குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, July 8, 2008

விடை தெரியாத கேள்விகள்...

கரூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் கம்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த காலம். எனது சக ஆசிரிய தோழன் கிச்சா எனும் கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவரின் அம்மா ( அவர் பெயர் கூட தெரியாது ) என் மீது கொண்டிருந்த அன்பு கடவுள் என்மீது கொண்ட அன்புக்கும் மேலானது என்றே சொல்லலாம். கிச்சாவுக்கு என் மீது அடிக்கடி பொறாமை வந்து விடும். ”தங்கம், இந்தா அம்மா கொடுத்து விட்டாங்க “ என்று டப்பாவை கொடுப்பார். என்னவென்று திறந்து பார்த்தால் உள்ளே ஏதாவது பலகாரம் இருக்கும். ”எனக்குகூட தரலை தங்கம்” என்று என்னை திட்டியபடியே தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பார். திட்டிக்கொண்டே செல்வார். நான் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வேன்.

தங்கும் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது “அம்மா, வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்று ஹாஸ்டல் பையன் வந்து சொல்வான். வீட்டுக்கு சென்றால் மட்டனோ அல்லது கருவாட்டுக் குழம்பு, ஆம்லெட் இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு வருவேன். இதைக் கவனித்த சாமியார்களில் ஒருவர் பெரிய சாமியாரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். உடனே பெரிய சாமி என்னை அழைப்பதாக ஓலை வரும். செல்வேன். ”யாரப்பா அது ? நீ மட்டன் , கருவாடு எல்லாம் சாப்பிடுகிறாயாமே” என்பார். ”ஆமாம் சாமி. சாப்பிடனும் போல இருக்கும். சாப்பிட்டு வருவேன்” என்பேன். ”உம் மேல அந்தம்மாவுக்கு அவ்வளவு பிரியமா?” என்று கேட்பார் ”ஆமாம்” என்பேன். சிரித்துக் கொண்டே அந்த டாபிக்கை விட்டு விட்டு விவேகானந்தரை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்.

கிச்சா அம்மா என்னை தனது மகன் போல பாவித்து வந்தார். தீபாவளி, பொங்கல் திரு நாட்களிலும், வீட்டில் ஏதாவது விஷேசமாக செய்தாலும் அவசியம் நான் செல்ல வேண்டும். நான் சென்ற பிறகு தான் கிச்சாவுக்கும் சாப்பாடு கிடைக்கும். ஒரு நாள் உடம்பு சரியில்லை என்று தெரிந்து கொண்டு ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டார்கள். எனது கண்கள் பனித்து விட்டன. அவர்கள் தான் நான் ஆஸ்ரமத்தில் இருந்த நாள் வரையிலும் எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தார்கள். நான் என்ன செய்தேன் அவர்களுக்கு ? ஒன்றுமில்லை.. ஏதாவது வேண்டுமா என்றால் போப்பா என்று சொல்லி மறுத்து விடுவார்கள்.

பெற்ற தாயைவிட வளர்த்த தாய் என்றால் கிச்சாவின் அம்மாதான் எனக்கு நினைவுக்கு வருவார்கள்.... இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லை. ஏன் அவர்கள் என் மீது பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள் ? தெரியாது.... கிச்சாவுக்கு என் மீது கொள்ளை பிரியம். ஏன் கிச்சா இப்படி என்றால் தெரியவில்லை தங்கம். உன்னைப் பார்த்தாலே நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது என்பார். கிச்சாவின் நண்பர் பன்னீர் என்பவர். அவரின் அம்மாவின் விருந்தோம்பல் இன்றும் என் நினைவினை விட்டு அகலாத சம்பவம். முன்னே பின்னே தெரியாத என் மீது கொண்ட அவர்களின் அன்புக்கு என்ன காரணம் ? தெரியாது... இதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாய் எனக்குள் வலம் வருகின்றன அடிக்கடி....

