குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label mugesh ambani. Show all posts
Showing posts with label mugesh ambani. Show all posts

Wednesday, March 16, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல்

இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் பத்தாயிரம் லட்சம் என்பதோடு கனவுகள் முடிந்து போகின்றன. அதற்கும் மேல் வருமானத்தினை உருவாக்குவது என்பது பற்றிய சிந்தனைகள் குடும்பச் சூழலாலும், செய்யும் தவறுகளாலும் வருவதில்லை. 

சிக்கலாக்கிய வாழ்க்கையில் கோடிகளில் வருமானம் வரும் தொழில் செய்வது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

எனக்குத் தெரிந்த ஒருவரின் தொழில் கொரானாவில் முடங்கிப் போனது. வேறு வழி இன்றி உலக மனிதர்களின் ஒரே கைத்தொழிலான உணவுத்துறையில் இறங்கினார். 

குறைந்த முதலீடு, பெருத்த லாபம் என்ற கணக்கில் மசாலா பிசினஸ் ஆரம்பித்தார். இப்போதெல்லாம் பிரபல மசாலாக் கம்பெனிகளின் இடை விடாத விளம்பரத்தினால் சாம்பாரில் இருந்து அனைத்து உணவுகளும் ஒரே சுவையுடைவையாக இருக்கின்றன. எங்குச் சென்றாலும் சாப்பிட்டாலும் ஒரே சுவை. ஹோட்டல்களிலும் கூட அதே கதை. என்னைப் போன்ற உணவு விரும்பிகளுக்கு மசாலா கம்பெனிகளை கண்டாலே ஆகாது. உண்மை என்னவென்றால் தமிழக மசாலா மார்க்கெட்டின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள். அதில் நாமும் இணைந்து விடலாம் என்ற கற்பனையில் நண்பரும் திட்டமிட்டார். 

வெகு நேர்த்தியாக பாக்கெட் போடப்பட்டு தன் வீட்டினைச் சுற்றி இருந்த கடைகளுக்கு மசாலாக்களை சப்ளை செய்தார். அடுத்த வாரம் சென்றார் அனைத்துச் சரக்குகளும் விற்றுப் போயிருந்தன. ஆச்சரியம். கடைக்காரரும் மொத்த தொகையையும் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்சம் கூடுதல் சரக்கை இறக்கினார். சரக்குப் போட்ட கடைகள் அனைத்திலிருந்த சரக்குகள் விற்றுப் போயின. கனவுகளில் மிதக்க ஆரம்பித்தார்.

அடுத்த வாரமும் இதே கதை. அதற்கடுத்த வாரம் சரக்குகளை கடன் வாங்கி அதிகப்படுத்தினார். பாதி சரக்குகள் விற்கவே இல்லை. அதற்கடுத்த வாரம் எந்த சரக்கும் விற்கவில்லை. மூன்று மாதங்கள் இப்படியே போனது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

தேங்கி போன சரக்கு. வாடிக்கையாளர்கள் இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினார். சரக்குகள் திரும்பின. அதற்கடுத்த மாதம் பல கடைகளில் சரக்குகள் தீர்ந்து போயிருந்தன. அவருக்குள் ஏதோ உள்ளுணர்வில் தவறாகப் படவே ஆராய ஆரம்பித்தார்.

பிரபல மசாலாக் கம்பெனிகளின் உள்குத்து. கடைகளில் நல்ல தரமாக விலை குறைவாக வரக்கூடிய மசாலாக்களை மொத்தமாக வாங்கி வேறு வழியில் அவர்களின் பாக்கெட்டுகளில் இறக்கி விடுகின்றனர். மக்களுக்கு அப்படி ஒரு மசாலா இருப்பதே தெரியாது. இப்படியெல்லாமா செய்வார்கள் என்று அவருக்குத் திகில் பிடித்தது. அசுரத்தனமான பெரும் நிறுவனத்திடம் மோத முடியுமா? முடியாது. இன்றைக்கும் அதைத்தான் செய்கிறார். வருமானமோ ஆயிரங்களில் மட்டும். லட்சம் கோடி என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தமிழகத்தின் பிரபல மசாலா கம்பெனிகளின் வருமானம் வருடம் 1800 கோடிக்கும் மேல் என்கிறது டேட்டா. சாமானியன் தொழிலில் வெற்றி பெற முடியாத வியாபாரத்தினை ஆளும் பிஜேபி அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. 

