குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 9, 2009

கொடூர மனம் படைத்த மருத்துவர்

ஏம்மா, உனக்கு அறிவு இருக்கா? படிச்ச ஆள் தானே நீ? உன் புருஷனுக்கு சொல்ல வேண்டாம்? உனக்கு என்ன அவ்வளவு அவசரம்? என்று கேட்க, எதிரே உட்கார்ந்திருந்த பெண் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

இப்போது பாரு, குத்துது குடையுதுன்னு வந்து நிற்கிறாய் என்று மேலும் அர்ச்சித்திருக்கிறார் அந்த மருத்துவர்.

ஊசியைப் போட்டுக் கொண்டு புருஷன் வீட்டுக்குப் போகாமல் எங்கோ சென்று விட்டாள் அந்தப் பெண்.

வீட்டில் தேடோ தேடென்று தேடியிருக்கின்றார்கள். நிறைமாதக் கர்ப்பிணி பெண் வேறு. காய்ச்சல் அடித்ததற்காக ஊசி போட்டுக்கொள்ள டாக்டரைப் பார்க்க வந்தவள் வீடு திரும்பவில்லை என்றதும் வீட்டிலுள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்? இரண்டு வயதுக் குழந்தை வேறு இருக்கிறது. அம்மாவைக் காணாமல் கதறி இருக்கிறது.

என்ன பிரச்சினை? ஏன் திடீரென்று காணவில்லை என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உறவினர்கள் வீடுகளிலெல்லாம் தேடியிருக்கின்றார்கள். கிடைக்க வில்லை. மறு நாள் காலையில் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இப்பெண்ணை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதாக சொல்ல, அடித்துப் பிடித்துக் கொண்டு அவளைப் பார்க்க பறந்தோடியது அக்குடும்பம்.

என்னவென்று விசாரித்ததில், டாக்டர் இந்தப் பெண்ணைக் கண்டமேனிக்கு திட்டியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இரண்டு வருடம் முடிவதற்குள் அதற்குள் எதுக்கு அடுத்த குழந்தை உண்டானாய் என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயல, எதேச்சையாக அவளைப் பார்த்த உறவினர் பார்த்து தடுத்திருக்கிறார். இல்லையென்றால் குழந்தையோடு அப்பெண் செத்துப் போய் இருப்பாள். மருத்துவருக்கு வேலை நோய்க்கு மருந்து கொடுப்பது. பிணியாளரிடம் பரிவோடு பேசுவது. ஆனால் இந்த மருத்துவர் செய்த வேலை இருக்கிறதே அதை என்னவென்று சொல்வது? அயோக்கியத்தனம், அக்கிரமச் செயல். அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அயோக்கியத்திருடன். ஏன் இவரைத் திருடன் என்று சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.

மதியம் ஒரு மணிக்கு வந்து பேஷண்டுகளைப் பார்ப்பதும், மாலை ஆறு மணிக்கு மேல் வந்து இரவு பத்து மணி வரை பிறருக்கு மருத்துவம் செய்து வருகிறார். மேலும் அரசு மருத்துவமனையிலிருந்து மருந்துகளைக் கொண்டு வந்து கொள்ளை விலைக்கு பிறருக்கு ஊசியும் போடுகிறார் என்றெல்லாம் இவரைப் பற்றிச் சொல்கின்றார்கள். அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெளியிலும் சம்பாதிக்கிறார். மருத்துவமனையிலிருந்து ஏழைகளுக்கு மருத்துவமும் பார்ப்பது இல்லைபோலும். இந்த மருத்துவர் திருடன் தானே? நீங்களே சொல்லுங்கள்.

பிறருக்கு துன்பமிழைப்பதும், பிறரின் மனத்தை காயப்படுத்துவதும் சில அரசாங்க மருத்துவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. சட்டம் தண்டிக்காது என்பது தெரிந்த ஒன்று. ஆனால் தெய்வம் தண்டிக்கும். தண்டித்தே ஆகும்.

தெய்வம் நின்று கொல்லாது. உடனே கொல்கிறது. இவருக்கு தெய்வத்தால் கொடுக்கப்படும் தண்டனை எனக்கு தெரிய வந்தால் எழுதுவேன்.

ஆடும் வரை ஆடட்டும். ஆண்டவன் அடக்கியே தீருவான்.

1 comments:

Tamil Home Recipes said...

நல்ல பதிவு

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.