குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, July 26, 2008

சமரசம் உலாவும் இடமே

அன்பு நண்பர்களே,

வாழ்க்கை ஒரு போராட்டம். வலிமை உள்ளவன் வசதியாய் வாழ்கிறான். மற்றவன் ஏங்கிச் சாகிறான். காசுதான் மனிதனின் அளக்கும் அளவுகோலாய் மாறிய இந்த உலகில் மதமும், மண்ணாங்கட்டியும் மிருகமாய் வாழ மனிதனைப் பணிக்கிறது. ஆடுகிறான். பாடுகிறான். அழிக்கிறான். அழிந்து போகிறான். ஆனால் இந்த இடத்தில் காசும் பகட்டும் பொன்னும் பொருளும் மதிப்பின்றி போய் விடும். நீங்களும், நானும் ஏன் பிரதமரும் கூட ஒன்று தான்..... பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

படம் : ரம்பையின் காதல்
வெளிவந்த வருடம் : 1956
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் : மருதகாசி
இசையமைத்தவர் : தெரியவில்லை



சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே


சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலேயே
இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

Monday, July 14, 2008

CONGRADULATIONS TO MISS DAYANA MENDOZA - MISS UNIVERSE 2008




My heartiest wishes to you Ms Dayana Mendoza...

Friendly
Thangavelu

Sunday, July 13, 2008

முனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் - திரைவிமர்சனம்

கேண்டீன் வைத்து நடத்தும் பொன்வண்ணனின் மகனாக பரத். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறையில் படிக்கிறார். ஊர் பெரிய தாதாவின் பெண்ணுடன் காதல் வருகிறது. கதா நாயகியின் அறிமுகம் அவரது காலில் தொடங்குகிறது. என்ன ஒரு டைரக்டோரியல் டச் தெரியுமா இந்த சீன். இந்த சீனுக்கு பின்தான் படம் பார்க்க விருப்பமே வருகிறது. பரத் கல்லூரியில் பாடும் ஒரு பாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுவது போல அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு. பொன்வண்ணனின் வேஷம் இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் போடாத வேஷம் என்பது இப்படத்தின் சிறப்புக்கு இன்னும் ஒரு காரணம். முடிவெட்ட கடைக்குச் செல்லும் பரத்திற்கு, பொன் வண்ணன் அட்வைஸ் சொல்லும் காட்சிகள் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். கல்லூரி தேர்தலை சாக்காக வைத்து இரு ஜாதிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் இதுவரை ஹாலிவுட்டில் கூட எடுக்கப்படாத அளவுக்கு மயிர்க்கூச்செரியும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் திருமுருகன் இதற்காக மெனக்கெட்டு இருப்பது அவரின் சின்சியர் உழைப்பினை காட்டுகிறது. தமிழ் சினிமாவுக்கு உலகில் சிறந்த படைப்பினை வழங்க வேண்டுமென்ற அவரது எண்ணம், ஆர்வம், உழைப்பு வேறு எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒன்று.

கதா நாயகி பரத்தை கேவலப்படுத்த பரத் செருப்பால் அடித்து, தென்னந்தோப்பை கொளுத்தி விடுகிறார். இந்தக் காட்சி படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வரவழைக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. நாயகி தன் அப்பாவிடம் இந்த விஷயத்தை மறைத்து விடுவதால் பரத்தைக் காப்பாற்றுகிறார். கதை என்றால் இது தான் கதை. திருமுருகன் வைத்திருக்கும் இந்தத் திருப்பம்தான் கதையின் சுவாரசியமான போக்கிற்கு உறுதுணையாக இருப்பது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

பொன்வண்ணனின் மூத்த மகனை நாயகியின் அப்பா கொன்று விடுவது கதையில் இருக்கும் மர்ம முடிச்சு. இதுவரை எத்தனையோ சினிமாக்கள் வந்து இருக்கிறது. எந்தச் சினிமாவிலும் இதுவரை சொல்லப்படாத மர்ம முடிச்சு இந்தப் படத்தில் தான் இருக்கிறது. நாயகி அப்பாவின் எதிரி இன்னொரு ஜாதிக்காரன் தான் பரத்திடம் இந்த உண்மையினைப் போட்டு உடைக்கிறார். அதைக் கேட்ட பரத், நாயகியின் அப்பாவை புரட்டி எடுக்கும் காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. விசில்களின் சத்தம் வின்னை முட்டுகிறது.