சாமானியன் வாழலாம் அவனுக்கு அதற்கு மட்டுமே அனுமதி. லோன் கிடைக்கும் லட்சங்களில். வருமானமும் லட்சங்களில் தான். கோடிகள் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கெல்லாம் குஜராத்திகள் உள்ளனர்.

என்றைக்கு இந்தியாவின் சேல்ஸ் மார்க்கெட்டிங்க் தலைவர் பொறுப்புக்கு வந்தாரோ அன்றைக்கே சாமானியன் வாழ்வு திருடப்பட்டு விட்டது. கார்ப்பொரேட்டுக்கான வியாபார உத்திகள் தெளிவானவை. அவர்களுக்கு கிடைக்கும் அரசு நன்மைகள் சாமானியனுக்கு கிடைக்காது. 

வாழ்வதற்கு அனுமதி மட்டுமே கிடைக்கும். சாமானியன் வேலை செய்யலாம். பணம் சம்பாதிக்கலாம். அதுவும் லட்சங்களுக்குள் மட்டுமே. கோடிகள் குஜராத்திகளுக்கு மட்டுமே என்பது இந்தியாவின் விதியாக மாறி விட்டது.

இனிமேல் ஒரு அம்பானியோ அதானியோ உருவாகவே முடியாது. ஏனெனில் அவர்கள் உருவாகி விட்டார்கள். இனி எதற்கு இன்னொரு அம்பானி? இன்னொரு அதானி? வேலைக்கார்கள் மட்டும் தான் வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஃபியூச்சர் நிறுவனத்தின் பிக்பஜார் பிசினஸை அமேசான் சிங்கப்பூரில் விலை பேசி அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸாக 15,000 கோடியைக் கொடுத்தார்கள். அந்த அக்ரிமெண்டில் முதன்மையானது என்ன தெரியுமா? இந்த பிசினஸை எங்கள் நிறுவனம் மறுத்தால் ஒழிய வேறு எவரிடமும் விற்க கூடாது. அதுமட்டுமல்ல ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கவே கூடாது என்ற உப விதிகளும் இருந்தன.

பணம் வந்ததும் ஃபியூச்சர் நிறுவனம் அதை மொத்தமாக முழுங்கி விட்டு ரிலையன்ஸிடம் விலை பேசினர். ரிலையன்ஸ் முகேஷ் 22 ஆயிரம் கோடிக்கு ஆஃபர் கொடுத்தார். உடனே ஃபியூச்சர் நிறுவனம் ஒத்துக் கொண்டது.
 
அமேசான் தடுத்தது. நாங்களும் அதே விலைக்கு வாங்குகிறோம் என்றது. ஆனால் ஆசைப்பட்டது யார்? ரிலையன்ஸ் அல்லவா? இந்தியா யாருக்கு வேலை செய்யுமென்று உங்களுக்குத் தெரியுமே?

ரிலையன்ஸின் தலைமை மார்க்கெட்டிங்க் பணியாளரும், இந்தியாவின் தலைமை சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவிடம் தகவல் சென்றது. சில பல செட்டிங்குகள் நடந்த பின்னர் ஒரு துணைக் கட்டப்பஞ்சாயத்தில் சிங்கப்பூர் விதிகள் இந்தியாவிற்குப் பொருந்தாது என சொல்லி வழக்கினை தள்ளுபடி செய்தது.

உலக வர்த்தக ஒப்பந்தம் பற்றியெல்லாம் துணைக் கட்டப்பஞ்சாயத்துக்கு கவலை இல்லை. அதில் கையெழுத்துப் போட்டது யாராக இருந்தால் என்ன நம்ம எஜமான் ரிலையன்ஸ் என்ற செய்நன்றி மறவாத நிலை கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளுவரின் குறள் இங்குச் சட்டப்பட்டி நிலை நாட்டப்பட்டது.

