உண்மை தன்னை நிலை நாட்டிக் கொள்ள மாபெரும் விலையைக் கொடுத்து வரும் பலப்பல நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம். பதவிப் பித்துப் பிடித்த கொ(த)லைவர்களால் புதைக்கப்படும் உண்மைகள் வெளிவர பலர் தங்கள் இன்னுயிரை இழக்கின்றார்கள். இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.
2010 வரையிலும் 12க்கும் மேற்பட்ட ஆர்டிஐ ஆர்வலர்கள் தகவல் கேட்டதற்காகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு வெட்கக் கேடான விஷயத்தைப் படியுங்கள். சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் ரேஷன் கார்டு தொடர்பாக கேட்டிருந்த ஒரு கேள்விக்கு PIO எம் மணிமேகலை என்பவர் தகவல் கொடுக்க ஆள் பற்றாக்குறை இருப்பதினாலே, நாள் ஒன்றுக்கு 1950 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி வந்தால் அவர்களுக்கு எப்போது தகவல் கிடைக்கிறதோ அப்போது கொடுப்பதாகவும், அதுவரைக்கும் ஆகும் செலவை திருமணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். என்ன ஒரு அயோக்கியத்தனமான பதில் இது என்று பாருங்கள். தகவல் கேட்டால் கொல்கின்றார்கள். இல்லையென்றால் இப்படி ஒரு அக்கிரமத்தைச் செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செய் நன்றி அற்ற மானிடர்கள் அரசு அலுவலர்களாய் இருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது பெயருக்குத்தான் இருக்கிறது என்கிற மாயையை தமிழக அரசு அலுவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதாவது பரவாயில்லை, தகவல் கேட்டதற்காக உயிரையே வாங்கிக் கொள்கின்றனர் சிலர். இப்படியும் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
நேற்று ஜெயா டிவியில் வெளியான இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய வீடியோவைப் பார்த்து, இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஆற்றாமையால் புழுங்கிக் கொண்டிருந்தேன். மனிதர்களில் இத்தனை அரக்கத்தனம் உடையவர்களும் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்ற போது எத்தனை மதங்களும், கடவுள்களும் வந்தாலும் மனிதர்கள் திருந்தவே போவதில்லை என்ற உண்மை சுட்டது. எதற்கும் ஒரு விலை உண்டு. சுவற்றில் வீசப்படும் பந்து திரும்பவும் எறிந்தவர் மீது விழும் என்பது உண்மையானால் இலங்கையில் ஒரு சிங்களவர் கூட உயிரோடு இருக்க அந்த உண்மை அனுமதிக்காது. அது நடக்கத்தான் போகின்றது. பாராட்டி, சீராட்டி, பொத்திப் பொத்தி வளர்த்த பெண்களை நிர்வாணப்படுத்தி, சேதப்படுத்தி, கற்பழித்து, கை கால்களை வெட்டி, உதைத்து, இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடூரங்களின் உச்சகட்டத்திற்குச் சென்ற இலங்கை சிங்கள ராணுவமும், அதை நடத்திக் காட்டிய கொலைஞர்களுக்கும் “உண்மை” என்ன விலை கொடுத்தும் தண்டனை பெற்றுக் கொடுக்கத்தான் போகின்றது. உலகின் சக்கரவர்த்தி என்று கொக்கரித்த ஹிட்லர் போன இடம் புல் முளைத்துப் போய் விட்டது. இவர்களெல்லாம் இயற்கைக்கு முன்னால் தூசியை விட கேவலமான பிறவிகள்.
இன்று ராஜ்ய சபாவைவிலும், நாடாளுமன்றத்திலும் கூக்குரலிட்டு சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும் எம்பிக்கள் கொத்துக் கொத்தாய் இலங்கையில் இலங்கை ராணுவம் மக்களைக் கொன்றுகொண்டிருக்கும்போது மொத்தமாய் பதவியைத் தூக்கி எறிந்து இந்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து எல்லாம் முடிந்த பிறகு இன்றைக்கு கூச்சல் இடுவது என்பது அரசியல் சுயநலம் என்று எவருக்கும் தெரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பதவி ஐந்து வருடம். ஆனால் உண்மையின் பதவியோ காலம் முடிவுக்கும் இருக்கும். அதுநேரம் பார்த்து அடிக்கும். அரசியல் என்றால் சுய நலத்திலும் கீழானது என்பதை நம் தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டே வருகின்றார்கள். உலகம் எத்தனையோ அரசியல்வாதிகளைக் கண்டு வருகிறது. அரசியல்வாதிகளின் வாழ்க்கையையும் பார்த்து வருகிறது. அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்து வந்த அரசியல்வாதிகளின் கதியையும் பார்த்துக் கொண்டுதான் வருகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம். அது சுய நலமே தன் நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வகை அரசியல்வாதிகளுக்கு எளிதானதாய் அமைந்து விடாது என்பது மட்டுமே உண்மை.
கடவுள் நின்று கொல்வதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் அப்போதே தண்டனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கடவுள். அதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருகின்றோம். அவனவன் வினையின் பலனை விதைத்தவன் தான் அறுக்க வேண்டும். அறுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இந்தியாவில் சர்க்கரை மாஃபியா கும்பலுக்கு துணை போகின்ற மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு, பல சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் இவருக்கு, சர்க்கரை குறைவால் மயக்கம் ஏற்பட்டது என்ற செய்தியை இவ்விடத்தில் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது. சான்று இல்லாத எந்தச் செய்தியும் உண்மையாக இருக்க முடியாது என்று அல்லவா அறிவியல் சொல்கின்றது.
-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
செய்தி உதவி : http://timesofindia.indiatimes.com/city/chennai/RTI-activist-told-to-pay-for-info/articleshow/12257151.cms