குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, August 8, 2009

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளும் தீர்வும்

பன்றிக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பொது மக்களிடமும், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இப்பதிவு.

1) தொடர்ந்து மூக்கில் சளி வருதல்
2) விடாமல் தொடர்ந்து காய்ச்சல் இருத்தல்
3) தொண்டையில் வலி இருத்தல்
4) தொடர்ந்து வயிற்றுக் கழிச்சல்
5) கைகால்களில் வலி இருத்தல்

மேற்படி தொந்தரவுகள் காணப்பட்டால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவும். மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் இருப்பதாகவும், ஸ்பெஷல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் என்னிடம் போனில் பேசிய அரசு மருத்துவர் சொன்னார்.

இந்தியாவெங்கும் இருக்கும் அரசு மருத்துவ மனைகளும், அதன் தொலைபேசி எண்களையும் கீழே தந்திருக்கிறேன்.

Saturday, August 1, 2009

பெண்கள் - உள்ளமும் அழகும்

டெலிமார்க்கெட்டிங் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்வது போன்ற விபரங்களுக்காக ஒரு மொபைல் கம்பெனியின் நோடல் ஆஃபீசருடன் பேச வேண்டிய சூழ் நிலை. அந்த நோடல் ஆஃபீசர் ஒரு பெண். முதலில் நானே பதிவு செய்த விபரம் தவறு என்பதால் கேன்ஷல் செய்து விட்டது நமது அரசாங்கம். பின்னர் மறுபடியும் நோடல் ஆஃபீசரே புதிதாய் பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். கையெழுத்திட்ட விண்ணப்பத்துடன் டிடியை இணைத்து மனைவியிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நோடல் ஆஃபீசரிடமிருந்து போன். டிடி நம்பர் என்னவென்று டிடி எடுத்த வங்கியில் கேட்டுச் சொல்லவும் என்றார். விசாரித்து சொன்னேன். ஒரு வாரம் சென்ற பிறகு வங்கி குறிப்பிட்டது டிடி நம்பர் இல்லை என்றும் மற்றொரு நம்பர்தான் டிடி நம்பர் என்றும் சொல்கிறார்கள் என்பதால் புதிய பதிவினைச் செய்ய வேண்டுமென்றார். மீண்டும் பதிவு செய்து புது கணக்கைத் இமெயிலில் அனுப்பி வைத்தார். அதை பிரிண்ட் எடுத்து, இன்றைக்கு காலையில் நோடல் ஆஃபீசரிடம் கையெழுத்து இட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தை அளித்து விட்டு வந்த என் மனைவியிடம் ”சார், எங்களால் மிகுந்த சிரமப்படுகிறார்” என்று தன் வருத்தத்தை தெரிவித்தாராம் நோடல் ஆஃபீசர்.

வண்டியில் வரும் போது, என் மனைவி, ”ஏங்க அந்தப் பெண் ரொம்ப அழகாய் இருக்கிறார்.”

”சிவப்புக் கலரா?”

”ஆமாங்க, அவ்ளோ அழகு, பார்த்திருக்கலாம்” என்றார்.

”அழகு என்பது தோல் கலரில் இல்லை. உள்ளத்தில் இருக்கிறது. ஆள் அழகாய் இருந்தால் மனசு அழகாய் இருக்காது” என்று சொன்னேன்.

ஆள் அழகாய் இருந்தால் உள்ளம் கொடூரமாய் இருக்குமென்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் நானே அனுபவித்தும் இருக்கிறேன். என்னிடம் எத்தனையோ பெண்கள் பழகி இருக்கின்றார்கள். வாத்தியாராக வேலை செய்த காலத்தில் அழகான பெண் பிள்ளைகளின் செயல்களை நேரில் கண்டிருக்கிறேன். அழகாய் இருக்கிறோமென்ற எண்ணத்தின் காரணமாய் கொடூரமாய் நடந்து கொள்வர். இப்படி நான் சந்தித்த எத்தனையோ பெண்கள் அழகினால் கர்வம் கொண்ட சம்பவத்தினையும் அதன் பொருட்டு வாழ்க்கையில் வேதனைகளைச் சந்தித்த கதைகளையும் அறிவேன்.