விவேகானந்தா பள்ளியில் கம்யூட்டர் சார் என்றால் பசங்களுக்கு ஒன்னுக்கு வந்து விடும். கையில் நீள பிரம்பு அல்லது மூன்றடி நீளத்தில் ஸ்கேலோ இருக்கும். படிக்க வில்லை என்றால் பின்னி எடுத்து விடுவேன். அந்த அளவுக்கு கொடுமைக்காரனாக இருந்தேன்.

என்னிடம் படித்த மாணவர்களின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. நான் சாப்பிட வில்லை என்று தெரிந்தால் வந்து குவிந்து விடும். திணறி விடுவேன். ஏதாவது விஷேச உணவு வீட்டில் சமைத்தால் முதலில் என்னிடம் தான் வரும். வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கும் போதே பிடுங்கி தின்று விடுவார்கள் எனது மாணவர்கள். மேலே வந்து ஒட்டிக் கொள்வார்கள். அடித்தாலும் வாங்கிக் கொள்வார்கள். கிளாஸ் முடிந்த பின்பு சார், கை சிவந்து போயிடுச்சு என்று என்னிடம் காட்டுவார்கள். எனக்கு கண்ணீர் வந்து விடும். சார், விடுங்க சார். படிக்கனும்னுதானே அடிச்சீங்க. என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள். நான்கு வருடம் அங்கு வேலை செய்தேன். எனது மாணவர்களுக்கு பிராக்டிகலில் 50/50 மார்க் வாங்கி கொடுத்து விடுவேன். அவன் எவ்வளவு மக்காயிருந்தாலும் விடமாட்டேன். முருகானந்தம் என்ற பையன் இருந்தான். சரியாகவே சாப்பிட மாட்டான். தீனி பண்டாரம். அவனுக்கு வீட்டில் இருந்து பலகாரங்கள் வரும். பாக்கெட்டில் வைத்திருப்பான். இண்டர்வெல்லில் வருவான். முறுக்கை எடுத்துக் கொடுத்து சாப்பிடுங்க என்பான். வேண்டாம்டா என்றால் விடமாட்டான். நல்லாயிருக்கில்லே என்று சொல்லி சிரிப்பான். ஒரு தடவை அவன் படிக்கவில்லை என்று பிரம்பால் பட்டக்சில் நாலு போட்டேன் கம்பால். வேணும்னா இன்னும் அடிச்சுக்கங்க என்று சொல்ல போடா என்று சொல்லி விட்டு கிளாஸ் எடுத்தேன். கிளாஸ் முடிந்ததும் ஜட்டிக்குள் இருந்து இரண்டு துண்டுகளை எடுத்துக் காட்டி ஏமாந்துட்டீங்களா என்று சிரிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் விழிப்பேன். அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பான்.

தீபாவளி அன்று எனது மாணவர்கள் தான் எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார்கள். குளியல் அறைக்குள் வந்து சீயக்காயை தலையில் வைத்து தேய்க்க தேய்க்க என் அம்மா தீபாவளிக்கு அரப்பு தேய்த்து என்னைக் குளிப்பாட்டி விடுவது நினைவுக்கு வந்து கண்களில் கண்ணீர் தேங்கும். அரப்பின் வழிசலில் கண்ணீர் கரைந்து விடும். உடம்பு சரியில்லை எனில் வரிசை கட்டி வருவார்கள் அறைக்குள். அதைப் பார்க்கும் சாமியார்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதாக சொல்வார்கள். நான் சிரித்துக் கொள்வேன்.

சாப்பாடு பரிமாறுவார்கள். தட்டு நிறைய பலகாரம் இருக்கும். போதும்டா விடுங்கடா என்றாலும் விடாமல் எதையாவது பேசி, சேட்டைகள் செய்து சாப்பிட வைத்து விடுவார்கள்.

என் மீது மாணவர்கள் கொண்ட அன்பிற்கு என்ன காரணம் ? தெரியாது.... இப்படி என் வாழ்வில் கேள்விகளாய் வந்தவர்கள் அனேகம் பேர்.

இப்படி சில நிகழ்ச்சிகள் வாழ்வில் என்று மறக்க முடியாத கல்வெட்டாய் பதிந்து விடும்.