று விட்டாள் அந்தப் பெண்.

வீட்டில் தேடோ தேடென்று தேடியிருக்கின்றார்கள். நிறைமாதக் கர்ப்பிணி பெண் வேறு. காய்ச்சல் அடித்ததற்காக ஊசி போட்டுக்கொள்ள டாக்டரைப் பார்க்க வந்தவள் வீடு திரும்பவில்லை என்றதும் வீட்டிலுள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்? இரண்டு வயதுக் குழந்தை வேறு இருக்கிறது. அம்மாவைக் காணாமல் கதறி இருக்கிறது.

என்ன பிரச்சினை? ஏன் திடீரென்று காணவில்லை என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உறவினர்கள் வீடுகளிலெல்லாம் தேடியிருக்கின்றார்கள். கிடைக்க வில்லை. மறு நாள் காலையில் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இப்பெண்ணை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதாக சொல்ல, அடித்துப் பிடித்துக் கொண்டு அவளைப் பார்க்க பறந்தோடியது அக்குடும்பம்.

என்னவென்று விசாரித்ததில், டாக்டர் இந்தப் பெண்ணைக் கண்டமேனிக்கு திட்டியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இரண்டு வருடம் முடிவதற்குள் அதற்குள் எதுக்கு அடுத்த குழந்தை உண்டானாய் என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயல, எதேச்சையாக அவளைப் பார்த்த உறவினர் பார்த்து தடுத்திருக்கிறார். இல்லையென்றால் குழந்தையோடு அப்பெண் செத்துப் போய் இருப்பாள். மருத்துவருக்கு வேலை நோய்க்கு மருந்து கொடுப்பது. பிணியாளரிடம் பரிவோடு பேசுவது. ஆனால் இந்த மருத்துவர் செய்த வேலை இருக்கிறதே அதை என்னவென்று சொல்வது? அயோக்கியத்தனம், அக்கிரமச் செயல். அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அயோக்கியத்திருடன். ஏன் இவரைத் திருடன் என்று சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.

மதியம் ஒரு மணிக்கு வந்து பேஷண்டுகளைப் பார்ப்பதும், மாலை ஆறு மணிக்கு மேல் வந்து இரவு பத்து மணி வரை பிறருக்கு மருத்துவம் செய்து வருகிறார். மேலும் அரசு மருத்துவமனையிலிருந்து மருந்துகளைக் கொண்டு வந்து கொள்ளை விலைக்கு பிறருக்கு ஊசியும் போடுகிறார் என்றெல்லாம் இவரைப் பற்றிச் சொல்கின்றார்கள். அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெளியிலும் சம்பாதிக்கிறார். மருத்துவமனையிலிருந்து ஏழைகளுக்கு மருத்துவமும் பார்ப்பது இல்லைபோலும். இந்த மருத்துவர் திருடன் தானே? நீங்களே சொல்லுங்கள்.

பிறருக்கு துன்பமிழைப்பதும், பிறரின் மனத்தை காயப்படுத்துவதும் சில அரசாங்க மருத்துவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. சட்டம் தண்டிக்காது என்பது தெரிந்த ஒன்று. ஆனால் தெய்வம் தண்டிக்கும். தண்டித்தே ஆகும்.

தெய்வம் நின்று கொல்லாது. உடனே கொல்கிறது. இவருக்கு தெய்வத்தால் கொடுக்கப்படும் தண்டனை எனக்கு தெரிய வந்தால் எழுதுவேன்.

ஆடும் வரை ஆடட்டும். ஆண்டவன் அடக்கியே தீருவான்.

Sunday, December 6, 2009

Manashosting, Consumer Court, Karnataka Chief Minister

மே மாதம் ஒன்றாம் தேதி மனாஸ் ஹோஸ்டிங் என்ற கம்பெனியிலிருந்து குறைந்த விலைக்கு அதிக Web Space தருகிறார்கள் என்ற ஆசையினால் ரூபாய் 1100 கட்டி Plesk 11 GB Web Space வாங்கினேன். அதனுடன் MSSqlDatabase இலவசம் என்றார்கள். குதி போட்டுக் கொண்டு வாங்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். ஏகப்பட்ட அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.

கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.

மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையத்தில் ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.

விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.

அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.

ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு என்ன சொல்லப் போகிறது சட்டம்? எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் தரப்போகும் விடை தான் என்ன? தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம். கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?

என்றைக்கு சட்டம் இதைப் போன்ற சட்டத்தின் கொடுமைகளை நீக்குகிறதோ அன்று தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டது. அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.

Wednesday, December 2, 2009

ஏனோ மனிதன் பிறந்து விட்டான்

பனித்திரை என்ற திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் சொல்வது அனேகம். சமூகம் இந்தளவுக்கு கேடு கெட்டதாய் ஆக ஏதோ சிலரின் தன்னலப் போக்குதான் காரணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்