வீடு வந்து சேர்ந்தோம். கொரியர் வந்திருந்தது. நோடல் ஆஃபீசரே புதிதாய் ரெஜிஸ்டர் செய்து ஈமெயிலில் நேற்று எனக்கு அனுப்பி வைத்த விண்ணப்பத்தை, பிரிண்ட் எடுத்து எனது கையொப்பத்தை பெற கொரியரில் அனுப்பி இருந்தார். என் பொருட்டு அவர் தன்னை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறார் என்பது புரிந்தது. நோடல் ஆஃபீசர் ஆள் மட்டும் அழகு இல்லை, உள்ளமும் அழகு என்று அந்த நொடியில் உணர்ந்தேன். எவர் ஒருவர் பிறருக்காக தன்னை சிரமத்திற்குட்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.

இப்போது நோடல் ஆஃபீசரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது.

Friday, July 24, 2009

தங்கத்தின் விலை குறையுமா ?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. என்ன காரணம் ?

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பில் சரிவேற்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆபரணத்தங்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் இன்று ரூபாய் 11400க்கு விற்கப்படுகிறது. இது மேலும் உயரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

தங்கம் வாங்க விரும்புவர்கள் அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தை வாங்கும்படியும், உடனடித் தேவை இல்லாதவர்கள் சற்றே பொருத்து விலை குறையும் போதும் வாங்கலாம் என்று ஃபைனான்சியல் அட்வைஸ்ர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகளவில் குருடூ ஆயில் சற்றே விலை உயர்ந்து பீப்பாய்க்கு 65.25 டாலராக இருக்கிறது. மேலும் உயரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக மார்கெட் நிலவரங்கள் சொல்கின்றன.

இனி சில கம்பெனிகளின் நிகர வருமானம், நஷ்டம் இவற்றைப் பார்க்கலாம்.

மாருதி சுசுகியின் காலாண்டு நிகர வருமானம் 584 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிருவனத்தின் வளர்ச்சி விகிதம் 25% ஆகவும் உயர்வு பெற்றிருக்கிறது.

கேஈசி இண்டர்னேஷனல் கம்பெனி மின் உற்பத்திக்கான சுமார் 477 கோடி ரூபாய் பணி ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இண்டியாவின் காலாண்டு நிகர வருமானம் 442 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஏசிசியின் காலாண்டு நிகர வருமானம் 15% வளர்ச்சியுடன் 471 கோடி ரூபாயாகும்.

இண்டோ ஜிஸ்க் நிறுவனத்தின் 9 லட்சம் பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது. மொத்த பங்குகளில் இது 20 சதவீதம் ஆகும். முன்பே ஐசிஎல் நிறுவனம் 39.84 சதவீதம் பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருக்கிறது.

மங்களூரி ரிபைனரி காலாண்டு லாபம் 50 சதவீதம் சரிவு பெற்றிருக்கிறது.

Friday, July 17, 2009

அப்பாவுடன் அம்முவின் போராட்டம்.......


படித்துக் கொண்டிருப்பேன். கையில் உருளை சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு என் தலையருகில் அமர்ந்து கொண்டு கையில் எடுத்த சிப்ஸை வாயில் வைத்து கடித்து விட்டு மீதியை ”அப்பா, ம்.. ”என்று சொல்லி என் வாயில் வைக்கும் அம்மு. நானும் சாப்பிடுவேன். அப்படியே ஒரு பாக்கெட்டையும் காலி பண்ணுவோம் அம்முவும் நானும். இது வழக்கமாக அம்முவுடன் நானும் சேர்ந்து கொண்டு செய்யும் வேலை.

இன்று, ஹோமியோபதி டாக்டரை பார்த்து விட்டு வரும் போது வாங்கி வந்த காராச்சேவைக் கொண்டு வந்து காட்டியது அம்மு. வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்புறம் சாப்பிடலாம் அம்மு என்று சொல்லி விட்டேன்.