கதையின் முடிவாக மாணவர்களின் கூட்டத்தில் பரத் ஆற்றும் உரை, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையினை ஞாபகப்படுத்துகிறது. இப்படி ஒரு சீனை வைத்த திருமுருகன் தமிழ் சினிமாவில் எவரும் அசைக்க முடியாத , தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது கண்கூடு.

கதையில் பரத்திற்கு நண்பனாக முடியில் மணி கட்டி, இடுப்பில் மணிகளை தொங்க விட்டு வருபவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பெயரைக் போட்டார்கள். ஆனால் வடிவேலுவைக் காணாமல் தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் வடிவேலு எங்கே, வடிவேலு எங்கே என்று சத்தம் போட்டார்கள். பின்னர் தான் தெரிந்தது இடுப்பில் மணி கட்டி நடித்தவர் தான் வடிவேலு என்று. ஹாலிவுட் தரத்திற்கு மேக்கப் கலை உயர்ந்து இருப்பது தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு முன்னேறியுள்ளது கண்டு வியப்புதான் மேலிட்டது.

படத்தின் முடிவும், பாடல்களும் சொக்க வைக்கும் ரகம்.. இந்த விமர்சனத்தில் பாதிக் கதையினைத் தான் சொல்லி இருக்கிறேன். மீதியை நீங்கள் தொலைக்காட்சியில் சாரி சாரி... தியேட்டரில் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டுகிறேன்.

Tuesday, July 8, 2008

விடை தெரியாத கேள்விகள்...

கரூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் கம்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த காலம். எனது சக ஆசிரிய தோழன் கிச்சா எனும் கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவரின் அம்மா ( அவர் பெயர் கூட தெரியாது ) என் மீது கொண்டிருந்த அன்பு கடவுள் என்மீது கொண்ட அன்புக்கும் மேலானது என்றே சொல்லலாம். கிச்சாவுக்கு என் மீது அடிக்கடி பொறாமை வந்து விடும். ”தங்கம், இந்தா அம்மா கொடுத்து விட்டாங்க “ என்று டப்பாவை கொடுப்பார். என்னவென்று திறந்து பார்த்தால் உள்ளே ஏதாவது பலகாரம் இருக்கும். ”எனக்குகூட தரலை தங்கம்” என்று என்னை திட்டியபடியே தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பார். திட்டிக்கொண்டே செல்வார். நான் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வேன்.

தங்கும் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது “அம்மா, வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்று ஹாஸ்டல் பையன் வந்து சொல்வான். வீட்டுக்கு சென்றால் மட்டனோ அல்லது கருவாட்டுக் குழம்பு, ஆம்லெட் இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு வருவேன். இதைக் கவனித்த சாமியார்களில் ஒருவர் பெரிய சாமியாரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். உடனே பெரிய சாமி என்னை அழைப்பதாக ஓலை வரும். செல்வேன். ”யாரப்பா அது ? நீ மட்டன் , கருவாடு எல்லாம் சாப்பிடுகிறாயாமே” என்பார். ”ஆமாம் சாமி. சாப்பிடனும் போல இருக்கும். சாப்பிட்டு வருவேன்” என்பேன். ”உம் மேல அந்தம்மாவுக்கு அவ்வளவு பிரியமா?” என்று கேட்பார் ”ஆமாம்” என்பேன். சிரித்துக் கொண்டே அந்த டாபிக்கை விட்டு விட்டு விவேகானந்தரை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்.