இதற்கிடையில் ரிலையன்ஸ் ஒரு வேலை செய்தது. இதுதான் அக்மார்க் வேலை. அதான் ஒன்னாம் நம்பர் வேலை.

பிக்பஜார் இந்தியாவெங்கும் பல ஆயிரம் சதுரடிகளை வாடகைக்கு எடுத்து கடைகள் வைத்திருந்தன. இந்தப் பிரச்சினையில் வாடகை கொடுக்க முடியாமல் இருந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் சென்று வாடகை ஒப்பந்தத்தை எங்கள் பெயருக்கு மாற்றுங்கள் என்று கேட்டு மாற்றி விட்டார்கள். பிக்பஜார் இயங்கி வந்த வாடகை கடைகள் இப்போது ரிலையன்ஸ் வசம். வாடகை எவன் தருகின்றானோ அவனுக்கு நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்கிறார்கள் கடை உரிமையாளர்கள். 

எப்படி வேலை? 

அமேசான் கட்டபஞ்சாயத்து வழக்குப் போட்டது. சாமானியனுக்கும், முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே சட்டப்படி தீர்ப்பளிக்கும் கட்டப்பஞ்சாயத்து நிறுவனம் அமேசானிடமும், ஃபியூச்சர் நிறுவனத்திடமும் சமரசம் பேசச் சொல்லி இருக்கிறது. 

கட்டபஞ்சாயத்துச் செய்யும் ஆட்களுக்கு இதற்கெல்லாம் அனுமதி உண்டு.  ஆட்டக்காரி ஊழலே செய்யவில்லை என்று தீர்ப்பளித்த நீதிபதி நல்லவர் என்கிறது கட்டபஞ்சாயத்து நிறுவனம்.

உலகெல்லாம் வர்த்தகம் செய்யும் அமேசானின் ஒரு வருட பிசினஸ் ஒரு டிரில்லியன் டாலர்கள். ரிலையன்ஸின் மொத்த பிசினஸே 200 பில்லியன் டாலர்கள். எப்படி அமேசானுடன் மோதுகின்றார்கள்?

ஒருவருக்கு தைரியம் வருவது எப்படி எனில் ஒன்று பணம் அடுத்து கண்ணசைவில் வேலை செய்யும் வேலைக்காரர்கள். ரிலையன்ஸ் நல்ல வேலைக்காரர்களை வைத்திருக்கிறது. 

அமேசான் தட்ட வேண்டிய இடத்தில் தட்டும் என்றால், வெள்ளை மாளிகையிலிருந்து ஒரே ஒரு போன் வரட்டும் பாருங்கள். 

வடிவேல் பெண் பார்த்த கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் வர்த்தக உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. 

நாம் என்னவென்றால் நரலீலைகள் எழுதிக் கொண்டு, நடிகைகளின் தொப்பூள்களை உற்றுப் பார்த்துக் கொண்டு, சமந்தாவின் இடுப்பாட்டத்தின் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு அந்தக் கிளுகிளுப்பில் கிறங்கிப் போய் கிடக்கிறோம். 


கோடி குஜராத்திகளுக்கு, குட்டிகளின் கிளுகிளுப்பு தமிழர்களுக்கு என்று அல்லவா இருக்கிறது.

எடப்பாடி என்ற துரோகியை நாம் முதல்வராக வைத்திருந்தோம். மெய் வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்த கேடுகெட்ட சுய நலத்தின் பீடைகள் நாம். துரோகிகளால் தமிழ் நாடு எட்டு லட்சம் கோடி கடனாளி ஆகி கிடக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்றைக்கும். 

ஜாதி வந்து விடுகிறது, மதம் வந்து விடுகிறது, உறவுகள் வந்து விடுகிறது. பொறாமை வேறு.  இவற்றை எல்லாம் மீறி சாதிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கின்றி நிற்கிறது தமிழர்கள் இனம்.