மாலை நேரம். டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது காராசேவு நினைவுக்கு வர ”அம்மு, காராச்சேவை எடுத்துக்கிட்டு வாரியா, சாப்பிடலாம்”என்றேன். ”அப்பா, அப்போதே சாப்பிட்டு விட்டேனே” என்றது அம்மு. ”அப்படியாம்மா” என்று சொல்லிபடி டிவியில் மூழ்கி விட்டேன்.

ரித்திக் பள்ளியில் இருந்து வந்ததும் சேவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”ஏதுடா இது?” என்றேன்.

”கிச்சனில் இருந்ததுப்பா” என்று ரித்திக் சொல்ல எனக்கு கோபம் வந்து விட்டது. ”அம்மு இனிமேல் என்னிடம் பேசாதே” என்று சொல்லி கோபத்துடன் மனைவியிடம் ”உன் மகளை என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லு” என்று கோபமாக கத்தினேன்.

அவ்வளவுதான். உடனே அம்மு அருகில் வந்து மூக்கை முகத்தில் வைத்து தேய்த்தது. நான் தள்ளி விட்டேன். முத்தம் கொடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டேன். மேலே ஏறி உட்கார முனைந்தது. ”என்னிடம் வராதே” என்று கோபத்தில் இறைந்தேன். பயந்து விட்டது. அம்முவின் அம்மாவிடம் ”ஏய் அம்முவிடம் சொல்லி என்கிட்டே வரக்கூடாது என்று சொல்” என்று கத்தினேன்.

கையில் சாப்பாட்டைத் தட்டைக் கொண்டு வந்து அருகில் அமர்ந்து ”அப்பா ஊட்டி விடு” என்றது. நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். அப்போது பார்த்து, நண்பரிடமிருந்து போன் வர, மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசக்கூடாது என்றும், நான் மட்டும் தான் அப்பாவிடம் பேசுவேன் என்றும், நீ அப்பாவுடன் பேசாதே என்றும் சண்டை போட அம்மாவுக்கும் அம்முவுக்கும் தகராறு வந்து விட்டது. என்ன சொல்லியும் நான் கேட்கவில்லை என்றவுடன் ”அப்பா, கால் வலிக்குது, வலிக்குது” என்று அழ ஆரம்பித்தது. நானொன்றும் சொல்லவில்லை என்பதால் எழுந்து போய் அம்மாவிடம் மீண்டும் சண்டை போட , மனைவி என்னிடம் வந்து ”ஏங்க இப்படிச் செய்றீங்க?” என்று கேட்க, நான் காராச்சேவு பிரச்சினையைச் சொல்ல சிரி சிரியென்று சிரித்தாள். அம்மு மறந்து விட்டது என்றும் அதனால்தான் முடிந்து விட்டது என்று சொல்லி இருக்கிறது என்றும் சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

உடனே இருவரும் ராசியாகி விட்டோம். ஒரு வழியாக அம்முவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கையின் சுவாரசியமான தருணங்கள் இவைதான். மனித குலம் இப்படிப் பட்ட சந்தோஷங்களினால் தான் இன்றும் ஏதோ நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

குழந்தைகள் வாழ்க்கையினை அர்த்தப் படுத்தும் அற்புதங்கள் என்பதை இந்த அற்புதமான தருணத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

Sunday, July 12, 2009

சபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



அன்பு சபா !
அழகிய, அறிவான, அன்பான உனது வாழ்வில் எல்லா வளமும், புகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வீட்டுக்கு மூத்தவனான உன்னால் தான் உனது உறவுகளும், உற்றோர்களும், நண்பர்களும் சந்தோசம் பெற முடியும். உன்னால் சாதிக்க முடியாத என்று ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன். நீ வெற்றியாளனாய் உலக மாந்தர்களின் உள்ளங்களை வெற்றி கொள்வாய் என்பது என் நம்பிக்கை. உனக்காக உன் தாய் தன் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்த தாய்க்கு நீ செய்யும் ஒரு உபகாரம் உண்டென்றால் அது ”உலகே உன்னைக் கொண்டாட வேண்டும்” என்பது தான்.

எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன் :
ரித்திக் நந்தா, நிவேதிதா, பூங்கோதை, தங்கவேல்

Monday, June 22, 2009

அக்காவும் தங்கையும்

அக்காவுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். தங்கைக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் கழிந்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லை. இப்படி இருக்க ஒரு நாள் அக்காவைப் பார்க்க சென்றாள். தங்கையை வரவேற்று இன் வார்த்தைகள் சொல்லி விருந்துச் சமையல் செய்து பரிமாறினாள் அக்கா. அப்போது தங்கையின் மனவோட்டத்தை ஒருவாறாக ஊகித்து விட்டாள். குழந்தைகளோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தங்கை. குழந்தைகள் சாப்பிடும் அளவை விட அதிகமாக உணவு பரிமாறினாள் அக்கா. குழந்தைகள் சாப்பிட்டு தட்டில் மிச்சம் வைத்து விட்டு எழுந்து விட்டனர். குழந்தைகள் மிச்சம் வைத்த உணவினை ஒவ்வொரு தட்டாக எடுத்து சாப்பிட்டு விட்டு, போதாமல் கொஞ்சம் சட்டியில் இருந்து உணவையும் எடுத்துப் போட்டு சாப்பிட்டாள் அக்கா. தங்கையைப் பார்த்து இன்னொரு குழந்தை இருந்தால் எனக்கு சாப்பாடு நிறைவாயிருந்திருக்கும் என்று சொன்னாள். தங்கை தான் என்ன நினைத்து வந்தாளோ அது நடக்காது என்று தனக்குள்ளே ஊகித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இக்கதையில் தங்கையின் எண்ணம் அக்காவிடமிருந்து ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்பது. ஆனால் அக்காவுக்கோ அப்படி குழந்தையைக் கொடுக்க மனமில்லை. அதை தங்கையிடம் எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டாள் என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.

எனது அண்ணா அதாவது அப்பாவின் ஒன்று விட்ட தம்பிக்கு பிறந்தவர் கிராமியக் கதைகள் சொல்வதில் மன்னர். நேற்றைக்கு மீன் வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுச் சென்றார். கோயமுத்தூர் பக்கம் மீன் குழம்பில் தேங்காயை சேர்த்து சப்பென்று சமைத்து விடுவார்கள். அந்த டேஸ்ட் இவருக்குப் பிடிக்காது. பட்டுக்கோட்டைப் பக்கம் காரம், புளிப்பு என்று மீன் குழம்பு ரத்தக் கலரில் இருக்கும். மனைவிக்கு எங்கள் ஊர் சமையல் பக்குவம் அத்துப்படி. வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் பிறந்தாலும் எனது ஊர் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு விட்டாள். அண்ணா சாப்பிடும் முன்பு சொன்ன கதைதான் மேலே இருப்பது.

பெண் என்பவள் வீட்டின் அச்சாணி. வண்டி எப்படி அச்சாணி இன்றி இயங்க முடியாதோ அப்படித் தான் பெண் இன்றி எந்தக் குடும்பமும் இயங்க முடியாது. அந்தப் பெண்ணின் சகிப்புத் தன்மைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

Thursday, June 11, 2009

கெஸ்ட் ஹவுஸ்





இந்த முறை ஹோட்டலில் தங்காமல் ஏதாவதொரு பிரைவேட் ஹெஸ்ட் ஹவுஸில் தங்கலாமென்று நினைத்தேன். கடமைக்கு என்று சிரிக்கும் ரூம்பாய்களையும், சர்வர்களையும் சற்றே பார்க்காமல் தவிர்க்கலாம் என்று நினைத்தேன். ஃப்ரான்சில் வசிக்கும் எனது நண்பர் திரு ஆட்னன், ஒரு முறை கேரளா வந்து ஹெஸ்ட் ஹவுசில் தங்கியதாகவும், அதைப் பற்றிய அனுபவத்தை சிலாகித்தும் சொன்னது நினைவுக்கு வர அவருக்கு மெயில் அனுப்பி வைத்தேன். மறு நாள் விபரமாக அவரிடமிருந்து பதில் வந்தது. கொச்சியில் இருக்கும் ஹெஸ்ட் ஹவுஸைப் பற்றிய விபரக் குறிப்புகளை அனுப்பி இருந்தார். போட் ஹவுஸிலிருந்து நேராக அந்த ஹெஸ்ட் ஹவுசுக்குச் சென்றோம்.