கிச்சா அம்மா என்னை தனது மகன் போல பாவித்து வந்தார். தீபாவளி, பொங்கல் திரு நாட்களிலும், வீட்டில் ஏதாவது விஷேசமாக செய்தாலும் அவசியம் நான் செல்ல வேண்டும். நான் சென்ற பிறகு தான் கிச்சாவுக்கும் சாப்பாடு கிடைக்கும். ஒரு நாள் உடம்பு சரியில்லை என்று தெரிந்து கொண்டு ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டார்கள். எனது கண்கள் பனித்து விட்டன. அவர்கள் தான் நான் ஆஸ்ரமத்தில் இருந்த நாள் வரையிலும் எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தார்கள். நான் என்ன செய்தேன் அவர்களுக்கு ? ஒன்றுமில்லை.. ஏதாவது வேண்டுமா என்றால் போப்பா என்று சொல்லி மறுத்து விடுவார்கள்.

பெற்ற தாயைவிட வளர்த்த தாய் என்றால் கிச்சாவின் அம்மாதான் எனக்கு நினைவுக்கு வருவார்கள்.... இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லை. ஏன் அவர்கள் என் மீது பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள் ? தெரியாது.... கிச்சாவுக்கு என் மீது கொள்ளை பிரியம். ஏன் கிச்சா இப்படி என்றால் தெரியவில்லை தங்கம். உன்னைப் பார்த்தாலே நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது என்பார். கிச்சாவின் நண்பர் பன்னீர் என்பவர். அவரின் அம்மாவின் விருந்தோம்பல் இன்றும் என் நினைவினை விட்டு அகலாத சம்பவம். முன்னே பின்னே தெரியாத என் மீது கொண்ட அவர்களின் அன்புக்கு என்ன காரணம் ? தெரியாது... இதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாய் எனக்குள் வலம் வருகின்றன அடிக்கடி....

விவேகானந்தா பள்ளியில் கம்யூட்டர் சார் என்றால் பசங்களுக்கு ஒன்னுக்கு வந்து விடும். கையில் நீள பிரம்பு அல்லது மூன்றடி நீளத்தில் ஸ்கேலோ இருக்கும். படிக்க வில்லை என்றால் பின்னி எடுத்து விடுவேன். அந்த அளவுக்கு கொடுமைக்காரனாக இருந்தேன்.

என்னிடம் படித்த மாணவர்களின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. நான் சாப்பிட வில்லை என்று தெரிந்தால் வந்து குவிந்து விடும். திணறி விடுவேன். ஏதாவது விஷேச உணவு வீட்டில் சமைத்தால் முதலில் என்னிடம் தான் வரும். வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கும் போதே பிடுங்கி தின்று விடுவார்கள் எனது மாணவர்கள். மேலே வந்து ஒட்டிக் கொள்வார்கள். அடித்தாலும் வாங்கிக் கொள்வார்கள். கிளாஸ் முடிந்த பின்பு சார், கை சிவந்து போயிடுச்சு என்று என்னிடம் காட்டுவார்கள். எனக்கு கண்ணீர் வந்து விடும். சார், விடுங்க சார். படிக்கனும்னுதானே அடிச்சீங்க. என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள். நான்கு வருடம் அங்கு வேலை செய்தேன். எனது மாணவர்களுக்கு பிராக்டிகலில் 50/50 மார்க் வாங்கி கொடுத்து விடுவேன். அவன் எவ்வளவு மக்காயிருந்தாலும் விடமாட்டேன். முருகானந்தம் என்ற பையன் இருந்தான். சரியாகவே சாப்பிட மாட்டான். தீனி பண்டாரம். அவனுக்கு வீட்டில் இருந்து பலகாரங்கள் வரும். பாக்கெட்டில் வைத்திருப்பான். இண்டர்வெல்லில் வருவான். முறுக்கை எடுத்துக் கொடுத்து சாப்பிடுங்க என்பான். வேண்டாம்டா என்றால் விடமாட்டான். நல்லாயிருக்கில்லே என்று சொல்லி சிரிப்பான். ஒரு தடவை அவன் படிக்கவில்லை என்று பிரம்பால் பட்டக்சில் நாலு போட்டேன் கம்பால். வேணும்னா இன்னும் அடிச்சுக்கங்க என்று சொல்ல போடா என்று சொல்லி விட்டு கிளாஸ் எடுத்தேன். கிளாஸ் முடிந்ததும் ஜட்டிக்குள் இருந்து இரண்டு துண்டுகளை எடுத்துக் காட்டி ஏமாந்துட்டீங்களா என்று சிரிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் விழிப்பேன். அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பான்.

