திருமணத்திற்கு முன்பு தனியாக வசித்து வந்த போது மோகன் என்ற பையனை என்னுடன் தங்க வைத்து, பாலிடெக்னிக்கில் படிக்க வைத்துக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து சமையல் முடித்து, குளித்து, சாப்பிட்டு விட்டு ஆஃபீஸுக்குச் செல்வேன். அவனும் என்னுடனே வந்து கல்லூரிக்குச் செல்வான். விசுவாசத்திற்கு பெயர் போனவன்.
ஜாதகத்தை நம்பலாமா இல்லையா என்பது ஒரு பக்கமிருந்தாலும் என் அனுபவத்தில் ஜாதகம் மாபெரும் புதிராய் இருக்கிறது. கல்யாணம் செய்ய பத்து நாட்கள் இருக்கும் முன்பே என் நண்பரின் உறவுக்காரரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னுடைய ஜாதகத்தை பார்த்த அந்த உறவுக்காரர் ”இன்னும் சரியாக பத்து நாட்களில் நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ உங்களுக்கு திருமணம் நடந்து விடும்” என்றார்.
”அதெப்படி என் விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கும், எனக்கு ஐடியாவே இல்லையே?” என்றேன்.
“அப்படி திருமணம் நடக்கவில்லை என்றால், அன்றோடு நான் ஜாதகம் சொல்வதையே நிறுத்துவேன்” என்றுச் சவால் விட்டார்.
சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த பத்தாவது நாளில் எனக்கு திருமணம் நடந்தது. ஜாதகத்தில் அதையெல்லாம் கண்டு பிடிக்க முடியுமா என்று எனக்கு குழப்பமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.
திருமணம் முடித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தோம். என்னுடன் மோகனும், இவனின் நண்பனான டிரைவரும் மட்டும் தான் வந்தனர். மறு நாள் காலையில் வரும்படி காவல்துறையினர் கேட்டுக் கொள்ள மறு நாள் மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்றால் அங்கு மனைவியின் உறவினர்கள் நான்கைந்து காரில் வந்திருந்தனர். ஒரே கூட்டம்.
நான் பயப்படவும் இல்லை, பதட்டப்படவும் இல்லை. அமைதியாய் காருக்குள் உட்கார்ந்திருந்தேன்.
என் நெருங்கிய உறவுக்காரர் என்னிடம் வந்து, ”அந்தப் பெண் அவரின் அம்மாவுடன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டார், வாங்க கிளம்புவோம் , இனி இங்கிருந்தால் போலீஸ் நம்மை ஜெயிலுக்குள் தள்ளி விடும்”என்றார்
“அவள் அப்படியெல்லாம் போகமாட்டாள்” என்றுச் சொல்லி வர மறுத்தேன். பேசாமல் சென்று விட்டார். அவர் கவலை அவருக்கு. எங்கே எனக்குத் திருமணம் ஆகி விட்டால், அவருக்கு கிடைக்க வேண்டிய சொத்துப் போய் விடுமே என்று பயந்தார் போலிருக்கிறது. அது உண்மையாகப் போனது வேறு கதை.
அடுத்த நொடி காருக்குள் இருந்து இரண்டடி கத்தியுடன் மோகன் இறங்கினான்.
“சார் பத்து நிமிடம் அமைதியாய் இருங்கள். அனைவரையும் கொன்று விட்டு, மேடத்தைக் கூட்டி வருகிறேன்” என்று கிளம்பினான். கூடவே டிரைவர் பெரிய இரும்புத்தடியை எடுத்துக் கொண்டு இறங்கினான். பதறி தடுத்தேன்.
அதற்குள் ஒரு ஏட்டு எங்கள் அருகில் வந்து, “அப்பெண் அவர்களுடன் வர முடியாது என்று சொல்லி விட்டார், அமைதியாய் உட்கார்ந்திருந்திருங்கள்” என்றுச் சொல்லி விட்டுச் செல்ல, அதன் பிறகு தான் இருவரும் அமைதியானார்கள்.
சிறிது நேரம் சென்ற பிறகு அவரவர்களும் கலைந்து செல்ல, காவல் நிலையத்தில் எங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டது. என் நெருங்கிய உறவினர் யாரும் வந்து வாழ்த்தவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. எனக்கு எல்லா உதவிகளையும் செய்து, ஏட்டாக இருந்து தற்போது ரிட்டயர்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி திரு செல்வம் அவர்களை தற்போது நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.
கோவிலில் மாலையை மோகனை எடுத்துக் கொடுக்க சொன்னேன். என் கண்களைப் பார்த்துச் சிரித்தான்.
”கத்தி எங்கேடா?” என்றேன்.
வெட்கத்துடன் முகம் தாழ்த்தினான்.
* * *
மேலும் ஒரு சம்பவம் மோகனைப் பற்றி:
திருமணம் முடித்து பட்டிக்காட்டில் இருவரும் தங்கி இருந்தோம். ஒவ்வொரு நாள் போவதும் பெரிய போராட்டமாய் இருந்தது. எங்களின் கஷ்டத்தைப் பார்த்த மோகன், கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த என் வீட்டிற்கு போய் டூவீலரில் டிவியைத் தூக்கி கொண்டு வந்து கேபிள் கனெக்ஷனை கொடுத்து விட்டுச் சென்றான். இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும். இவனும், இவனது நண்பனும் சேர்ந்து இக்காரியத்தைச் செய்தனர். கையிலேயே டிவியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அப்படி வரும் போது அவனுக்கு என்ன வலி வலித்திருக்கும் என்று யோசித்தால் மனசு அப்படியே நெக்குறுகிப் போய் விடும். அவனது நினைவாய் இன்னும் அந்த டிவியை தூக்கிப் போடாமல் வைத்திருக்கிறேன்.
தலைப்புச் சரியாக இருக்கிறதா?
* * *