மிஸ்டர் பேசில் எங்களை வரவேற்றார். பேக் வாட்டர் ஹோம் என்ற பெயரில் அருமையான பழங்காலத்து வீடு. கிட்டத்தட்ட 70 வருடங்கள் ஆகி விட்டது என்று சொன்னார். இரண்டு குளிர் சாதன வசதி கொண்ட அறைகள். பெரிய பாத்ரூம். பின்புறம் ஆற்றுத் தண்ணீர். சுற்றிலும் செடிகள், மரங்கள், மாமரம், கொய்யா என்று வித விதமான மரங்கள். வாசலின் இடது பக்கம் தோட்டம் என்று அமைதியான சூழலில் அழகான வீடு. வாசலின் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு நானும் அவரும் பழங்கதைகள் எல்லாம் கதைத்தோம். வெகு சுவாரசியமான மனிதர். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். என்ன சாப்பிடலாமென்று அட்வைஸ் வேறு. ஃபாரினர்ஸ் அவருடன் தங்கிய கதைகளையும், புகைப்படங்களையும் காட்டினார். சமீபத்திய மலையாள மேகசினில் வெளிவந்த அவரைப் பற்றிய கட்டுரையினையும் காட்டினார்.






இரவு மெனுவை விசாரித்துக் கொண்டு, டிரைவருடன் அவரும் கூடவே ஹோட்டலுக்குச் சென்று கூடவே, ஹாட்பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று டிஃபன் வாங்கி வந்து அவரே சூடாகப் பரிமாறினார். சாப்பிடும் போது ஷாம்பெயின் கொண்டு வந்து கொடுத்தார். மறுத்து விட்டோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தோட்டத்தில் பழுத்த மாம்பழம் பரிமாறினார். வெகு இனிப்பு. வீட்டுச் சாம்பாரும் வந்தது. அட்டகாசம். அவரின் மனைவி அன்போடு பழகினார்.




இரவில் நல்ல தூக்கம். விடிகாலையில் சுடச்சுட காஃபி வந்தது. ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டே குளிர்ச்சியான அந்த சூழ்நிலையில் காஃபியும் சுவையோடு இருக்க அந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்ன டிஃபன் வேண்டுமென்று கேட்டார். இடியாப்பம், சன்னா மசாலா என்று சொன்னேன். காலையில் எல்லாம் தயார். பூவரச இலையின் மீது வேக வைத்த இடியாப்பமும், சன்னா மசாலாவும் வெகு அருமை. குடும்பத்தோடு புகைப்படமெடுத்துக் கொண்டோம். மனைவியிடம் மாங்காய், ஜாதிக்காய் கொடுத்தார் திருமதி பேசில். கூடவே சன்னா மசாலா செய்முறை விளக்கத்தையும் கொடுத்தார். கேட்பதோடு சரி. செய்தெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று அப்போதே முடிவு கட்டிக் கொண்டேன். நல்ல பிள்ளைகளாக தம்பி மனைவியும், என் அம்மணியும் இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். மன நிறைவோடு வீகா லேண்ட் கிளம்பினோம் மறுநாள்.



கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் நல்லா இருங்க என்று எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலும் ஆசீர்வதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இரவில் சில படகுகள்