தீபாவளி அன்று எனது மாணவர்கள் தான் எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார்கள். குளியல் அறைக்குள் வந்து சீயக்காயை தலையில் வைத்து தேய்க்க தேய்க்க என் அம்மா தீபாவளிக்கு அரப்பு தேய்த்து என்னைக் குளிப்பாட்டி விடுவது நினைவுக்கு வந்து கண்களில் கண்ணீர் தேங்கும். அரப்பின் வழிசலில் கண்ணீர் கரைந்து விடும். உடம்பு சரியில்லை எனில் வரிசை கட்டி வருவார்கள் அறைக்குள். அதைப் பார்க்கும் சாமியார்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதாக சொல்வார்கள். நான் சிரித்துக் கொள்வேன்.

சாப்பாடு பரிமாறுவார்கள். தட்டு நிறைய பலகாரம் இருக்கும். போதும்டா விடுங்கடா என்றாலும் விடாமல் எதையாவது பேசி, சேட்டைகள் செய்து சாப்பிட வைத்து விடுவார்கள்.

என் மீது மாணவர்கள் கொண்ட அன்பிற்கு என்ன காரணம் ? தெரியாது.... இப்படி என் வாழ்வில் கேள்விகளாய் வந்தவர்கள் அனேகம் பேர்.

இப்படி சில நிகழ்ச்சிகள் வாழ்வில் என்று மறக்க முடியாத கல்வெட்டாய் பதிந்து விடும்.

Sunday, July 6, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 6 ( 06.07.2008)

ரித்தி,

அம்முவுக்கு காய்ச்சல் வந்து விட்டது தான் உனக்கு தெரியும். ஆனால் அந்தக் காய்ச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று உனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீ குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் என்ற நுண்ணிய நோய்க் கிருமிகள் இருப்பதும் ஒரு காரணம். பின்னர் சாப்பிடும் சாப்பாட்டிலும் இருக்கும். அதனால் அம்மாவிடம் சொல்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தரச் சொல்லி பின்னர் தான் தண்ணீர் குடிக்கனும்.

எதுக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கனும் என்று கேள்வி கேட்பாய் . காரணம் என்னவென்றால், தண்ணீர் கொதிக்கும் போது காய்ச்சலுக்கான நோய் கிருமியும், அதன் பின்னர் தொடர்ந்து கொதிக்க வைக்கும் போது மஞ்சள் காமாலை நோயினை உருவாக்கும் நோய்க் கிருமியும் செத்து விடும்.

வீட்டில் தயாராகும் உணவினைத் தவிர ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய ரெடிமேட் உணவுகளும், பரோட்டா போன்ற உணவுகளில் நோய் கிருமிகள் இருக்கும் என்று டாக்டர் சொன்னதாக அம்மா சொல்லியது உனக்கு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆதலால் வெளியிடங்களில் சாப்பிடுவதையும், மிட்டாய், சிப்ஸ், வடை போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடு.

மேலும் சாப்பாட்டினை எப்போதும் சூடாகவே சாப்பிட்டு பழகிகொள். அம்மாவிடம் சொல்லி சூடு செய்து தரச்சொல்லி சாப்பிடு.

மனிதனுக்கு சொத்து என்பது அவனது உடல் நலம் தான். உடலை நன்கு பேணி வரவேண்டும். நோயில்லா வாழ்வே சிறந்தது.


அன்பு அப்பா...................

Wednesday, July 2, 2008

எனது பிறந்த நாள்

எனது பிறந்த நாளுக்கு தமிழ் மன்றத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்களை படிக்க

தமிழ்மன்றம் வாழ்த்துக்கள் படிக்க


நேரிலும், போனிலும், மெயிலிலும் வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி