குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 7, 2016

நிலம் (18) - பவர் மூலம் விற்கிரைய ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை

சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மேல் முறையீட்டுக்கு வந்திருந்தது. 

அந்த வழக்கு என்னவென்றால், சொத்தின் உரிமையாளரிடமிருந்து பொது அதிகார ஆவணம் எழுதி வாங்கியவர் வேறொரு நபருக்கு சொத்தினை விற்பதற்காக விற்கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்து சொத்தின் விலையில் முக்கால் வாசி பெற்று விடுகிறார்.

விற்கிரைய ஒப்பந்தகாலம் ஒரு வருடம். ஆனால் ஒரு வருடம் முடிவில் பொது அதிகார முகவர் சொத்தினை எழுதிக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒப்பந்தம் செய்தவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். சொத்தின் உரிமையாளர் பொது அதிகார ஆவணத்தை ரத்துச் செய்கிறார்.

விற்கிரைய ஒப்பந்தத்தின் படி சொத்தினைக் கிரையமும் செய்யமுடியவில்லை. பொது அதிகார முகவர் ஆவணமும் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.

கீழ் நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புரைகள் மாறி மாறி வந்தன. அதைப் பற்றி இங்கே எழுத ஆரம்பித்தால் குழம்பி விடுவீர்கள் என்பதால் சாரத்தை மட்டும் எழுதுகிறேன்.

பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்தாலும் சொத்தின் உண்மையான உரிமையாளராக பவர் பெற்றவர் ஆக மாட்டார். எந்த நேரத்திலும் பவர் ரத்துச் செய்யப்படலாம். ஆனால் பவர் வாங்கியவர் எழுதிக் கொடுத்திருக்கும் ஒப்பந்தத்தை சொத்தின் உண்மையான உரிமையாளர் செயல்படுத்தியே ஆக வேண்டும். எனக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. 

இருப்பினும் ஒரு சில ஓட்டைகளும் இருக்கின்றன. புத்திசாலி வக்கீல் அதனைப் பயன்படுத்துவார்.

மேற்கண்ட பிரச்சினைக்கு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை வழங்கியது.

விற்கிரைய ஒப்பந்தம் செய்தவர், அந்தச் சொத்தினை குறிப்பிட்ட காலத்துக்குள் கிரையம் செய்திட தயாராக இருந்ததை நிரூபித்த காரணத்தால் அந்தச் சொத்தினை சொத்தின் உரிமையாளர் மீதித் தொகையினைப் பெற்றுக் கொண்டு கிரையம் செய்து கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. 

விற்கிரைய ஒப்பந்தம் போட்டு விட்டோம் இனி சொத்து எனக்குத்தான் என்று நினைத்து விடக்கூடாது என்பதை நினைவில் கொள்க என்பதற்காகத்தான் இந்தப் பதிவினை எழுதி இருக்கிறேன்.

இதைப் போன்ற ஏதேனும் வழக்குகள் வந்தால், கோர்ட்டில் வழக்கு நடந்தால், அது இன்னும் முடியாமல் இருந்தால் தொடர்பு கொள்ளவும். விரைவில் வழக்கை முடித்து தீர்வு பெற உதவுகிறேன்.

*  *  *


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.