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எங்கோ ஓரிடத்தில் தண்ணீருக்குள் குடும்பத்துடன் தங்கும் போது. எங்கள் படகும் மற்றொரு படகும் அருகருகே நின்றிருந்தன. வலதுபக்கமாக நீண்ட நூறு அடி அகலமிருக்கும் நிலமும் அதன் மீது கட்டப்பட்ட வீடுகளும் தெரிந்தன. நாம் இங்கு தான் இரவில் தங்கப்போகின்றோமா என்று ராஜுவிடம் கேட்டேன். ராஜு படகில் எங்களுக்கு உதவியாய் வருகிறவர். ஆம் என்றார். இரவில் டின்னர். நாங்கள் வாங்கிக் கொடுத்த ப்ரானுடன், மீன் வறுவல், பருப்பு, ரசம், தயிர், பொறியல், ஊறுகாய் என்று மெனு. முதலில் ப்ரானை முடித்து விட்டு காய்கறிகளையும், கொஞ்சம் ரசத்தையும் சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டேன். பத்து மணி அளவில் தூங்கச் சென்றோம். ஏசி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. சன்னலைச் சாத்தி விட்டு பெட்டில் படுத்து விட்டேன். குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென விழிப்பு வர, செல்போனில் மணி பார்த்தேன். பனிரெண்டு. தூக்கம் வராத காரணத்தால் சன்னலோரம் சென்று அமர்ந்தேன். ஆங்காங்கே வெளிச்சப்பொட்டுகளுடன் படகுகள் தண்ணீரில் சென்று கொண்டிருந்தன. மீன் பிடிக்க செல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் படகை சிறிய மிதவைப் படகு ஒன்று கடந்து செல்ல இருட்டில் கண்களைப் பழகிக் கொண்டு உற்றுப் பார்த்தேன்.

அதேதான். அடப்பாவிகளா ? இங்கேயுமா ???

பாவம் என்று எண்ணியபடி மீண்டும் உறங்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் விடிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடும் பழக்கத்தால் எழுந்து சன்னலோரம் அமர்ந்தேன். அப்போதும் சில படகுகள் சென்று கொண்டிருந்தன. அதில் அதேதான். அதாவது இரவு பதினோறு மணிக்கு வேலைக்கு வந்து விட்டு, விடிகாலையில் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். இது பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமேற்பட,படகில் எங்களுடன் வந்தவரிடம் விசாரித்தேன்.

”சார், இங்கெல்லாம் குடும்பத்தோடு வரலாமா? தனியாக அல்லவா வரவேண்டும் “ என்று சொன்னார்.

”தனியாக வந்தால் என்ன ஸ்பெஷல்” என்று கேட்டேன்.

”எல்லாம் கிடைக்கும் சார்” என்று எல்லாமில் மிக அழுத்தம் கொடுத்தார்.

ஆமாம், எல்லாமும் (ஹி..ஹீ...) கிடைக்கும் என்று நினைத்தபடி அசடாக சிரித்து வைத்து விட்டு அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்.

குறிப்பு : அதே தான் என்பது அதே தான். மேலும் சொல்ல விரும்பவில்லை. பெரும்பாலானா டூரிஸ்ட் ஸ்தலங்களில் நடக்கும் கூத்து தான் இது. ”ஜெய் ஹோ”... போங்கய்யா, நீங்களும் உங்க .....

Thursday, June 4, 2009

தண்ணீருக்குள் இரண்டு நாட்கள்

ஆலப்புழாவில் படகில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தேன். சுற்றிலும் தண்ணீர். சமையல், குளியல் எல்லாம் படகிலே. சுமார் அரை மணி நேரம் படகு ஓட்டினேன். மனதுக்கு வெகு உற்சாகம் தந்த நாட்கள் அவை. வைரஸ் காய்ச்சலில் உடலும் மனதும் சோர்ந்து கிடந்தது. திரும்பவும் ரீஜார்ஜ் ஆகிவிட்டது. சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். வெகு சுவாரசியமான சம்பவங்களை விரைவில் எழுதுகிறேன்.












(ரித்திக் நந்தா)

Thursday, May 21, 2009

சில போட்டோக்களினால் ...

இத்தனாம் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று தேர்தல் கமிஷன் தினசரிகளில் செய்தி வெளியிட்டிருந்தது. அதை முற்றிலுமாக நம்பி, மாநகராட்சிக்குச் சென்று அப்ளிகேஷன்ஸ் வாங்கி பூர்த்தி செய்து ஒப்படைத்தேன்.

தேர்தலும் முடிந்து விட்டது.

இது நாள் வரை விசாரணையும் வரவில்லை.அடையாள அட்டையும் வரவில்லை.
தேவையின்றி இரண்டு நாள் அலைச்சல்தான் மிச்சமானது. பொது மக்களுக்கு தவறான செய்திகளை கொடுத்து அலைச்சலும், வீண் விரயமும் செய்யும் தேர்தல் கமிஷன் மீது வழக்குத் தொடுத்து, நஷ்ட ஈடு பெற இயலுமா ? விபரம் தெரிந்தவர்கள் சொன்னால், பிறருக்கு உபயோகமாய் இருக்கும்.

வேகாத வெயிலில் சென்று திரும்பி வருகையில், பசி வயிற்றைக் கிள்ள சாலையோரத்தில் நின்றிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் மொபைல் உணவகத்தைக் பார்த்தேன்.



தக்காளி சாதம் ரூபாய் 10.
வெஜிடபிள் பிரியாணி ரூபாய் 10
தயிர்சாதம் ரூபாய் 10
வடை, ஊறுகாய், குருமா, சாம்பார்

தக்காளி சாதம் சாப்பிட்டேன். சும்மா சொல்லக்கூடாது. வயிறும் நிரம்பி விட்டது. சுவையும் நன்றாகவும் இருந்தது. எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகையால் அந்த சுய உதவிக்குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லும் பொருட்டு இப்படம்.





போளி :

இரண்டு மாதங்களுக்கு முன்பு டவுன் சென்று திரும்பும் போது நான் சாப்பிட்டு அறியாத இந்த வஸ்துவைப் பார்த்தேன். அருகில் சென்று விசாரித்தேன். போளி என்றார். சுவீட், காரம் என்று இருவகை போளிகள் இருந்தன. ஒன்று கொடுங்கள் என்றேன். ஏதோ ஒரு எண்ணெயைத் தடவி, மைதாவால் தயாரிக்கப்பட்ட மாவிற்குள் சுவீட் மிக்ஸை வைத்து தட்டி சூடாக எடுத்து தந்தார். முதன் முதலாக சாப்பிடும்போது நன்றாக இருந்தது. ஒன்றோடு முடித்துக் கொண்டேன். பத்து ரூபாய்க்கு மூன்றாம். அந்த போளி தான் செல்போனிற்க்குள் சிக்கிக் கொண்டது.


அம்முவின் அடாத தொல்லையால் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட அழைத்துச் சென்ற போது வழியில் குறுக்கிட்டது ஊர்வலமொன்று. அதன் புகைப்படங்கள் தான் கீழே இருப்பவை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். யாரோ ஒரு பெண் வெகு சிரத்தையாக குடத்தில் தண்ணீர் மொண்டு மொண்டு தலையில் பால் குடம் வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் ஊற்றிக் கொண்டிருந்தார். அழகான பெண்கள் எல்லாம் ஆண்களின் பின்னே வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லுபவர்கள் நேரமாகிவிடுமோ என்று பதைபதைப்புடன் ஊர்வலத்தின் வலதும் இடதுமாய் கடந்து சென்றார்கள். புலி வேஷம் போட்டிருந்தவர் கண்ணில் கூலிங்க் கிளாஸ் மாட்டிருந்தார். வெறியேற்றும் மேளதாள முழக்கங்கள். வெடிகள். ஆடிக்கொண்டிருந்தனர் பலர். அம்மு என்னிடம் சுட்டிக் காட்டியது ” அப்பா, அந்த சாமி ஆடுதுப்பா”










இதுவரை பார்த்தே இராத இரு சிறுவர்கள் அம்முவை பார்க்கில் இருக்கும் ஊஞ்சலில் தூக்கி வைத்து ஆட்டிக் கொண்டு விளையாடினார்கள். ரித்திக் அந்த இரு சிறுவர்களும் அம்முவுடன் விளையாடுவதைக் கண்டு எரிச்சலுற்று என் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அம்முவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது ஒரே சிரிப்பு. வண்டியில் வீட்டுக்குத் திரும்ப வரும்போது அம்மு என்னிடம் கேட்டது “ஏம்பா அவங்க அம்மா அவுங்க டிரஸ்ஸை தொவைக்க மாட்டாங்களா, அழுக்கா இருக்குல்ல” என்றாள். பெண்கள் சரியில்லை என்றால் சமூகம் கெட்டுப் போய் விடுமென்று ஆத்மானந்தா சாமி என்னிடம் அடிக்கடி சொல்வார்.